ஊர்மக்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்களது சொந்த செலவில் குளம் தூர்வாருதல், பள்ளிக்கூடத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பது என கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த ஊர்மக்களோ தங்களது சொந்த செலவில், கிராம நிர்வாக அலுவலகத்தைப் புதுப்பித்துள்ளார்கள். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
கிராம நிர்வாக அலுவலகம் என்பது மிக முக்கியமான ஒன்று. மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, அடிக்கடி இங்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில், சிதிலமடைந்த நிலையில் இருந்த வி,ஏ.ஓ அலுவலக கட்டடத்தால் இந்த ஊர்மக்கள், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக, மழைக்காலங்களில் கட்டடத்தின் உள்ளே தண்ணீர் தேங்கி, ஆவணங்கள் நனைந்துள்ளன. சேறு சகதியுமாகவே காட்சி அளித்திருக்கிறது.
இந்நிலையில்தான் இக்கிராம மக்களின் சொந்த முயற்சியில் இக்கட்டடம் புத்துயிர் பெற்றுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட தரமான மேல்தளம், டைல்ஸ், வண்ணம் பூசப்பட்ட சுவர்கள் என பளபளப்பாக காட்சி அளிக்கிறது. இதற்கு இப்பகுதி மக்கள் 70,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள், இதுகுறித்து நம்மிடம் பேசிய கீழகாவட்டாங்குறிச்சி மக்கள், ‘’இந்த கட்டடத்தை சீரமைக்க கோரி மாவட்ட நிர்வாகத்துக்கிட்ட பல முறை மனு கொடுத்தோம். எங்க ஊர் மக்கள் ஒண்ணா சேர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போயி மனு கொடுத்துட்ட வர 5,000 ரூபாய்க்கு மேல செலவாகி இருக்கும். ஆனாலும், பிரயோஜனமில்லை. இதுக்கு முடிவு தெரியாமலே இருந்துச்சு. தீவிரமான போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயம் தீர்வு வந்திருக்கும். இந்த சமயத்துலதான் எங்களுக்கு திடீர்னு ஒரு யோசனை வந்துச்சு.
அரசாங்கம் கட்டி கொடுத்தால், அடுத்த இரண்டு மூணு வருசத்துலயே, கட்டடம் ஒழுக ஆரம்பிச்சிடும். பல லட்சம் ரூபாய்க்கு மேல திட்டமதிப்பீடு போட்டுட்டு, அதிகாரிகளும், கான்ட்ராக்ட்க்காரங்களும் ஒண்ணா சேர்ந்து, முக்கால்வாசி பணத்தை சாப்பிட்டுட்டு போயிடுவாங்க. கட்டடம் ஏதாவது ஆயிடுச்சினா, நாங்கதான் பாதிக்கப்படுவோம். நாங்க அரசாங்கத்த குறை சொல்லல... ஆனா, பல இடங்களில் நடக்கிறத பாக்குறோம்.
அதனால, அந்த வம்பே வேண்டாம்.... நாமலே ஊர்மக்கள் ஒண்ணா சேர்ந்து பணம் போட்டு, கட்டடத்தை சீரமைக்கலாம்னு முடிவு பண்ணினோம். 70,000 செலவுல, ரொம்ப சிக்கனமா, அதேசமயம் நல்ல தரமா, சிமென்ட், கம்பி வலை பதித்து, சீலிங் அமைச்சோம். செங்கல் மணல் ஜல்லி கலவை பயன்படுத்தி 20,000 மதிப்பில் தரைத்தளத்தில் டைல்ஸ் பதிச்சோம். முற்றிலும் சேதமடைந்திருந்த மின் வயர்கள் முழுமையாக மாற்றி புதிதாக வயரிங் செஞ்சோம். இதுமட்டுமல்ல... இன்னும் பல வேலைகள் செஞ்சிருக்கோம். பெயின்ட் அடிச்சி, இப்ப புது கட்டடம் மாதிரியே மாத்திட்டோம்” என உற்சாகத்தோடும் பெருமிதத்தோம் தெரிவித்தார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/ariyalur-village-people-re-constructed-the-vao-office
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக