Ad

சனி, 18 ஜூன், 2022

அதானி குழுமத்தை முன்வைத்து இலங்கையில் தீவிரமாகும் போராட்டம்... பின்னணி என்ன?!

`இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே அரசுதான் முக்கியக் காரணம். எனவே, இந்த அரசு பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையோடு மூன்று மாதங்களுக்கு மேலாகப் போராடிவருகிறார்கள் இலங்கை மக்கள். இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகியிருந்தாலும், அவரது தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார். இதனால், தற்போது வரை இலங்கை மக்கள் கோத்தபய பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையோடு வீதியில் இறங்கிப் போராடிவருகிறார்கள். இந்த நிலையில், அதானி குழுமத்துக்கு எதிராகவும் இலங்கை மக்கள் தற்போது போராடத் தொடங்கியிருக்கிறார்கள்... ஏன்?

இலங்கையில் அதானி குழுமம்!

கடந்த ஆண்டு அக்டோபரில் இலங்கை சென்ற அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவையும் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு இடங்களில் அதானி குழுமம் மின் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, மார்ச் 2022-ல் இது தொடர்பான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டது.

அதானி குழுமத்துக்கு எதிராகப் போராட்டம்

போட்டுடைத்த ஃபெர்டினாண்டோ!

இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற பொதுநிறுவனங்களுக்கானக் குழுக் கூட்டத்தில், `இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்துக்கு எப்படி மின் உற்பத்தி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன' என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இலங்கை மின் வாரிய தலைவர் ஃபெர்டினாண்டோ, ``அதிபர் என்னை அழைத்து, `இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டங்களை அதானிக்கு ஒதுக்குங்கள் என்று அழுத்தம் தருகிறார். எனவே இந்தத் திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒதுக்குங்கள்' என்று சொன்னார். எனவே, அப்படியே செய்து கொள்ளுமாறு நிதி அமைச்சகத்துக்கு நான் கடிதம் எழுதினேன்'' என்றார். இரு நாட்டுத் தலைவர்கள் பேசிக் கொண்டதையும் ஃபெர்டினாண்டோ வெளிப்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையானது.

மறுத்த கோத்தபய... வாபஸ்பெற்ற ஃபெர்டினாண்டோ!

அடுத்த நாளே, இந்தக் கருத்துகள் அனைத்தும் தவறானவை என்று மறுப்புத் தெரிவித்தார் கோத்தபய. அன்றிரவே, `மன அழுத்தத்தில் பொய்யான தகவல்களைக் கூறிவிட்டேன்' என்று கருத்துகளை வாபஸ் பெற்றார் ஃபெர்டினாண்டோ. அடுத்த இரண்டு நாள்களில், `சொந்தப் பிரச்னை காரணமாகப் பதவி விலகுகிறேன்' என்று சொல்லி மின் வாரிய தலைவர் பதவியை ராஜினாமாவும் செய்துவிட்டார் அவர். இந்த விவகாரத்தை இரு நாட்டின் எதிர்க்கட்சிகளும் கையிலெடுத்து அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

டிரெண்டிங்கில் #StopAdani ஹேஷ்டேக்!

இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, இலங்கை மக்கள் அனைவரும் #StopAdani என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அதானி குழுமத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டனர். இதையடுத்து, இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. மேலும், ஜூன் 16-ம் தேதி அன்று, இலங்கைத் தலைநகர் கொழும்பிலுள்ள மெஜஸ்டி பகுதியில் ஒன்றுகூடி, அதானிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

கோத்தபய - அதானி - மோடி

``வெளிநாட்டைச் சேர்ந்த அதானிக்கு ஏன் இலங்கையின் மின் திட்டங்களை டென்டர்கூட விடாமல் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பதால், நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். மேலும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும். இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!'' என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்கள் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்துக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். தற்போது இலங்கையில் அதானி குழுமம் கால்பதிக்க எதிர்ப்புகள் கிளம்பியிருப்பது, அந்தக் குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/why-srilankan-people-protesting-against-adani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக