Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம்: நீக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள், சிலப்பதிகாரம் பகுதிகள்!

சி.பி.எஸ்.இ குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி-யின் எல்லைப் போராட்ட வரலாறு ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கின் காரணமாகக் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன் லைன் வழியாக வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக வரும் ஜூன் 13-ம் தேதி (இன்று) முதல் வகுப்புகள் நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ

இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால் இந்தக் கல்வியாண்டில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதற்காக, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில், 9 - 12 வகுப்புகளுக்கு 30 சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 7-ம் தேதி அறிவித்திருந்தது.

Also Read: சி.பி.எஸ்.இ, நீட், ஜே.இ.இ தேர்வுகளின் நிலை: மத்திய அரசின் முடிவு என்ன?

கடந்த எட்டாம் தேதி நீக்கப்பட்ட பாடங்களை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டது. அதில் பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில், ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்ற பாடப்பிரிவுகளும், 11-ம் வகுப்பில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு அகில இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. பா.ஜ.க தங்கள் கொள்கைகளை முன்னிறுத்த இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பெரியார்

மேற்கண்ட விமர்சனங்கள் குறித்து, ``பாடத்திட்டத்தை 30 சதவிகிதம் குறைத்து, மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். பல்வேறு நிபுணர்களின் ஆலோசனை மற்றும் சிபாரிசுகளின்படியும், கல்வியாளர்களின் யோசனைகளின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாடங்கள் நீக்க நடவடிக்கை, கொரோனா காரணமாக, இந்த ஒரு தடவைக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. கல்வி என்பது நமது பிள்ளைகளுக்கு ஆற்றும் புனிதமான கடமை. அதில், அரசியலை கலக்காதீர்கள்'' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான ஒன்பதாவது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், மொத்தமுள்ள 9 சாப்டர்களில் 7 - 9 வரை மூன்று சாப்டர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார் சிந்தனைகள், மா.பொ.சியின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி, மங்கைகையராய்ப் பிறப்பதற்கே எனும் தலைப்பில் தமிழகப் பெண்களின் சிறப்புகள். சிலப்பதிகாரம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

''அறிவியல் தொழில்நுட்பம் என்கிற தலைப்பில் தமிழ் பாடத்துக்கு சம்பந்தமில்லாத சாப்டர்கள் எல்லாம் இருக்கும்போது, மிக முக்கியமான சாப்டர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன'' என்பதே தமிழ் ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/education/cbse-new-curriculum-periyar-thoughts-history-of-border-struggle-removed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக