Ad

திங்கள், 13 ஜூலை, 2020

`மாம்பழங்களின் ராணி’ - மண் மணக்கும் மயிலாடுதுறை பாதிரி மாம்பழம்!

ஒட்டு, செந்தூரம், மல்கோவா, நீலம், இமாம்பசந்த், அல்போன்சா, காதர், காலாபாடி, ருமானியா என்று மாங்கனிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இருந்தாலும், மற்ற மாங்கனி வகைகளில் வேறுபட்ட சுவையும், மணமும், பாதிரி மாம்பழத்திற்கு மிகவும் அதிகம். மற்ற மாம்பழங்கள், காய்ப் பருவத்தில் ஒரு வகையான புளிப்புச் சுவையும், செங்காயில் ஒருவித புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையும், பழமானபின் இனிப்புச் சுவையும் இருக்கும். ஆனால் பாதிரி மாம்பழம், மட்டும் காய் மற்றும் செங்காய் பருவத்தில், வாயில் வைக்க முடியாத அளவில் அதி பயங்கர புளிப்புச் சுவையும், பழமான பின் அதிகமான இனிப்புச் சுவையும் காணப்படும். அது மட்டுமன்றி, பாதிரி மாம்பழத்திற்கென்று தனியான மணம் அதன் சுவையை அதிகரிக்கச் செய்யக் காரணமாகும்.

மாம்பழங்களின் ராணி

`பாதிரி மாம்பழம்’ -பெயர் காரணம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுவிசேஷ லுத்ரன் திருச்சபையில் பாதிரியாராக மதப்பிரசங்கத்திற்காக 1847-ம் ஆண்டு பணியாற்றியவர் பாதிரியார் ஓக்ஸ். ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் ஓக்ஸூம், அவருடைய மனைவி சாரல் என்பவரும், தோட்டக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் பணியாற்றிய, சர்ச் வளாகத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு மாங்கன்றை ஒட்டு முறையில் உருவாக்கி நடவு செய்தனர்.

மயிலாடுதுறை மண் வளத்திற்கேற்ப அந்த மரக்கன்று வளர்ந்து காய்க்கத் துவங்கியது, அதன் காயை ருசித்தபோது மிகவும் புளிப்பாக இருந்துள்ளது. காய்காய்த்து மரத்திலேயே பழுத்து, அணில் கொத்திக் கீழே போட்டபோது அந்தப் பழத்திலிருந்து ஒருவித நறுமணம் வீச ஆரம்பித்தது. பாதிரியார் மற்றும் அங்கே வேலை பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அதை ருசித்தபோது மிகவும் இனிப்பாக இருந்துள்ளது. அந்த மாம்பழத்தை சர்ச்சுக்கு வருபவர்களிடம் பாதிரியார் வழங்கினார். "இந்த மாம்பழத்தின் பெயர் என்ன என்று கேட்டதற்கு எனக்குத் தெரியாது" என்று பாதிரியார் கூறிவிட்டார்.

பாதிரி

மயிலாடுதுறைக்கு வந்து புதிய மாம்பழத்தை அறிமுகம் செய்துவைத்த பாதிரியார் அளித்த மாம்பழம் என்றே அழைக்கப்பட்டு, நாளடைவில் பாதிரியார் கொடுத்தது என்று கூறி, இறுதியில் 'பாதிரி மாம்பழம்' என்றே இன்று தமிழகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. ஒரு மூடப்பட்ட அறையிலோ, ஏதோவொரு இடத்திலோ பாதிரி மாம்பழத்தை வைத்து எடுத்தால், பலநாள்கள் வரையில் நறுமனம் வீசும் இயல்பு கொண்டது. இதனால் இது மாம்பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகின்றது.

மற்ற மாங்கனிகளில் இல்லாத ஒரு சிறப்பும் பாதிரி மாம்பழத்திற்கு உண்டு. மற்ற மாங்கனிகள் நாளாகிப்போனால் அழுகிப்போகும். ஆனால் அடிபடாத பழுக்கவைக்கப்பட்ட பாதிரி மாம்பழம் நாளாக, நாளாக அழுகாது. வயதான மனிதர்களுக்கு தோல் சுருங்குவது போல் பாதிரி மாங்கனியின் தோல் சுருங்கினால் கூடுதல் சுவையே தரும்.

இதனால், மயிலாடுதுறை பாதிரி மாம்பழத்திற்கு தனி கிராக்கி உண்டு. வெளிநாடுகளில் வேலை செய்யும் உறவினர்களுக்கு பாதிரி மாம்பழங்களை பரிசாக அனுப்புவது வாடிக்கையான ஒன்றாகும்.

ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் பாதிரிப் பழங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் போய்விட்டது. சென்ற ஆண்டு கிலோ ரூ.100 வரை விற்பனையான பாதிரி, இந்தாண்டு ரூ.80 -க்கு மேல் விலையாகவில்லை. ஜுலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கும் இப்பழங்கள் மயிலாடுதுறை பழக்கடைகளில் விற்பனைக்குக் குவிந்து கிடக்கின்றன.

Also Read: மாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்!



source https://www.vikatan.com/news/agriculture/an-article-about-queen-of-mangoes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக