`உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது...' என்ற ஆணவ வார்த்தைகளில் ஆரம்பமாகிறது, சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை சம்பவத்துக்குப் பின்பான அரசியல்கள். சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிற முதல் தகவல் அறிக்கை, ஆசனவாய் வழியே ரத்தம் கொட்டும் அளவுக்கு கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டவர்களுக்குக்கூட `ஆரோக்கியமாக இருக்கின்றனர்' என்று அத்தாட்சி வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ், இவற்றையெல்லாம் கண்டறியாமலேயே, பாதிக்கப்பட்டவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அளித்த உத்தரவு, கண்களை மூடிக்கொண்டு செய்யப்பட்ட சிறைப் பரிசோதனைகள்... என இவ்வழக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் கொடூர உண்மைகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த விசாரணைகளில்தான் தெரியவரும்.
அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாயிட் படுகொலை, உலகையே உலுக்கியதென்றால், சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை விவகாரமோ உள்ளூர் அரசியலிலேயே இன்னமும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. மரணமடைந்தவர்களின் சாதி, மதத்தை முன்வைத்து அரங்கேறிவரும் அரசியல் அசிங்கங்கள் நடந்துமுடிந்த கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது. அதனால்தான், நடத்தி முடிக்கப்பட்ட கொடூரம் உலகத்துக்கே அம்பலமாகிவிட்ட உண்மைகூடத் தெரியாமல், விசாரணை செய்ய வந்த நீதிபதிக்கு எதிராகவே `உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது...' என்று காக்கிச்சட்டையைப் பேசவைத்திருக்கிறது.
இதற்கிடையே, தமிழக அரசியல் கட்சிகள் மட்டும் சும்மாவா... அவர்களும் தங்கள் பங்குக்கு `இழவு வீட்டில் கடன் கேட்ட கதை'யாக அரசியல் கணக்கு போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் தன் பங்குக்கு, `சாத்தான்குளம் சம்பவம் ஒரு சின்ன இஷ்யூ...' என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார். இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு `பெரிய இஷ்யூ'வாக்கி வருகின்றன எதிர்க்கட்சிகள்.
கணவர் ஜெயராஜையும் மகன் பென்னிக்ஸையும் காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு ஒருசேர பலிகொடுத்துவிட்ட சோகத்திலிருந்து மீளமுடியாமல் தவித்துக்கிடக்கிறார் செல்வராணி. இந்நிலையில், ஒரு பெண்ணாக அவருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுந்துயரம் `சின்ன இஷ்யூ'வா? என்றக் கேள்வியைத் தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த புதிய பெண் நிர்வாகிகளிடமே கேட்டோம்...
மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி பத்மினியிடம் கேட்டபோது...
``கட்சிப் பொறுப்புக்கு நான் புதிதாக வந்திருக்கிறேன். எனவே, இப்போதுதான் நான் தவழ்கிற குழந்தை. ஓர் இந்தியப் பிரஜையாக, சாத்தான்குளம் சம்பவம் என் மனதை ரொம்பவே பாதித்த விஷயம். இதுகுறித்த என் கருத்துகளையும் ஏற்கெனவே நான் தெரிவித்திருக்கிறேன். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி, ``நாங்கள் இதைச் `சின்ன இஷ்யூ'வாகப் பார்த்திருந்தால், எங்கள் கட்சியின் சார்பில், எப்படி கண்டனம் தெரிவித்திருப்போம்? சி.பி.சி.ஐ.டி விசாரணையிலிருந்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாறியிருக்கிறது. எனவே, வழக்கு விசாரணையில் அடுத்தடுத்து என்ன நடந்திருக்கிறது என்ற துப்பு துலக்குதல்களைப் பார்த்துவிட்டுத்தான் நாம் கருத்து சொல்ல முடியும். மற்றபடி நாமே ஒரு கருத்தைச் சொல்லி, தேவையில்லாமல் பிரச்னைகளை வளர்த்துவிடுவது நல்லதல்ல என்பதுதான் என் கருத்து.
நடந்துமுடிந்த விஷயம் மிகமிகத் தவறானது. எனவேதான், பா.ஜ.க மாநிலத் தலைவரில் ஆரம்பித்து அனைவருமே கண்டனம் தெரிவித்திருக்கிறோம். வழக்கு விசாரணை இப்போது தீவிரமாக நடந்துவருகிறது. எனவே, இந்த விஷயம் குறித்துப் பேசுபவர்கள் இந்த விசாரணைகளைப் பார்த்துவிட்டுத்தான் பேச வேண்டுமே தவிர, சும்மா சும்மா யார் யாரோ, `நேற்று நான் போய் ஸ்டேஷனில் பேசினேன், பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வீட்டுக்கே போய் பார்த்தேன், நாளை அவர்களோடு சேர்ந்து சாப்பாடு சாப்பிடுவேன்' என்றெல்லாம் பேசிவருவது சரியான விஷயம் கிடையாது. இதைத்தான் எங்கள் தலைவரும், `அரசியல் செய்யாதீர்கள்' என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாக, எந்தவொரு விஷயத்திலுமே முழுமையான விசாரணை நடந்து முடிந்த பிறகு, கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும். விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக்கொண்டிருந்தால், அது பிரச்னையைத் தவறான பாதைக்கு திசை திருப்பிவிடும் ஆபத்து இருக்கிறது. மற்றபடி பா.ஜ.க இந்தச் சம்பவத்தை சின்ன இஷ்யூவாகப் பார்க்கவில்லை. அதேசமயம், இந்தச் சம்பவத்தை சாக்காக வைத்துகொண்டு அரசியல் கட்சிகள், பாலிடிக்ஸ் விளையாட்டு விளையாடக் கூடாது என்ற கருத்தில் ஆணித்தரமாக இருக்கிறோம்.
ஏற்கெனவே, கொரோனா, சீனா எல்லைப் பிரச்னை போன்ற சென்ஸிட்டிவான விஷயங்களை வைத்துக்கொண்டு கட்சிகள் அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. அதேபோன்றதொரு சென்ஸிட்டிவான இஷ்யூதான் சாத்தான்குளம் சம்பவமும். எனவே, இதையும் அரசியல் ஆக்காதீர்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை'' என்றார்.
Also Read: சாத்தான்குளம்: சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு! - விசாரணையில் இனி என்ன நடக்கும்?
மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா, ``நடந்து முடிந்த சம்பவம் மிகவும் சோகமானது. குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, இதை சின்ன இஷ்யூவாகப் பார்க்க முடியாது. ஆனால், இதன் பின்னணியில் என்னென்ன நடந்திருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துதான் இதுகுறித்து நான் முழுமையாகக் கருத்து சொல்ல முடியும்'' என்றார்.
கலை, கலாசார பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம், ``இது ஒரு சின்ன இஷ்யூ என்று ஏன் அவர் சொன்னார் என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்; நான் இதற்குப் பதில் சொல்ல முடியாது. மற்றபடி கணவரையும் மகனையும் இழந்து செல்வராணி அம்மாள் குடும்பம் தனித்து நிற்கிறது என்று யாரும் கவலைப்பட வேண்டாம்; அவர்கள் குடும்பத்துக்காக குரல்கொடுக்க, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
மேலும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்போது அடுத்தகட்டமாக வழக்கு சி.பி.ஐ-க்கும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில், நாம் அனைவருமே செல்வராணி அம்மாள் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணலாம். அதில் தப்பே கிடையாது. ஆனால், காவல்துறை விசாரணைகள் குறித்து சந்தேகம் எழுப்புவதோ, இவர்கள் கைது செய்யப்படவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்றெல்லாம் வழக்கின் போக்கை திசைதிருப்புவதோ நல்லதல்ல என்பது என் கருத்து. ஆனால், சிலர் இதுபோன்ற தவறான கருத்துகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது நல்லதல்ல.
அதேபோல், இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகிற எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், `கடந்த 2 வருடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில், இதேபோன்று காவல்நிலைய விசாரணையின்போது பல மரணங்கள் நடந்துள்ளன' என்று கூறிவருகிறார்கள். அப்படி நடந்திருப்பது உண்மையென்றால் அவர்கள் ஏன் இவ்வளவு தாமதமாக இந்த விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடியிருந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமே நிகழ்ந்திருக்காதே...'' என்றார்.
அரசியல் வேற்றுமை மறந்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது... இல்லையென்றால், கட்டுரையின் முதல் வரி உண்மையாகிவிடக்கூடும் என்ற ஆபத்தை நம்மூர் அரசியல்வாதிகள் எப்போது புரிந்துகொள்வார்களோ?!
source https://www.vikatan.com/government-and-politics/politics/gayathri-raghuram-namitha-and-madhuvanthi-comment-on-sathankulam-police-brutality
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக