தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய சோகத்தின் வடு மறையவில்லை. அதற்குள் அதே காவல் நிலையத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு மகேந்திரன் என்பவர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மரணம் தொடர்பாக அவர் தாய் வடிவு, காவல்துறையினர் மீது புகார் தெரிவித்ததை அவரது பேட்டியாக ஜூ.வி-யில் முதலில் வெளியிட்டிருந்தோம். அப்பாவியான தன் மகன் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் கதறியதைக் குறிப்பிட்டிருந்தோம்.
Also Read: `பரவும் வதந்திகள்...' - சாத்தான்குளம் வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி?
தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவர் மே 18-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் மகேந்திரனின் அண்ணன் துரை என்பவரை போலீஸார் விசாரிக்க வந்தனர். அப்போது துரை இல்லாததால் அவரின் தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, வழக்குக்குத் தொடர்பே இல்லாத மகேந்திரனை போலீஸார் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மகேந்திரனை போலீஸார் விடுவித்துள்ளனர். காயமடைந்த மகேந்திரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாய் வடிவு, சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.
தலையில் ரத்தம் உறைந்ததால் மயக்க நிலைக்குச் சென்ற மகேந்திரன் மரணம் அடைந்தார். சாத்தான்குளம் போலீஸாரின் அச்சுறுத்தல் காரணமாக அப்பாவியான வடிவு புகார் எதுவும் பதிவு செய்யாமல் தனக்கு நேர்ந்த சோகத்தை மனதுக்குள்ளேயே மறைத்து வைத்துக் குமுறிக்கொண்டிருந்துள்ளார்.
இது பற்றி ஜூ.வி-யில் நாம் செய்தி வெளியிட்ட பின்னர் இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. வடிவுக்கு ஆதரவாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு பதிவு செய்தார். அதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகு கணேஷ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு குறித்து வழக்கறிஞரான ஜெயச்சந்திரனிடம் கேட்டதற்கு, ``சாத்தான்குளம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் சந்தேகமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். மகேந்திரனை போலீஸார் தாக்கியதில்தான் உயிரிழந்துள்ளார். அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. அவரது தலையில் ரத்தம் உறைந்திருந்ததற்கான மருத்துவச் சான்றுகள் உள்ளன.
அச்சம் காரணமாக மகேந்திரனின் தாய் வடிவு புகார் தெரிவிக்காமல் இருந்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதால் வழக்கு தொடர முன்வந்தார்.
மகேந்திரன் மரணம் தொடர்பாகவும் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மகேந்திரனின் தாய் வடிவுக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல் மகனை இழந்த ஏழைத் தாய்க்கு நீதிமன்றத்தின் மூலம் நீதியுடன் நிவாரணமும் கிடைக்கப் பாடுபடுவேன்” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/court-issued-notice-to-dgp-and-collector-for-the-death-of-an-innocent-in-sathankulam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக