Ad

திங்கள், 13 ஜூலை, 2020

கொரோனா: `தவறான திசை; நிலைமை மேலும் மோசமடையும்!’ - எச்சரிக்கும் WHO

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடியைக் கடந்துவிட்டது. அதேபோல் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

கொரோனா சிகிச்சை

வைரஸ் பரவியுள்ளது முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சில நாடுகள் மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறினாலும் இன்னும் அவை அதிகாரபூர்வமாக மக்கள் நடைமுறைக்கு வரவில்லை. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் அனைத்து நாடுகளிலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவின் மொத்த பாதிப்பில் 10 நாடுகளில் மட்டும் 80% பதிவாகியுள்ளதாகவும் அதில் 50% அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: `கொரோனா பரவல் முடிவு நிலைக்கு அருகில்கூட நெருங்கவில்லை!' - உலக சுகாதார நிறுவனம்

இதே நிலை தொடர்ந்தால் உலகம் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது கடினம் என WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அனைத்து நாடுகளும் கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறினால் உலகம் முழுவதும் புதிய கொரோனா பரவலின் நிலை மிகவும் மோசமடையும்.

WHO - டெட்ரோஸ்

நான் அப்பட்டமாகக் கூறுகிறேன், பல நாடுகள் தவறான திசையில் செல்கின்றன. இன்னமும் மக்களின் எதிரிகளில் வைரஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. அடிப்படைகளை பின்பற்றாவிட்டால் இந்த வைரஸ் ஒரே பாதையில்தான் பயணிக்கும். தொற்று நோய் பரவல் மிகவும் மிகவும் மிகவும் மோசமாகப்போகிறது. எதிர்காலம் நிச்சயமற்று உள்ளது, இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது” எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவையும் பிரேசிலையும் டெட்ரோஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

Also Read: கொரோனா: காற்றில் ஒரு மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்! - ஆய்வில் தகவல்



source https://www.vikatan.com/news/international/this-pandemic-is-going-to-get-worse-and-worse-and-worse-who-said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக