Ad

புதன், 23 ஜூன், 2021

வக்ர குருப்பெயர்ச்சி: யாருக்கெல்லாம் சாதகம்? பொதுபலன்கள், எளிய பரிகாரங்கள்!

குருபார்க்கக் கோடி நன்மை என்பது ஜோதிட வாக்கு. குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடப் பார்க்கும் வீடுகளுக்கு நற்பலன்களை வாரிவழங்குவார் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மகர ராசியில் இருந்த குருபகவான் 6.4.2021 அன்று அதிசாரம் பெற்று கும்ப ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கினார். இவ்வாறு குருபகவான் ஓர் ஆண்டுக்கு முன்பாக மற்றொரு ராசிக்குள் முன்னோக்கிச் சென்று பிரவேசிப்பதை அதிசாரம் என்று சொல்வோம். அதிசாரம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இருக்கும் என்பதால் மீண்டும் குருபகவான் தான் இருந்த (மகர) ராசிக்கே வந்துவிடுவார்.

குருபகவான்

இந்தக் காலகட்டத்தில் அவர் பின்னோக்கி சஞ்சரிப்பார் என்பதால் அதை வக்ர சஞ்சாரம் என்று சொல்கிறோம். அப்படி குருபகவான் இந்த ஆண்டு கும்ப ராசியில் இருந்து ஜூன் 21-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரையிலும் வக்ர சஞ்சாரம் செய்கிறார். இந்த வக்ர சஞ்சாரம் மொத்தம் 119 நாள்கள் இருக்கப் போகிறது.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய சந்திரர்களைத் தவிர ஏனைய கிரகங்களுக்கு வக்ரகதி உண்டு. ராகு கேதுக்கள் எப்போதுமே பின்னோக்கிச் செல்வதால், அவர்களுக்கு அதிசாரம் அல்லது வக்ரகதி என்று கூற இயலாது. குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள் அவ்வப்போது அதிசாரம் பெற்று மீண்டும் வக்ரகதி அடைவார்கள்.

இவ்வாறு வக்ர கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் அடுத்த மூன்று மாதங்களுக்கு என்னென்ன பலன்களைக் கொடுக்க இருக்கிறார் என்பது குறித்து ஜோதிடர் ஸ்ரீரங்கம் இரா கார்த்திகேயனிடம் கேட்டோம்.

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

“குருபகவான் என்றால் தனம்தான். அவர் வக்ரகதி அடைந்து நீசம் பெறுவதால் பொருளாதார வீக்கம், பணத்தட்டுப்பாடு, கூடுதல் பொருளாதார சுமை ஆகியன உண்டாகும். ஆடி மாதத்தில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தங்கம், வெள்ளி மற்றும் வீட்டுக் கடன்களின் சுமை அதிகரிக்கும். குடும்ப உறவுகள் இடையே பொருளாதாரத்தால் ஒற்றுமை இன்மை அதிகரிக்கும். நீர் மற்றும் நெருப்பினால் மக்களுக்குத் துயரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பங்குச்சந்தையில் வீழ்ச்சி காணப்படும். ஆனால் யாருக்கெல்லாம் சுய ஜாதகத்தில் குருபகவான் வக்ரம் அடைந்திருக்கிறாரோ அவர்களுக்குப் பொருளாதார ஆதாயம் கிடைக்கும்.

பெரியளவில் லாபம் ஈட்டிய நிறுவனங்கள் எல்லாம் சிறு சிறு வணிகத்தையும் விட்டுவிடக் கூடாது என்ற நிலையில் இருக்கும். ஊதியம் பெறுபவர்களின் குடும்பச் செலவு அதிகரிக்கும். காப்பீடு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீதான புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கும்.

புதிதாகக் கல்வி நிலையங்கள் ஆலயங்கள் கட்டுவதற்கான முயற்சிகள் பலிதமாகும். தடைப்பட்டிருந்த ஆலயப் பணிகளில் இருந்த தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பல வழக்குகளில் திடீரென்று தீர்ப்புகள் வழங்கப்படும். கடுமையான சட்டங்களையும் புதிய அபராத விதிமுறைகளையும் கொண்டு வருவதில் முனைப்பு காணப்படும். பத்திரிக்கைத் துறையினருக்கு அலைச்சல் மிகும். அனைத்துத் துறைகளிலும் முதலீடுகள் குறையும்; வருமானம் சீராகக் காணப்படும். ஆவணி மாதம் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு நல்ல முன்னேற்றமான காலமாக மையும். குடும்பத்திலும் சரி, தொழிலிலும் சரி, பெண்களே அதிக வெற்றியை காண்பார்கள்.

குருபகவான்

பரிகாரம்

இந்த வக்ர சஞ்சாரத்தால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம். மீனம் ஆகிய ராசிகளுக்கு நற்பலன்களும் ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு மிதமான பலன்களும் தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு சமபலன்களும் கிடைக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

இந்த குருப்பெயர்ச்சியில் அனைத்து ராசிக்காரர்களும் மிகுந்த நற்பலன்களைப் பெறுவதற்கு மகான்கள் வழிபாடு செய்வது அவசியம். தானம் கொடுப்பது ஆகச் சிறந்த நற்பலன்களைக் கொண்டுவரும்.

குறிப்பாக வியாழக்கிழமைகளில் குரு, மகான்களின் வழிபாடு, கோ பூஜைகள் செய்வது, அடிப்பிரதட்சணம் செய்வது, வியாழக் கிழமைகளில் விரதம் இருப்பது போன்ற பரிகாரங்களைச் செய்து குருவின் திருவருளைப் பெறலாம். மேலும் ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் திருவக்கரை காளியை மனதில் நினைத்து வணங்கி வழிபாடு செய்தால் அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்” என்றார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/vakra-gurupeyarchi-some-general-predictions-and-remedies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக