`சட்டப் புத்தகத்தை திருத்திவந்த மத்திய பா.ஜ.க அரசு, இப்போது பாடப் புத்தகத்திலும் கை வைத்திருக்கிறது' என்று சொல்லி அதிரவைக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். கொரோனா ஊரடங்கு கால அறிவிப்புகளில் தொடர்ச்சியாக மத்திய பா.ஜ.க அரசு மீது புகார்கள் எழுந்துவரும் நிலையில், சமீபத்திய சர்ச்சை... `சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறைப்பு விவகாரத்தில், தன் சொந்த விருப்பங்களை நிறைவேற்றி அரசியல் செய்திருக்கிறது பா.ஜ.க அரசு' என்பதுதான்.
`கொரோனா ஊரடங்கு முடிந்து, மிகத் தாமதமாக பள்ளிகள் திறக்கப்படவிருப்பதால், இந்தக் கல்வி ஆண்டில் முழுமையான அளவில் அனைத்துப் பாடங்களையும் மாணவர்களுக்கு சொல்லித்தர முடியாது. எனவே, 30 சதவிகித பாடங்களை குறைத்துக்கொண்டு, மீதம் உள்ள முக்கியமான பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்' என்று மத்திய பா.ஜ.க அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி 9-ம் வகுப்பில் ஆரம்பித்து 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில், 30 சதவிகித பாடத்திட்டங்களைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இதில், குடியுரிமை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி, தேசியம் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
`பா.ஜ.க. தன் சொந்த விருப்பத்தை - சித்தாந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே திட்டமிட்டு பாடத்திட்டங்களைக் குறைத்துள்ளன' என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ம.தி.மு.க., ``மாணவர்களின் நெஞ்சத்திலும், நஞ்சு கலக்கும் வகையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை நீக்கியிருக்கிறது. இந்தியாவில் மக்களாட்சி அபாய கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.
கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சி.பி.எஸ்.சி பாடங்களை குறைக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க அரசு கல்வித்துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளை புகுத்தக்கூடாது" என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``குறிப்பிட்ட சில தலைப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அரசியல் கட்சிகள் கட்டுக் கதைகளை பரப்பிவருகின்றன. ஆனால், உண்மையில் பரவலாக எல்லாத் தலைப்புகளில் உள்ள பலதரப்பு பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. இதுவும்கூட, கல்வியாளர்களது யோசனை மற்றும் பல்வேறு நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
இப்படி சி.பி.எஸ்.சி பாடத்திட்டக் குறைப்பு குறித்து அரசியல் கட்சிகளிடையே எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் இருந்துவருகையில், உண்மையிலேயே இந்த நடவடிக்கை குறித்து கல்வியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், `பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது,
``கொரோனா நோய்த்தொற்று இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும், பள்ளிக்கூடம் எப்போது திறக்கப்படும் என்பதெல்லாம் எதுவும் இன்னும் தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக பள்ளிகளின் பாடவேளை எவ்வளவு நாள் இருக்கும் என்பதையும் நாம் இப்போதே தீர்மானிக்க முடியாது. இப்படியொரு சூழலில், இந்தக் கல்வி ஆண்டே `ஜீரோ' கல்வி ஆண்டுதான்.
ஏனெனில், சாதாரணமாக வரவு செலவு பார்ப்பதுபோன்று நிர்வாக ரீதியிலோ அல்லது சந்தைப் பார்வையிலோ கல்வியை அணுகமுடியாது. கல்வி என்பது சமூகம் சார்ந்தது. இந்த சமூகத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றால், அந்த சிக்கல் என்பது கல்வியிலும் எதிரொலிக்கும்.
உதாரணமாக ஜூலை மாதம் பிறக்கின்ற ஒரு குழந்தை, 5 வருடம் கழித்து ஜூலை மாதத்தில்தான் ஒன்றாம் வகுப்பில் சேரும் வயதுத் தகுதியைப் பெறுகிறது. ஆனால், பள்ளியிலோ ஜூன் மாதத்திலேயே சேர்க்கைப்பணி எல்லாம் முடிவடைந்துவிடுகிறது. எனவே, அடுத்த ஆண்டுவரை கிட்டத்தட்ட 11 மாதங்கள் வரையிலும் அந்தக் குழந்தை பள்ளியில் சேருவதற்காகவே காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்காக அனைவரும் ஜூன் மாதத்தில்தான் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் சட்டம் இயற்றிவிட முடியாது. ஆக, சமூகத்தின் தாக்கம்தான் கல்வியிலும் எதிரொலிக்கும்.
கொரோனா காலகட்டத்தில், குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும்வகையில் பாடச் சுமையைக் குறைக்கப்போகிறோம் என்பது நியாயமானதுதான். அதேசமயம் எந்தப் பாடங்களை எல்லாம் நீக்கியிருக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. 30 சதவிகித பாடங்களை குறைக்கிறோம் என்று அறிவித்த அரசு, எப்போது பள்ளிகள் திறக்கும், பாடவேளைகள் எவ்வளவு என்பதையெல்லாம் இன்னும் சொல்லவே இல்லை.
இந்தளவு பாடங்களைக் குறைப்பதால், மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படும் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், மொழிப்பாடம் என எல்லாவற்றிலுமே அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அம்சங்கள் இருக்கின்றன. இந்த அடிப்படைக் கோட்பாடுகளை நல்ல முறையில் பயிற்றுவிக்க வேண்டியது பள்ளிக் கல்வித் துறையின் கடமை. அதாவது உயர்நிலை, மேல்நிலைக் கல்விகளில் இந்த அடிப்படைக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்றுத்தர வேண்டும்.
உதாரணமாக உயிரியலில், பரிணாம வளர்ச்சியை மாணவர் நன்றாகப் புரிந்துகொண்டால்தான், இன்றைய கொரோனா வைரஸின் பரிணாமத்தையும் மாணவரால் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், கொரோனா வைரஸ், குறுகிய காலத்திலேயே தன்னுடைய வீரியத்தை மாற்றிக்கொண்டே வருகிறது என்கிறார்கள். ஆக, இந்த பரிணாம வளர்ச்சியின் அடிப்படையைப் படித்துப் புரிந்துகொள்ளாமல், எப்படி கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்? எனவே, அறிவியல், கணிதம் போன்ற பாடத்திட்டங்களில், அடிப்படையான விஷயங்களைக் குறைக்கக்கூடாது.
சமூக அறிவியலைப் பொறுத்தவரையில், `இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்' என்பதே கல்வித் திட்டத்தின் நோக்கம். இந்தவகையில் மிக நுட்பமான விழுமியங்கள் என்பது கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பற்றக் கோட்பாடு, கிராமசபை எனும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புகள் ஆகியவைதான்.
கூட்டாட்சி தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல், ஒரு மாணவன் எப்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்துகொள்ள முடியும்? மதச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளாமல், இந்தியாவின் பன்முகத் தன்மையை எப்படி புரிந்துகொள்ள முடியும்? இப்படி மாணவர்களுக்கான சமூக அறிவியல் கற்றலின் ஆணிவேராக இருக்கக்கூடிய பாடங்களையே நீக்கிவிட்டனர். இதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது? இந்தப் பாடங்களையெல்லாம் நான் பள்ளிக்கூடங்களில் படிக்கவில்லையென்றால், வேறு எங்கே சென்று படிக்க முடியும்?
`ஆரம்பக் கல்வியிலேயே இந்தப் பாடங்கள் எல்லாம் இருக்கின்றன. எனவே மேல்நிலைக் கல்விகளில் இது தேவையில்லை' என்று காரணம் சொல்கிறார்கள். இது ஏற்புடைய வாதம் அல்ல. `பாபா ப்ளாக்ஷீப்' பாடலை எல்.கே.ஜி-யில் எல்லோரும்தான் படிக்கிறோம். அந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்று அப்போது யாருக்காவது தெரியுமா? `என்னுடைய உரோமங்கள் என் முதலாளிக்கு, என் இணையருக்கு, என் குழந்தைக்குச் சொந்தம்' என்று அந்த ஆடு சொல்கிறது. கடைசிவரையில், `என் உரோமம் குளிரிலிருந்து என்னைப் பாதுகாப்பதற்கானது' என்ற உண்மையை மட்டும் அந்த ஆடு சொல்லவே இல்லை.
ஆக, இந்த உண்மையை எல்.கே.ஜி மாணவனால் புரிந்துகொள்ள முடியாது. அவனே வளர்ந்து உயர்நிலைக் கல்விக்கு வரும்போதுதான் பாடங்களைப் பகுத்தறிந்து உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும். வெறுமனே பாடத் தலைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு, `இது ஏற்கெனவே படித்த பாடம்' என்று முடிவு செய்யக்கூடாது. ஏனெனில், தலைப்புகள்தான் ஒன்றாக இருக்குமே தவிர, அதன் உள்ளடக்கம் என்பது ஒவ்வொரு கல்வி நிலைக்கும் ஏற்றவாறு மாறுபட்டதாகவே இருக்கும். எனவே, திரும்பவும் 10-ம் வகுப்பில் அதே பாடங்களைப் படிக்கும்போது, மாணவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். 12-ம் வகுப்பில் படிக்கும்போது பாடம் குறித்து மாணவனே கேள்வி எழுப்பவும் முடியும்.
கூட்டாட்சியையும் மதச்சார்பின்மையையும் மேல்நிலைக் கல்வியில் மட்டுமல்லாது, சட்டக் கல்லூரி, வரலாற்று பட்டப்படிப்புகளிலும் ஒரு மாணவன் படிக்க வேண்டியிருக்கிறது. உண்மை இப்படியிருக்கும்போது, ஆரம்பக் கல்வியிலேயே படித்துவிட்டார்கள் என்று சொல்லி, இந்தப் பாடங்களை நீக்குவதென்பது, கல்வியின் நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது.
வரலாற்று ரீதியிலான பாடங்கள் மட்டுமல்லாது சமகால நிகழ்வுகள் குறித்த பாடங்களான பொதுத்துறை வளர்ச்சியின் பங்களிப்புகள், திட்டக்குழு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்டவைகளும்கூட நீக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளை எல்லாம் படித்தறியாமலேயே இன்றைய இந்தியாவைப் பற்றி நம் குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியுமா? இந்தியாவைப் பற்றிய உண்மையான புரிதல் நம் குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது என்பதுதான் இந்தக் கல்வி முறையின் நோக்கமா?'' என்கிறார் அவர்.
`கொரோனா ஊரடங்கினால், பாடவேளைகள் குறைந்து போகின்றன; தொடர்ச்சியாக பாடங்களும் குறைக்கப்படுகின்றன' என்று மத்திய அரசு முன்வைக்கும் வாதங்கள் ஏற்புடையவை. ஆனால், `குடியுரிமை, தேசியம் பற்றிய பாடங்கள் குழந்தைகளுக்குத் தேவையில்லாதது' என்ற கருத்தோட்டத்தோடு பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பதுதான் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. `குறிப்பிட்ட இந்தப் பாடங்களை மட்டும் நீக்கிவிடுவது' என்ற கருத்தோட்டம் எங்கிருந்து வந்தது என்பதுதான் கல்வியாளர்களின் கேள்வியாகவும் இருக்கிறது." என்றார்.
Also Read: சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம்: நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள், சிலப்பதிகாரம் பகுதிகள்!
இந்தநிலையில், `சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் குறைப்பு விவகாரத்தில், தன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றி அரசியல் செய்திருக்கிறதா மத்திய பா.ஜ.க அரசு...' என்ற கேள்வியை பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம்...
``கொரோனா நோய்த்தொற்றுக் காலமான இந்தநேரத்தில், குழந்தைகளுக்கான பாடச்சுமையைக் குறைக்கவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது; இதுவும் தற்காலிகமானதுதான். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு என 4 வகுப்புகளுக்கான பாடங்களில் மட்டுமே 30 சதவிகித பாடங்களைக் குறைத்திருக்கிறார்கள். இதில் எந்தப் பாடத்தை நீக்குவது, எதைத் தொடருவது என்பதையெல்லாம் முடிவு செய்யவேண்டியது அந்த சிலபஸை முடிவுசெய்யக்கூடிய கல்வியாளர் குழுவின் வேலை.
இதில், கூட்டாட்சி, மதச்சார்பின்மை குறித்தப் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டன என்று சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல... நவீன இந்தியாவின் வளர்ச்சி, பண மதிப்பிழப்பு, தேசியவாதம் என இன்னும் பல்வேறு பாடங்களும்தான் நீக்கப்பட்டுள்ளன. ஆக, குழந்தைகளுக்கு எது தேவையோ அந்தப் பாடங்களை மட்டும் தக்கவைத்துக்கொள்வதென கல்வியாளர் குழு முடிவு செய்திருக்கலாம். நீக்கப்பட்ட பாடங்கள் என்பது ஏற்கெனவே அந்தக் குழந்தை படித்ததாக இருக்கலாம்... அல்லது இனி அடுத்தடுத்த வகுப்புகளில் படிக்கப்போவதாக இருக்கலாம். எனவே, பாடத்திட்டத்தில் எதை வைக்கவேண்டும், எதை எடுக்கவேண்டும் என்பதை கல்வியாளர்கள்தான் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த முடிவுகள் எல்லாமே ஊரடங்கு காலகட்டத்துக்காக எடுக்கப்பட்ட தற்காலிக முடிவுகள்; இந்த ஒரு வருடத்துக்கானது மட்டுமேயானதுதான். மற்றபடி தொடர்ச்சியாக குழந்தைகள் படித்துக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள் என்ற கல்வியாளர்களின் கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்!'' என்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/education/prince-gajendra-babu-speaks-about-govts-decision-on-reduction-of-cbse-syllabus-by-30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக