Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

கேரளா: `என் அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தால் வரட்டும்!’ - பினராயி விஜயன் காட்டம்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கேரள தலைமை செயலகத்தில் ஐ.டி பிரிவில் பணி செய்தது அரசியல் ரீதியான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கையில் எடுத்து காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமும் சபாநாயகரை நீக்கவும் தீர்மானம் கொண்டுவருவோம் எனக் காங்கிரஸ் கூறிவருகிறது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "இந்த வழக்கில் பலமான விசாரணை, சரியான வழியில் செல்கிறது. யார் குற்றவாளி, யாருக்கு பங்கு உள்ளது என்பது வெளியே வரட்டும். எல்லாவற்றையும் அவர்களாகவே முடிவு செய்தால் விசாரணை எதற்கு. விசாரணை நடத்தும் என்.ஐ.ஏ இந்தியாவில் மிகவும் முக்கிய ஏஜென்சிகளில் ஒன்றாகும். இதில் யார் குற்றவாளி ஆனாலும், அவரை பாதுகாக்க மாநில அரசு முயலாது.

ஸ்வப்னா சுரேஷ்

விசாரணைக்கு எல்லா உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என ஏற்கனவே கூறிவிட்டோம். சபாநாயகரை தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் உள்படுத்துகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் சில மாதங்களுக்கு முன்பு கலந்துகொண்டதற்காக அவரை நீக்கும் தீர்மானம் கொண்டுவருவதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி நடந்தபோது அவர்கள் இந்தச் சம்பவத்தில் பங்காளிகள் எனத் தெரியாது. இது போன்ற எந்தக் குற்றச்சாட்டும் அவர்கள் மீது இல்லை. பிரச்னைக்கு உள்படாத சமயத்தில் கலந்துகொண்டதற்காக இப்போது பிரச்னை செய்வது சரியல்ல. எந்த வழியிலாவது எதிர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி கூறுகிறார்கள்.

Also Read: கேரளா தங்கம் கடத்தல்: `மலப்புரம் கனெக்‌ஷன்; பயணிகள் விமானம்!’ - அதிரவைக்கும் பின்னணி

எனது அலுவலகம் சம்பந்தப்பட்ட ஒருவர் சர்ச்சைக்குரிய பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்பதால் அவர் நீக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்களா. நீக்கப்பட்ட சிவசங்கரன் குறித்து வேறு விஷயங்கள் வெளியானால் அதற்கும் நடவடிக்கை எடுப்போம். இந்தப் பெண்ணை பணியில் நியமித்ததில் உள்ள விஷயங்கள் குறித்தும், போலிச் சான்றிதழ் குறித்தும் தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை ஏ.சி.எஸ் ஆகியோர் விசாரணை நடத்துகிறார்கள். பிரச்னையில் தெளிவு கிடைத்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போக முடியும். சர்ச்சைக்குரிய பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததும் சிவசங்கரனை நீக்கினோம். அதுதான் எங்களால் செய்ய முடியும். விசாரணையை வேறு வழியில் திருப்பி விட வேண்டாம்.

Also Read: கேரள தங்கம் கடத்தல் வழக்கு: `காட்டிக்கொடுத்த போன் அழைப்புகள்' -பெங்களூருவில் சிக்கிய ஸ்வப்னா

தூதரக அதிகாரி என்ற முறையில் அப்பெண் ஸ்வப்னா பலரை தொடர்புகொண்டிருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் வந்திருந்தார். அவர் இப்படிப்பட்டவர் என யாருக்கும் அப்போது தெரியாது. அவர் அதைப் பயன்படுத்தி வேறு விஷயங்கள் செய்துள்ளார். அவர் செய்தது தவறு என்பது இப்போது தெரிந்துள்ளது. அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்றது எப்படி எனக் கேள்வி எழுப்புகிறீர்கள். ஒரு பத்திரிகையில் வெளியிட்ட செய்தியில் சேவா சிந்து ஆப் மூலம் பதிவு செய்தால்தான் கர்நாடாவிற்கு செல்ல முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதுபோல கேரளத்திற்கு வருபவர்களின் விபரங்களைதான் நாம் சோதிப்போம்.

சந்தீப் - ஸ்வப்னா

இப்போது விசாரணை நடத்தும் ஏஜென்சி மற்ற விஷயங்களை கண்டுபிடிக்கட்டும். என்.ஐ.ஏ விசாராணையில் இந்தப் பணம் தீவிரவாதிகளுக்கு சென்றது எனக் கண்டறிந்துள்ளது. இந்தக் கடத்தல் சம்பந்தமாகப் பல விஷயங்கள் வெளியேவரப்போகிறது. தீவிரவாத தொடர்பு என்றால் அது வெளியே வர வேண்டும். அவர்கள் விசாரணை நடத்தும்போது நமக்கு புரியும். யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்தின் கைகளில் சிக்க வேண்டும். இப்போது எதாற்கு தீர்ப்பை சொல்ல வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமாக என் அலுவலகத்துக்கு விசாரானைக்கு வந்தால் வரட்டும். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெளியே வரட்டும்" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/crime/pinarayi-vijayan-press-meet-regarding-gold-smuggling-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக