Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2020

வேலூர்: `மகனால் வீதிக்கு வந்த அம்பிகா பாட்டி!’ - வீடு கட்டிக்கொடுத்த ஐ.டி இளைஞர்

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த தினேஷ் சரவணன் (30) என்ற இளைஞர், சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். விடுமுறை நாள்களில் வேலூருக்கு வந்து பல்வேறு சமூகப் பணியில் களைப்பாறாமல் ஈடுபடுகிறார். ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 3,000 ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொடுத்து உதவியிருக்கிறார். இந்த நிலையில், வேலூர் கன்சால்பேட்டை இந்திரா நகரில் கணவரை இழந்து ஆதரவின்றி தவித்த அம்பிகா பாட்டிக்கும் உதவிக்கரம் நீட்டி அரவணைத்திருக்கிறார் தினேஷ் சரவணன்.

குடிசை அமைக்கும் பணி

அம்பிகா பாட்டியின் கணவர் இறந்துவிட்டார். ஒரே மகனும் மதுவுக்கு அடிமையாகி அம்பிகா பாட்டியைத் தவிக்கவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார். ஓட்டைகள் நிறைந்த மோசமான சிறிய ஓலைக் குடிசையில் வசித்துவந்த அம்பிகா பாட்டி, வீட்டு வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவி வருகிறார். வெயில் அடித்தால் அந்தக் குடிசையில் தங்க முடியாது. இப்போது, மழைக் காலம் வேறு. குடிசை முழுவதுமாக மோசமடைந்தது. இதனால், அக்கம் பக்கம் வீட்டு திண்ணையில்தான் இரவில் படுத்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கொரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்திருப்பதால், வீட்டு திண்ணையில் படுக்க யாரும் அவரை அனுமதிக்கவில்லை. வயதானவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றுகிறது என்பதால் வீட்டு வேலைக்கும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இதனால், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அதே பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் தங்கி பசிக் கொடுமையால் வாடிவந்தார் அம்பிகா பாட்டி. இதையறிந்த தினேஷ் சரவணன் பழைய கூரையை அகற்றிவிட்டு ரூ.23,000 செலவில் தரமான மூங்கில்களால் பின்னப்பட்ட புதிய கூரை வீட்டைக் கட்டி கொடுத்திருக்கிறார்.

பழைய வீடு - புதிய வீடு

புதிய வீட்டில் நேற்று பால் காய்ச்சிப் புன்னகை மலர்ந்த முகத்துடன் குடித்தனம் புகுந்தார் அம்பிகா பாட்டி. அந்த நேரம் பார்த்து, மாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. தன்னுடைய புதிய வீட்டில் நனையாமல் பெரு மூச்சு விட்டபடி மனநிறைவுடன் தங்கியிருக்கிறார் அம்பிகா பாட்டி. ``மழைக்குக்கூட யார் வீட்டு பக்கமும் ஒதுங்க முடியல. குடிசையைப் புதுப்பிக்க என்னை நம்பி யாரும் கடனும் கொடுக்கல. அப்படியிருக்க, சாமி மாதிரி இந்தத் தம்பிதான் வந்து உதவி பண்ணியிருக்கு. நல்லா இருக்கணும் அந்தத் தம்பி’’ என்று ஆனந்த கண்ணீருடன் தினேஷ் சரவணனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் அம்பிகா பாட்டி.

தொடர்ந்து சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தினேஷ் சரவணனை சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ட்விட்டரில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/tamilnadu/vellore-it-employee-helps-old-aged-woman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக