இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவாரை, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இன்று அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். கடந்த 15 நாள்களில் இது மூன்றாவது சந்திப்பு என்பதாலும் பா.ஜ.க அல்லாத மற்ற கட்சித் தலைவர்கள் நேற்று சரத்பவார் வீட்டில் ஒன்றுகூடியதை அடுத்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பா.ஜ.,வில் இருந்து விலகி, தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, 'ராஷ்ட்ரா மன்ச்' என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு சார்பில், பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகளுக்கு தேசிய அளவில் ஆலோசனை கூட்டத்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டில்லியில் சரத்பவார் தலைமையில், அவரது இல்லத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில், ராஷ்டிரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி ,தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, ஆம் ஆத்மியின், சுஷீல் குப்தா, கவிஙர் ஜாவேத் அக்தர், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, முன்னாள் தூதர் சிங், முன்னாள் நீதிபதி ஏபி ஷா கலந்து கொண்டனர். இந்திய கம்யூ., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பினோய் விஸ்வம், மார்க்சிஸ்ட் சார்பில் நிலோட்பால் பாசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
முதலில், பா.ஜ.கவுக்கு எதிராக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை சரத்பவார் ஒருங்கிணைக்கிறார் என்கிற தகவல்கள் பத்திரிகைகளில் வெளியானது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேனன் அதனை மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸை அழைக்காததால்தான் தி.மு.க கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், அழைப்பு விடுக்கப்பட்டும் காங்கிரஸ் கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம்,
''எங்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிற கூட்டமாக அது இல்லை. அதனால், முதிர்ச்சியில்லாத ஒரு செயல்பாடாகத்தான் நாங்கள் இந்த முன்னெடுப்பைப் பார்க்கிறோம். சரத்பவார் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்திருந்தாலும் யஷ்வந்த் சின்ஹா, குல்கர்னி ஆகிய இருவரும்தான் இந்த முன்னெடுப்பைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்யட்டும் அது தவறில்லை. ஆனால், காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட, சஞ்சய் ஜா போன்றவர்களை அழைத்திருக்கும்போது நாங்கள் எப்படி கலந்துகொள்ள முடியும். அதைவிட இவ்வளவு சீக்கிரமாக நாம் போய் அதில் கமிட் ஆக முடியாது. அதனால்தான் தவிர்த்தோம்'' என்கிறார் அவர்.
தி.மு.க ஏன் கலந்துகொள்ளவில்லை என அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டன் ரவீந்திரனிடம் பேசினோம்,
'' பா.ஜ.கவுக்கு எதிரான அணி சேர்க்கை என்றோ அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்றோ எங்களுக்குச் சொல்லவில்லை. என்ன செய்யலாம் என சில தலைவர்களை அழைத்து கலந்தாலோசிக்கிறோம் என்றுதான் சரத்பவார் சொல்லியிருக்கிறார். தவிர என் வீட்டில் நடந்த கூட்டமே தவிர நான் அழைத்த கூட்டமல்ல எனவும் அவர் தெளிவாக விளக்கியிருக்கிறார். யஷ்வந்த் சின்ஹாதான் ஏற்பாடு செய்திருக்கிறார். பா.ஜ.கவை நாம் கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து சில காலமே ஆகியிருக்கும்போது கவனமாகவே சில செயல்பாடுகளில் இறங்கமுடியும்'' என்கிறார் அவர்.
Also Read: 2024 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை வீழ்த்த பி.கே-வோடு இணைந்து மம்தாவும் சரத் பவாரும் திட்டமா?
சரத்பவார் இல்லத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குறித்து, மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்,
''உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு ஒருங்கிணைப்பு அவசியமான ஒன்று. மூன்றாவது அணியாக இல்லாமல் காங்கிரஸை உள்ளடக்கிய ஒரு அணி நிச்சயமாக உருவாகவேண்டும். அப்படி ஒன்று அமையாவிட்டால், 2024 தேர்தலில் பா.ஜ.கவை வெல்வது கடினம். 2022 உ.பி தேர்தலில், பா.ஜ.க ஜெயித்துவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எளிதாக வென்றுவிடுவார்கள்.
நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க என்ன செய்கிறது என்கிற கேள்வி வரும். இந்தக் கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளாதது ஒன்றும் பிரச்னையல்ல. ஆனால், இப்படியொரு அமைப்பு தேவை. அதற்கு தி.மு.கவின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால், தி.மு.க இந்த விஷயத்தில் பெரியளவில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி முதல்வர்களுக்கு ஸ்டாலின், மம்தா, நவீன் பட்நாயக் ஆகியோர் கடிதம் எழுதுகிறார்கள். ஆனால், அதையே எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கானதாக நாம் பார்க்க முடியாது. பெரிய கட்சிகள் என்பதால் அல்ல, ஆளும் கட்சியாகவும், பா.ஜகவை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் கட்சிகளாகவும் இருப்பதால் தி.மு.க என்ன செய்யும், திரிணமுல் என்ன செய்யும் என்று இந்தியாவே எதிர்பார்க்கிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான், பா.ஜ.கவை வெல்ல முடியும்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/why-did-congress-and-dmk-boycott-the-consultation-meeting-held-at-sarath-bhavar-house
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக