Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 20 பரிந்துரைகள்... 2 ஆண்டுகளாக எதுவுமே செய்யாத தமிழக அரசு!

``இத்தகைய வலுவான புயலில் உயிர்ச்சேதம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் மூலம் முதல்வர் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். சென்னையில் சாலையில் நடந்து வருபவர்மீது மரம் விழுந்தது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கத்தான் மக்கள் வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. திருவள்ளூரில் மண் சுவர் இடிந்து விழுந்து சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த சேதாரங்களும் இல்லை. புயலை அறிவுபூர்வமாக கையாள்வதில் நம் முதல்வர் இந்தியாவுக்கே பாடம் கற்றுத்தந்திருக்கிறார்." - நிவர் புயல் குறித்து நேற்று முன்தினம் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இப்படி பெருமையுடன் சொல்லியிருக்கிறார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

விழுப்புரம் எம்.பி, ரவிக்குமார்

உண்மையில் புயலை கையாள்வதில் தமிழகம் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளதா? புயல் வரப்போகிறது என்று அறிவிப்பு வெளியானதற்கு பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே முன்மாதிரியான செயல்பாடாகிவிடுமா? புயல்களை எதிர்கொள்வதற்கு முன்பே எடுக்கப்பட்ட நிலையான நடவடிக்கைகள் என்ன? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யுமான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கஜா புயலின் சேதங்களை ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தமிழக அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்ட எதையும் தமிழக அரசு செய்யவில்லை" என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம், ``கஜா புயல் முடிந்ததும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து 80 பக்க அறிக்கையை தமிழக முதல்வரிடம் கொடுத்தது. அந்த அறிக்கையில் வருங்காலத்தில் புயலை எதிர்கொள்வதற்கான 20 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

* மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தைப்போல மாவட்ட அளவிலும் ஒன்றிய அளவிலும் ஏற்படுத்த வேண்டும்.

* மீட்புப் பணிகளில் உள்ளூர்களில் உள்ள தன்னார்வ இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்த வேண்டும். அந்த தன்னார்வலர்கள் குழுவானது புயலின்போது தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடற்கரையோர பகுதிகளில் பஞ்சாயத்து அளவிலும் மாவட்ட அளவிலும் இந்த தன்னார்வலர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

நிவர் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம்

* புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின் விநியோகம் தடைபடுவதால் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களும் தடைபடுகின்றன. கஜா புயலில் சாய்ந்த மின் கம்பங்களை சரி செய்வதற்கே பல மாதங்கள் ஆகின. எனவே, புயல்பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ள கடற்கரையோர மாவட்டங்களில் நிலத்துக்கு அடியில் கேபிள் பதித்து மின்விநியோகம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

* அதேபோல தொலைத்தொடர்பு கேபிள்களையும் நிலத்துக்கு அடியில் கொண்டு செல்ல வேண்டும்.

* வரத்துக் கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்த வேண்டும். அதற்கு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்படியாக 20 பரிந்துரைகளை வழங்கியிருந்தது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். அந்த அறிக்கை தமிழக முதல்வரிடம் கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அந்த அறிக்கையின்படி இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீர்நிலைகளை தூர்வாரும் பணியை தமிழகம் முழுக்க மேற்கொண்டதாகச் சொன்னார்கள். ஆனால், அதையும் முறையாக முழுமையாகச் செய்யவில்லை. குளங்களை தூர்வாருவதுடன் நின்றுவிடக்கூடாது. இந்தப் பரிந்துரைகளைப் பொறுத்தமட்டில் கடற்கரையோர பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம். ஆனால், இவை எதுவுமே செய்யப்படவில்லை.

நிவர் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம்

கடலூரில் பெய்த மழையில் பாதிகூட சென்னையில் பொழியவில்லை. ஆனால், சென்னையில் பல இடங்களில் தண்ணீர் நிரம்பி வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இதிலிருந்தே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொடுத்த பரிந்துரைகளை இவர்கள் செயல்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. நிவர் புயல் முடிந்துவிட்டது. இந்த வடகிழக்கு பருவமழைக் கலத்திலேயே இன்னும் இரண்டு மூன்று புயல்கள் வரும் என்கிறார்கள். அது இன்னும்கூட வீரியமாக இருக்கலாம். எனவே அடுத்த புயலுக்குள்ளாகவாவது இந்த விஷயங்களை செயல்படுத்தினால் நல்லது. இவற்றோடு கடலோரப் பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித் தர வேண்டும். ஏனெனில், புயலின்போது கடலோரப் பகுதியில் உள்ள குடிசை வீடுகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இது ஒருபுறம் என்றால், நிவர் புயலில் அந்த நடவடிக்கை எடுத்தோம்... இந்த நடவடிக்கை எடுத்தோம் என்கிறார்கள். 25-ம் தேதி, ஒரு முகாமுக்கு 500, 1000 பேர் வீதம் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்த விதமான சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை, மாஸ்க்குகளும் அணியவில்லை. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆர்.டி- பி.சி.ஆர் (RT-PCR) டெஸ்ட் எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் ஆன்டிஜன் டெஸ்ட்டாவது எடுத்திருக்கலாம்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆனால், இது எதையும் அரசு செய்யவில்லை. இதனால் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த விஷயங்களையெல்லாம் உள்ளடக்காமல் நாங்கள் சிறப்பாக நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் போய் பார்வையிட்டது நல்ல விஷயம்தான். அதை நான் குறை செல்லவில்லை. ஆனால், அதுமட்டும் போதுமா... அடிப்படையில் என்ன செய்ய வேண்டுமோ... அதை இந்த அரசு செய்யவில்லை" என்றார்.

இதுதொடர்பாக விளக்கம் பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமாரை தொடர்புகொண்டோம். பலமுறை அழைத்தும் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவருக்கு தொடர்ந்து மீட்டிங் இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/disaster/tn-govt-didnt-take-any-decision-on-ndma-report-that-suggests-ways-to-tackle-cyclones

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக