``நாசர், பாலா சிங், கொச்சின் ஹனிஃபா, ஜார்ஜ் மரியான்னு சின்னச் சின்ன கேரக்டர்கள்லகூட பெரிய டீடெய்லிங் இருக்கும். அந்த கேரக்டர்கள் உருவானது எப்படி?''
``நாசர் சார் நேதாஜியை கடைப்பிடிக்கிறவர், பாலா சிங் காந்திஜியை கடைப்பிடிக்கிறவர்னு ஐடியாலஜியா ரெண்டு பேரும் வித்தியாசப்படுவாங்க. நேதாஜியை கடைப்பிடிக்கிறதுனால அவரை குஸ்தி வாத்தியாரா எழுதினேன். அவர்தான் ஆர்யாவுக்கு குரு. ஆர்யாவும் அந்த ஐடியாலஜியைத்தான் கடைப்பிடிக்கிறார் அப்படிங்கிறதை காட்டத்தான் துப்பாக்கி காட்டும்போது பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி நிக்கிற சீன் வெச்சேன். நமக்கு எதுக்கு பிரச்னை, அஹிம்சை முறையில கேட்போம்னு நினைக்கிறவர், பாலா சிங். எம்.எஸ்.பாஸ்கர் சாரும் அவருக்கான கேரக்டரை சூப்பரா பண்ணியிருப்பார். ஜார்ஜ் மரியானுடைய பெரிய வெர்ஷன்தான் கொச்சின் ஹனிஃபா சார் பண்ண நம்பி கேரக்டர். அந்த வாத்தியார் கேரக்டர் எழுதினவுடன் ஹியூமரா சில விஷயங்கள் சேர்த்தோம். ஜார்ஜுக்கு நிறைய சீன் இருந்தது. ஆனா, எடிட்ல கட் பண்ண வேண்டியதாகிடுச்சு. இந்தப் படத்துல வர்ற எல்லா கேரக்டருக்கும் இன்னொரு ஆப்ஷன் கொடுக்கலாம். ஆனா, நம்பி கேரக்டருக்கு ஹனிஃபா சார் மட்டும்தான். நான் எழுதினதைவிட அவருடைய நடிப்பு அந்தக் கேரக்டருக்கு உயிர் கொடுத்துடுச்சு.''
``படத்துக்கு நா.முத்துக்குமாருடைய வரிகள் பெரிய பலம். உங்களுக்கு ரொம்ப நெருங்கிய நண்பரும்கூட. அவரை எவ்ளோ மிஸ் பண்றீங்க?''
``நாங்க கடைசியா வொர்க் பண்ணப் படம், `தேவி'. நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த நாள்கள்ல இருந்தே அவரைத் தெரியும். `கிரீடம்' படத்துக்கு நா.முத்துக்குமார்தான் இணை வசனகர்த்தா. இது நிறைய பேருக்குத் தெரியாது. நான் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணும்போது அவரும் அப்போ சினிமால வளர்ந்து வந்துட்டு இருந்தார். தி.நகர்ல இருக்கிற ஸ்கூல் கிரவுண்ட்ல உட்கார்ந்துதான் பாடல் எழுதுவார். ஒருமுறை நான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போதான் `காதல் கொண்டேன்' படத்துக்கு பாடல் எழுதிட்டு இருந்தார். விஜய் எப்படியிருக்குனு `தேவதையை கண்டேன்... காதலில் விழுந்தேன்' பாடல் வரிகளை படிச்சுக் காட்டினார். அந்த சமயத்துல இருந்து எனக்கு ரொம்ப நல்ல பழக்கம். ஒன்னா தியேட்டருக்குப் போவோம், உலக சினிமா பத்தி பேசுவோம். அப்படித்தான் எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவானது. மிகப்பெரிய கவிஞன்; அறிவாளி. எனக்கு எல்லா விஷயத்துலயும் பக்கபலமா இருந்த நண்பன். அவர் எழுதின சில கவிதைகளை என் படங்கள்ல பாடல்களா பயன்படுத்தியிருக்கேன். `ஒரு பாதி கதவு நீயடி' பாடல் அவர் எழுதின கவிதைதான். அவருடைய மனைவி விஜயலட்சுமி என் தங்கை மாதிரி. அவர் மகன் ஆதவன், மகள் மகாலட்சுமி எல்லோரும் என் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு நண்பனா எனக்கு மிகப்பெரிய இழப்பு. அதைத் தாண்டி ஒரு கவிஞரா தமிழ் சினிமாவுக்கு ஈடுகட்ட முடியாத பெரிய இழப்பு. எந்த சூழலை சொன்னாலும் ரொம்ப சீக்கிரமா எழுதிடுவார். அவர் அதிகபட்சம் எடுத்துக்குற நேரம் ஒன்றரை மணி நேரம். `மேகமே' பாடல் மலேசியா போயிருந்தபோது எழுதினது. `பூக்கள் பூக்கும் தருணம்' போன்ல அப்படியே சொன்னதுதான். `சைவம்' படத்துல தேசிய விருது கிடைச்ச பாடல் பத்து நிமிஷத்துல அவர் எழுதிக் கொடுத்தது."
`` `மேகமே ஓ மேகமே' பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனோடு விக்ரமை பாட வைக்கலாம்னு எப்படி தோணுச்சு?''
``படத்துல அந்தப்பாடல் நாசர் சார் பாடுற மாதிரி இருக்கும். அதனால, ஒரு ராவான முதிர்ச்சியான குரல் பாடினா நல்லாயிருக்கும்னு நினைச்சோம். முதல்ல ராஜா சாரை பாட வைக்க கேட்டோம். ஆனா, அது நடக்கலை. அப்புறம்தான் எம்.எஸ்.வி சார்கிட்ட கேட்டோம். அவரும் ஓகே சொல்லிட்டார். ரெக்கார்டிங் அப்ப எனக்கும் ஜி.வி-க்கும் செம பயம். ரெண்டு பேரும் உட்காரவேயில்லை. `ஒரு ஹார்மோனியப் பெட்டி கிடைக்குமா?'னு கேட்டு வாங்கிட்டு உள்ளே போனார். மூணு மணி நேரம் இடைவெளியே இல்லாமல் பாடினார். அந்தத் தருணம் சூப்பரா இருந்தது. விக்ரம் சார் பாடுறதுக்கு முன்னாடி தனுஷ் சார்தான் பாடினார். அப்போ ஜி.வி `ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த நேரத்துல தனுஷ் சாரே `நான் பாடுறேன்'னு சொல்லிப் பாடி கொடுத்தார். அதை வெச்சுதான் ஷூட் பண்ணோம். ஆனா, விஷுவல் பார்க்கும்போது `அவர் வாய்ஸ் இதுக்கு செட்டாகலை'னு தோணுச்சு. அதனால, தனுஷ் சார்கிட்ட சொல்லி அதைத்தூக்கிட்டு விக்ரம் சாரை பாட வைக்கலாம்னு முடிவு பண்ணோம். அப்போ `தெய்வத்திருமகள்' கதையை மட்டும்தான் அவர்கிட்ட சொல்லியிருந்தேன். கமிட்லாம் ஆகலை. ஆனா, நான் கேட்டவுடனே வந்து பாடிக் கொடுத்தார்."
``படம் 2.45 மணி நேரம். எடிட்டிங்ல பெரிய சவால் இருந்திருக்குமே?''
``படத்தை எடுத்து முடிச்சுட்டு பார்த்தால் நாலரை மணி நேரம் இருந்தது. ரெண்டு இன்டர்வல் வைக்கலாமானுகூட யோசிச்சோம். அகோரம் சார் நாலரை மணி நேரத்தையும் பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொல்லிட்டார். ஆனா, குறைச்சாகணுமே. ஆண்டனி சார் முதல் பாதியைக் கேட்டார். அதுவே இரண்டரை மணி நேரம் இருந்தது. குறைச்சு குறைச்சு 1.50 மணி நேரமா மாத்தினார். ஆன்டனி கட் பண்றதுல ஸ்பெஷலே எவ்ளோ குறைஞ்சாலும் நாம நினைக்கிற விஷயம் எல்லாமே அதுல இருக்கும். ஒரு மணி நேரம் ஐம்பது நிமிஷத்துக்கு அப்புறம்தான் இன்டர்வல். அப்புறம் ஒரு மணி நேரம். எல்லோருக்கும் ஓகே. ஆனா, விநியோகஸ்தர்கள் படம் பார்த்துட்டு, ``இன்டர்வெல்லை மாத்தி வைங்க. இவ்ளோ நேரம் யாரும் உட்காரமாட்டங்க"னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. நான் இன்டர்வெல்லை மாத்த முடியாதுனு சொல்லிட்டேன். அப்போ முதல் பாதியை 20 நிமிஷம் குறைங்கனு சொன்னாங்க. வேற வழியில்லாமல் குறைச்சு அகோரம் சாருக்கு போட்டுக்காட்டினேன். அவருக்கு அது பிடிக்கவேயில்லை. `நாம பழைய வெர்ஷன்லயே போயிடலாம். பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டார். ஆனா, படம் வெளியானவுடன் யாரும் முதல் பாதி ரொம்ப நேரம் இருக்குனு சொல்லலை. அதுவே பெரிய சந்தோஷமா இருந்தது. எல்லா எமோஷனையும் சூப்பரா படத்துக்குள்ள கொண்டு வந்துட்டார் ஆண்டனி சார்."
Also Read: ``படம் பார்த்ததும் விஜய் சார் கொடுத்த நம்பர், அஜித் சார் சொன்ன அந்த வார்த்தை!'' - இயக்குநர் விஜய்
``உங்களுடைய குருநாதர் பிரியதர்ஷன் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?''
``அவர் இல்லைனா நான் இல்லை. என்னுடைய எல்லா படங்களுமே அவருக்கு நன்றிசொல்லிட்டுத்தான் ஆரம்பிக்கும். இப்போ வரை முதல் நாள் ஷூட்டிங்கின்போது அவருக்கு போன் பண்ணி, `முதல் நாள் சார். முதல் ஷாட் எடுக்கப்போறேன்'னு சொல்லிட்டு அவர் ஆசியோடுதான் ஆரம்பிப்பேன். `மதராசபட்டினம்' படத்தை ரிலீஸுக்கு முன்னாடி அவருக்கு போட்டுக் காட்டினேன். படம் பார்த்துட்டு மறுநாள் போன் பண்ணி, `படம் ரொம்ப பிடிச்சுருக்கு. கடைசில ரெண்டு பேரும் சேர்ற மாதிரி வர்ற ஷாட்டை தூக்கிடு. அது `டைட்டானிக்' படத்தை ஞாபகப்படுத்துது'னு சொன்னார். ஆனா, புரொடக்ஷன்ல எல்லோரும் அது நல்லாயிருக்குனு சொன்னாங்க. அப்புறம், பிரியதர்ஷன் சார்கிட்ட சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டார். ஒவ்வொரு சீன் பத்தியும் என்கிட்ட ரொம்ப விரிவா பேசினார். அவருடைய பாராட்டு எனக்கு எப்போவுமே ஸ்பெஷல்தான்."
source https://cinema.vikatan.com/tamil-cinema/director-a-l-vijay-speaks-about-madrasapattinam-movie-journey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக