கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் ஆயுர்வேதிக் ஸ்பா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் கிஷோர் மற்றும் முதல்நிலை காவலர் ஜோதிமணி ஆகியோர் இந்த ஆயுர்வேதிக் ஸ்பாவுக்கு சென்று வாரம் ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த ஸ்பா மீது வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என மிரட்டி பணம் வாங்கியுள்ளனர்.
Also Read: கொரோனா: 'அதிக மருத்துவ கட்டணம்; இலவச சேவைக்கு லஞ்சம்..!’- எச்சரிக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு!
இது குறித்து ஸ்பா உரிமையாளர் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் காவலர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்தும், துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கார் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்குதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுரேஷ் என்பவரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இதனிடையே, சுரேஷை ஜாமீனில் விடுவிக்க ரமேஷ் என்பவரிடம் தலைமை காவலர் வெங்கடாசலம் லஞ்சம் கேட்டுள்ளார். பிறகு ரமேஷ் கொடுத்த பணத்தை, வெங்கடாசலம் காவர் ஆய்வாளர் சுரேஷிடம் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரமும் கண்காணிப்பாளரிடம் புகாராக சென்றது. இதையடுத்து, ஆய்வாளர் சுரேஷ் மற்றும் வெங்கடாசலம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதேபோல சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே சூதாடியவர்கள் மீது வழக்குப் பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன் என்பவரையும் சஸ்பெண்ட் செய்து செல்வநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இதன் மூலம், லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இரண்டு நாள்களில் 5 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/5-police-person-suspend-in-two-days-over-bribe-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக