கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கோடு சேர்த்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அதிகளவில் மக்கள் கூடும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை, குறைந்த நபர்களுடன்தான் நடத்த வேண்டுமென அரசு உத்தரவு போட்டிருக்கிறது. இதனால் திருமண மண்டபங்களில் நடைபெற்று வந்த பிரமாண்ட திருமணங்கள் எல்லாம் வீட்டுக்குள் சிம்பிளாக நடந்து வருகின்றன.
இருந்தாலும் ‘என்னதான் மண்டபத்துல மேடை போட்டு கல்யாணம் செய்ற மாதிரி இருக்குமா!’ என்ற சோகக் குரல்கள் பரவலாக எழாமல் இல்லை. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் லாரியில் நடமாடும் திருமண மண்டபம் போன்ற கான்செப்டை உருவாக்கி அசத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். ஓவியரான இவர் ‘சிற்பி ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் ஸ்டேஜ் டெக்கரேஷன் எனப்படும் மேடை அலங்காரத் தொழில் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் திருமண மண்டபங்களில் பெரிதாக திருமணங்கள் நடக்காததால், வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்திருக்கிறார். ‘நம்மிடம் இருக்கும் லாரியையே திருமண மேடையாக்கினால் என்ன?’ என யோசித்தவர், லாரியின் பின்பக்கத்தை திருமண மேடை போல அச்சு அசலாக மாற்றியதோடு, மணமக்களுக்கான சோஃபா, ஏர்கூலர், தரை விரிப்புகள், மங்கல வாத்தியத்திற்காக ஸ்பீக்கர் செட்டப் என லாரியை மினி மண்டபமாக மாற்றியுள்ளார். அப்துல் ஹக்கீமின் இந்த நடமாடும் திருமண மண்டபம் பொதுமக்களிடம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
Also Read: சென்னை:`கொரோனா பரவினால் வழக்கு' -அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ரகசியத் திருமணம்
இதுகுறித்து அப்துல் ஹக்கீமிடம் பேசினோம். “மண்டபங்களில் பெரிதாக திருமணங்கள் நடக்காததால் ஸ்டேஜ் டெக்கரேஷன் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாக எதாவது செய்ய வேண்டுமென யோசித்து ‘நடமாடும் திருமண மண்டபம்’ என்ற கான்செப்ட்டை உருவாக்கியிருக்கிறேன்.
17 அடி நீளமுள்ள லாரியில் திருமண மேடை போன்ற செட்டப்பை டிஸைன் செய்திருக்கிறோம். வீட்டின் முன்புறத்திலோ, சாலையின் ஓரமோ இந்த வாகனத்தை நிறுத்தி, ரெட் கார்ப்பெட் விரித்து, 50 சேர்களை போட்டால் திருமண மண்டபம் போன்ற லுக் கிடைத்துவிடும்” என்றார்.
தொடர்ந்தவர், “திருமணத்திற்கு வருபவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் கொடுப்பதோடு காய்ச்சல் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறோம். இந்த வண்டியை வீட்டுக்கு முன்னாடி நிப்பாட்டி, சில மணி நேரத்துலயே திருமணத்தை முடிச்சிட்டு கிளம்பிடலாம். மண்டபத்திற்கு ஆகும் செலவைவிட கால்வாசியில் இந்த வாகனத்தில் திருமணத்தை முடித்துவிடலாம். திருமணத்திற்கு மட்டுமல்லாது காது குத்துதல், பூப்பு நன்னீராட்டு விழா, வளைகாப்பு, பிறந்தநாள் போன்றவற்றையும் இந்த வாகனத்தில் நடத்தலாமென இருக்கிறோம். அரசியல் மீட்டிங், சிறிய கூட்டங்கள் போன்றவற்றையும் இந்த வாகனத்தில் செய்யலாம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tiruppur-youngster-designed-mobile-marriage-hall
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக