பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
"Silence is the girls loudest cry" எனும் வரியைப் படிக்கும்போதே அவர்களின் வலியை உணர முடிகிறது.
"பெண்களின் அழுகை பலவீனமாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது கோபத்தின் வெளிப்பாடு. 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்' என்பது வள்ளுவர் வாக்கு. "ஆண்களை போல் கோபப்பட்டு வன்முறையில் இறங்காமல் ஆற்றாமையில் அழுகிறாள் பெண்" என்பார் ஞாநி.
பள்ளி தோழி ஒருவர் அடிக்கடி விளையாட்டாக "ச்சே ஒரு ஆணாய் பிறந்திருக்கலாம்" என்று எப்போதும் சொல்லுவார். அன்று ஏதோ ஒரு விவாதத்தில் மனஅழுத்தத்துடன் பேசும்போது கண்ணீருடன் இதே வார்த்தையை உதிர்த்தார். கேட்டவுடன் சங்கடமாய்தான் இருந்தது. ஒரு சில பெண்கள் தொடர்ந்து அவமானப்படும்போது மன அழுத்தத்தில் சொல்வதுதான் இது. அவர்களின் ஆழ்மனதில் ஆறாத ரணமாய் இச்சொற்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவ்வாறு தமிழ் சிறுகதைகளில் பெண்களின் அக உலகத்தை படம் பிடித்துக்காட்டிய சில கதைகளைப் பற்றி பார்ப்போம்.
விடியுமா- கு.பா.ரா
11-ம் வகுப்பில் படித்த இக்கதை இன்னும் பசுமரத்தாணிபோல் நினைவில் இருக்கிறது. "கணவனை பிரிந்து கும்பகோணத்தில் வாழும் மனைவிக்கு ஒருநாள் கணவன் இறந்துவிட்டார் என்று தந்தி வருகிறது. சந்தேகம், மனபாரத்தில் அல்லல்பட்டு இரவு ரயிலேறி சென்னை செல்கிறார். வழிநெடுகிலும் கணவனால் அடைந்த துன்பத்தை நினைத்து நினைத்து அழுகிறாள். விடிவதற்கு முன் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சையில் போய்ப் பார்க்கிறார்.
தந்தி உண்மையா இல்லையா எனும் கேள்வியோடு மருத்துவர் சொன்னதும் கணவர் இறந்தது உறுதியாகிறது. இத்துடன் கதை முடிந்தாலும் இறுதியில், "இப்போதுதான் விடிந்தது" என முடித்திருப்பார். அதாவது, கணவனிடம் பட்ட வேதனைக்கும் கஷ்டத்திற்கும் ஒரு பெண்ணாக இப்போதுதான் விடிவு காலம் வந்தது என்று. "நம் தாய்மார்களின் பெருமையெல்லாம் நம்மைப் பெற்று வளர்த்ததில் இல்லை. நம் தந்தைமார்களைப் பொறுத்துக்கொண்டு வாழ்ந்ததில்தான் இருக்கிறது" எனும் மகுடேசுவரனின் வரி நினைவுக்கு வருகிறது.
மாமியார் வாக்கு -கிருஷ்ணன் நம்பி
சீன-இந்தியப் போர் போல என்றும் முடியாதது மாமியார் - மருமகள் போர். நானெல்லாம் மாமியார் ஆனால் எங்க மாமியாராட்டம் இருக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் நூறாண்டுகளாய் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், சண்டைதான் முடிவதில்லை. இனி கதைக்கு வருவோம். "மாமியார் மீனாட்சிக்கு மருமகள் ருக்மணிதான் எல்லாமே. வீட்டுவேலை, மாட்டுத் தொழுவம், பால் கறப்பது என ஓயாத வேலை. மாமியாரை நேர் நின்று பேசியதில்லை, அதிக பயம். சுதந்திரத்திற்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது.
பூனை சின்னத்துக்கும் கிளி சின்னத்துக்கும் அவ்வூரில் போட்டி. மாமியாரும் மகனும் பூனைக்கு ஓட்டுப் போட்டு வந்துவிட்டனர். அடுத்து மருமகள் ஓட்டுப் போடச் செல்கிறாள். மனதில் கிளிக்கு ஓட்டுப்போட நினைக்கிறாள். ஓட்டுச்சாவடியினில் நுழையும்போது அவளையறியாமல் மாமியார் முகம் நினைவுக்கு வர கை தானாக பூனைக்கு ஓட்டு போட்டுவிட்டது. ஆ! எனது வாக்கு பூனைக்கு விழுந்துவிட்டதாய் நினைத்து இறுக்கத்தில் வெளியேறுகிறாள். யாருக்கு ஓட்டுப்போட்டேனு கேட்கும்போது மாமியார்க்கு என்று கூறி துக்கத்துடன் வீட்டை நோக்கி செல்கிறாள். மாமியாரிடம் இருக்கும் பயம் இன்றும் சில பெண்களுக்கு இருக்கிறது. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒரு அச்சவுணர்வு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
பாலம்மாள் கதை - கு.அழகிரிசாமி
"ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்துகொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி' என்பார் நா.முத்துக்குமார். 80-களில் நடுத்தர குடும்பத்தில் அவசரத்துக்கு உள்ள ஒரே முதலீடு மனைவியின் கம்மல்தான். அடகு போவதும் திரும்புவதும் அடிக்கடி நடைபெறும். பாலம்மாவின் கதையும் அப்படித்தான்.
"பாலம்மா, தங்கம்மா என இரு சகோதரியும் தம்பி செல்லத்துரை மற்றும் தாயார் என ஒரு சிறிய குடும்பம். கூலி வேலைசெய்து பிழைக்கும்போது பாலம்மாவிற்கு விவசாயக் கூலிக்கும் தங்கம்மா பண்ணையாருக்கும் வாக்கப்படுகின்றனர். ஒருமுறை தங்கை அக்காவுக்கு புஷ்பராக் கம்மல் போட்டு அனுப்புவாள். பஞ்சத்தில் பாலம்மா கம்மலை அடகுவைப்பாள். ஒவ்வொரு முறை மீட்டினாலும் அடிக்கடி கஷ்டத்திற்கு அடகுக்கு போகும். இப்படியே பாலம்மாவுக்கு 60 வயது ஆகிவிடும். கடைசியாய் பட்டாளத்தில் இருக்கும் மகன் வாங்கிக்கொடுத்த வெள்ளைக் கம்மலை ஆசையாய் அணிவாள்.
ஆனால், வயதானதால் பொருந்தாமல் விகாரமாய் இருந்தது. ஊரார் கேலி கிண்டலுக்கு பயந்து கழட்டி கண்ணீருடன் வைத்துவிடுவாள். பாவம் அம்மா.. ஒரு வருஷம்கூட தொடர்ந்து கம்மல் அணியவில்லையே என மகன் சொல்வதாய் கதை முடியும். கம்மல் என்பது அக்காலத்தில் கௌரவத்தின் அடையாளம். இன்று கவரிங் வந்து பல பெண்களுக்கு இரவல் இன்பம் கொடுப்பது ஓரளவு தீர்வாகிறது.
செல்லம்மாள் - புதுமைப்பித்தன்
இப்போதும் ஒரு குடும்பத்தில் பெண் நோய்வாய்ப்பட்டால் முதலில் கவலைகொள்வது தன்னால் குடும்பத்திற்கு பணச்சுமை ஏற்படுமே என்றுதான். இறுதிவரை கைவைத்தியத்திலேயே உடலை சரிசெய்யப் பார்ப்பார்கள். அப்படி ஒரு நோய்வாய்ப்பட்ட மனைவியின் கதைதான் செல்லம்மாள்.
"செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது. நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது, பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்” எனக் கதை ஆரம்பிக்கும்.
அதாவது தொலைதூர பட்டணத்தில் இறக்கிறாள். நோயுடன் போராடும் பெண்ணின் மனநிலையும், சாவதற்கு முதல்நாள் வரை தன்னால் முடிந்ததை கணவருக்கு சமைத்துக் கொடுப்பதுமாய் இருக்கிறாள். கணவனும் அவளுக்கு உற்றதுணையாய் இருக்கிறான். ஊரைவிட்டு வந்து நோயுடன் போராடி இறக்கும் பெண்ணுக்கும் அவள் கணவனுக்குமான உறவை அருமையாக வடித்திருப்பார்.
இரண்டாவது ஷிப்ட்- கந்தர்வன்
இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் வேப்பமரத்துப் பறவை சத்தத்துடன் விடிகிறது. அப்பெண் வீட்டின் வெளியே இருக்கும் பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டுபோய் காபி போட்டு குழந்தைகளை பல்துலக்கி குளிப்பாட்டி, பாத்திரம் தேய்த்து, கணவர் காபி குடித்துக்கொண்டே பேப்பர் படிப்பதை பெருமூச்சுடன் பார்க்கும்போது அவர் நண்பர் வருவார். அவருக்கு காபி கொடுத்து குளிக்கும்முன் சில துணிகளை துவைத்தும் போடுகிறாள்.
இரக்கமில்லாதவைகளில் கடிகாரம் முதன்மையானது எனக்கூறி இடிபாடுகளுக்கிடையில் பேருந்தில் ஏறி அலுவலகம் செல்கிறாள். "அடிபடாமலும் சாகாமலும் சாலையின் அடுத்த பக்கம் போவது தினமும் அதிசயம் எனக்கூறி இரு நிமிடத்தில் ஓடிப்போய் கையெழுத்திட்டு அமர்ந்தவுடன் மேஜை நிறைய ஃபைல்கள்.."இரண்டாவது ஷிஃப்ட்" ஆரம்பம் எனக் கதை முடியும்.
பணிக்குச் செல்லும் பெண்களின் நுட்பமான துன்பியலை கதை முழுக்க விறுவிறுப்பாய் சொல்லியிருப்பார்.
"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுகிழமை பெண்களுக்கு இல்லை" எனும் கந்தர்வனின் கவிதையும் இக்கதையின் சாயலைக் கொண்டிருக்கும்.
சின்னுமுதல் சின்னுவரை - வண்ணதாசன்
சின்னுவின் கணவன் கண்ணன் கடன் தொல்லையில் இறக்கிறார். அவளிடம் துக்கம் விசாரிக்க கணவன் மனைவியாய் சென்று சின்னுவை விசாரிக்கின்றனர். சின்னு தனது செயல்களால், மன இயல்பால் அழகியாக உயர்ந்து நிற்கிறவள். இயல்பில் அவளிடம் அன்பு உயர்ந்து நிரம்பியிருக்கிறது. சின்னுவைக் காணச் செல்லும்போது அவள் காட்டும் அக்கறையும் பேச்சும் கண்முன்னே அறிமுகமாகிறது. சின்னுவின் சிரிப்பு நிலா வெளிச்சம் போல.. தானும் அழகாகி, தான் விழுமிடத்தையும் மேலும் அழகாக்கிக் கொள்ளக் கூடியது. அப்படிப்பட்டவளுக்கு இப்படித் துயர சம்பவம். கடனாளியாகும் ஆண்களின் தவறுகள் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அது அவர்கள் குடும்பத்தின் இயல்பை உருமாற்றிவிடுகிறது. குடும்ப கவலைகளைத் தனதாக்கி வாழ்கிறாள். அவளது சந்தோஷம் புழுதியில் விழுந்துகிடக்கும் கம்மலைப் போல மங்கி அடையாளமற்றுப் போய்விடுகிறது எனப் படிக்கும்போதே நம்மை நெகிழவைக்கும்.
எதிர்பார்ப்பு
பெண்கள் தம் கஷ்டத்தைத் கூறுவது தீர்வுக்காக அல்ல.. அடுத்த கஷ்டம் வரும் முன் தன் மனக்குமுறலை கூறி தற்போதைய சோகத்தை குறைத்துக்கொள்ளவே.
"வளையல்களிலும் வண்ணசேலைகளிலும் தேடுகிறாள் பெண் மறக்க நினைக்கும், தன் வலிக்கான காரணிகளை" எனும் சுகிர்தராணியின் கவிதையில் பெண்ணின் அகஉலகை இயல்பாய் சொல்கிறது. தீர்வு சொல்லாவிட்டாலும் அமைதியாய் அக்கறையாய் என் பிரச்னைகளை கேள் என்பதே ஒவ்வொரு ஆணிடமும் பெண் எதிர்ப்பார்ப்பதாகும்.
பேராசிரியர் ச.மாடசாமி நாட்டுப்புற ஆய்வாளர் சொன்னதாக பின்வரும் வரிகளை எழுதியிருப்பார்..
"சந்தோசமான ஒரு பெண், தெய்வத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அழுத தெய்வங்களும், அவமானப்படுத்தப்பட்ட தெய்வங்களும் கண்ணில்படுது என்றாராம். அதற்கு மற்றொருவர், தெய்வங்கள் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கும். தெய்வங்களை பின்னால் தேடலாம். அவமானப்படுத்தப்படாத பெண்களை முதலில் தேடுங்கள் என்றாராம்."
நிதர்சனமான வரிகள்!
- மணிகண்டபிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/literature-which-reflects-women-innermost-emotions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக