தன் போட்டோகிராபி அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் சுரேஷ்.
``விவசாய குடும்பம். கோழி, மாடு, குதிரைனு ஏராளமான கால்நடைகள் பிள்ளைகளோட பிள்ளைகளா வீட்டுல வளரும். எனக்கும் விவசாயம் மேல பிடிப்பு உண்டு. சின்ன வயசுல இருந்தே எனக்குக் குதிரைகள்மேல தனிப் பிரியம். எங்க வீட்டுல எப்போதுமே மூணு குதிரைகள் இருக்கும். சின்ன வயசுலயே குதிரை ஓட்ட கத்துகிட்டேன். ஒரு கட்டத்துல போட்டோகிராபியில ஆர்வம் உண்டாச்சு. செல்போன்லயே பிடிச்ச காட்சிகளை போட்டோ எடுத்துக்கிட்டிருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்னால என் ஃப்ரெண்ட் வெளிநாடு போகும்போது அவனோட புரொஃபஷனல் கேமராவை என்கிட்ட கொடுத்தான். அதுல போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன்.
பல ஊர்களுக்குபோய் குதிரைகளைப் போட்டோஸ் எடுத்தேன். ரெண்டரை வருஷ அனுபவத்துல, குதிரைகள் பத்தி நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். கடந்த செப்டம்பர் மாசத்துல இருந்து, குதிரைகளை மட்டுமே போட்டோ எடுத்துக்கிட்டிருக்கேன். வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்த நண்பன்கிட்ட அவனுடைய கேமராவை கொடுத்துட்டேன். இப்போ கேமராவை வாடகைக்கு எடுத்துட்டுப் போய்தான் போட்டோஸ் எடுக்கறேன். குதிரை வச்சிருக்க நண்பர்களே இப்போ என்னை அழைச்சுட்டுப் போய் போட்டோ எடுக்கச் சொல்றாங்க. அவங்க திருப்தியடையிற வகையில் அவங்க வளர்க்கும் குதிரைகள் எல்லாவற்றையும் அழகா, கம்பீரமா போட்டோ எடுத்து, எடிட் செஞ்சு கொடுத்திடுவேன். கூடவே, நான் படமெடுக்கும் குதிரைகள் பத்தின விஷயங்களை என் ஃபேஸ்புக் பேஜ்ல பதிவிடுவேன்” என்கிறார்.
``போனி (pony) ரக நாட்டுக் குதிரைகளும் தமிழகத்துக்கும் நெருக்கமான தொடர்பிருக்கு. பல நூற்றாண்டுகளாகவே இந்தக் குதிரைகள் தமிழகத்தில் இருக்கு. அதேசமயம் இந்திய அளவில் பிரபலமா இருக்கும் கத்தியவாரி (kathiawari), மார்வாரி (Marwari) ஆகிய நாட்டு இன குதிரைகள் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்கள் சிலவற்றில் அதிகளவில் இருக்கு. அங்கிருந்துதான் கடந்த நூற்றாண்டில் அந்த இனக் குதிரைகள் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு இங்கேயும் பிரபலமானது. இந்த மூணு ரகங்கள்தான் தமிழகத்துல அதிகளவில் பயன்பாட்டில் இருக்கு. இந்தியாவிலேயே குதிரைகளுக்கான பிரத்யேக சந்தை, முதன்முதல்ல ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவில்தான் நடத்தப்பட்டது. அதுக்குப் பிறகுதான் பல பகுதிகள்ல குதிரைச் சந்தை ஆரம்பிக்கப்பட்டிருக்கு.
ஒவ்வொரு வருஷமும் ஜனவரி மாசத்துல பஞ்சாப் மாநிலம் முக்தர் சாகிப் பகுதியில குதிரைச் சந்தை நடக்கும். பின்னர் ஏழு மாசத்துக்கு இந்தியாவில் எங்குமே குதிரைச் சந்தை நடக்காது. பிறகு ஆகஸ்ட் மாசம் அந்தியூரில் நடக்கும் குதிரைச் சந்தைக்கு நாடு முழுக்கவிருந்து குதிரை வளர்ப்போர் பெருமளவில் கலந்துப்பாங்க. பிறகு குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரானு வெவ்வேறு பகுதிகள்ல குதிரைச் சந்தை நடக்கும். ஒரு வருஷத்துக்கு நாடு முழுக்க ஏறக்குறைய 10 இடங்கள்லதான் குதிரைச் சந்தை நடக்கும்.
வட மாநிலங்கள் அளவுக்கு இல்லாட்டியும், தமிழகத்துலயும் குதிரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் பலர் இருக்காங்க. நம்ம மாநிலத்துல மேற்சொன்ன மூணு நாட்டு இனத்துல இப்போ ஏறத்தாழ 7,500 குதிரைகள் மட்டும்தான் இருக்கு. இந்த குதிரைகள் பத்தி விழிப்புணர்வு உருவாக்கணும். ஆவணப்படுத்தணும்.
வட இந்தியாவில் பெரிய பணக்காரங்க அதிகளவில் குதிரைகள் வளர்க்கிறாங்க. அங்க ஹார்ஸ் போட்டோகிராபிக்கு ஒரு ஷூட்டுக்கு 50,000 ரூபாய்வரை கட்டணம் வாங்குவாங்க. நம்ம தமிழ்நாட்டில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்தான் குதிரை வளர்க்கிறாங்க. அவங்க அந்த அளவுக்குச் செலவு செஞ்சு குதிரைகளை போட்டோ எடுக்க விரும்பமாட்டாங்க. பணம் வாங்கிறதுல எனக்கும் உடன்பாடில்லை. எனவே, குதிரைகளை போட்டோ எடுக்க பணம் எதுவும் வாங்க மாட்டேன்.
குதிரைகளைச் சிறப்பா காட்சிப்படுத்தி போட்டோஸ் எடுத்துக்கொடுப்பேன். அதன் மூலம் அவர் தனது குதிரைகளை விற்பனை செய்யலாம்; புதிய குதிரைகளை வாங்கலாம். தங்களோட குதிரைகளின் போட்டோக்களை வீட்டில் ஃப்ரேம் பண்ணி காட்சிப்படுத்தலாம். ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடலாம்.
குதிரைகளுடன் பல வருஷமா பழகியதால், அவை பற்றிய குணாதிசயங்கள் எனக்கு நல்லா தெரியும். காலேஜ் விடுமுறை தினங்கள்ல போட்டோகிராபிக்கு அதிகளவில் நேரம் ஒதுக்கறேன். கடந்த மார்ச் மாசம்வரை தமிழகம் முழுக்க பல ஊர்களுக்கும் சென்று 500-க்கும் அதிகமான குதிரைகளை போட்டோஸ் எடுத்திருக்கேன்.
கொரோனா லாக்டெளனால், கடந்த நாலு மாசமா வெளி மாவட்டங்களுக்குப் போக முடியலை. லாக்டெளன்ல கோவை மாவட்டத்தில் மட்டும் மூணு ஷூட்டுக்குப் போனேன். இப்ப தமிழகத்துல 20-க்கும் அதிகமானோர் தங்கள் குதிரைகளை போட்டோஸ் எடுக்க புக் பண்ணியிருக்காங்க” - குதிரைகள் குறித்து எனர்ஜி குறையாமல் பேசும் சுரேஷ், அவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்கிறார்.
``குதிரையேற்றப் பயிற்சி (horse riding), வண்டிச் சவாரி, இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்றது, ஆண் குதிரைகளை இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்துறது, கண்காட்சியில் பங்கேற்க வைக்கிறது, கெளரவத்துக்காக வளர்க்கிறதுனு குதிரைகள் வளர்க்க சில காரணங்கள் இருக்கு. வாகனங்கள்ல போக முடியாத பகுதிகளுக்குக் குதிரையில் சவாரி செய்ய முடியும். பொதி சுமக்கவும் பயன்படுத்தலாம்.
`குதிரைகளைப் பராமரிப்பது சிரமம், செலவும் அதிகமாகும். வசதியானவர்களால்தான் குதிரை வளர்க்க முடியும்’னு ஒரு பேச்சு உண்டு. அது தவறானது! புண்ணாக்கு, தவிடு மாதிரியான சில உணவுகளைத் தவிர்த்து, மாடுகளுக்குக் கொடுக்கக்கூடிய தீவனங்கள்தான் குதிரைகளுக்கும் கொடுக்கப்படும். போதிய இடவசதி இருக்கிற நடுத்தர வர்க்கத்தினர்கூட குதிரை வளர்க்கலாம். நிறம், உயரம், தோற்றத்தைப் பொறுத்து குதிரைகளுக்கான விலை, மதிப்பு மாறுபடும். முழுமையான வெள்ளை, கறுப்பு நிற குதிரைகளுக்கு வரவேற்பு அதிகம் உண்டு. மேற்சொன்ன இந்த மூணு வகை குதிரைகளும் நாட்டு மாடுகள்போல நம்ம ஊரின் எல்லா பருவநிலையையும் சமாளித்து வாழும்.
வளர்ப்பு நாய்கள்போல குதிரைகளும் வளர்ப்பவர்கள்மீது அதிக பாசத்தைக் காட்டும். குதிரையின் கர்ப்பகாலம் பதினொன்றரை மாதங்கள். பெரும்பாலும் பிரசவத்தில் ஒரு குட்டிதான் ஈனும். மாடுகளுக்குப் பார்ப்பதுபோல சுழி, உயரம், நிறம், கால்களில் சுத்தம் பார்த்து குதிரைகளை வாங்குவாங்க. போனி ரக குதிரைகள் சராசரியா 3–4 அடி உயரம்தான் வளரும். இந்தக் குதிரைகளைக் குதிரையேற்ற சவாரிக்குப் பயன்படுத்த முடியாது. ஆனா, சின்ன வண்டியில பூட்டி பயண சவாரிக்குப் பயன்படுத்தலாம்.
கழுத்து பெரிசா இருக்கும் மார்வாரி ரக குதிரைகள் 60 இன்ச் உயரத்துக்கு மேல் வளரும். அதைவிட சில இன்ச் உயரம் குறைவாக வளரும் கத்தியவாரி இன குதிரைகளுக்குக் கழுத்து சற்றே சிறியதா இருக்கும். தொடர்ந்து 50 கிலோமீட்டருக்கு இடைவிடாமல் ஓடக்கூடிய இந்த ரெண்டு வகை குதிரைகளையும் வச்சு குதிரையேற்றப் பயிற்சி தரலாம். கண்காட்சியில் பங்கேற்க வைக்கலாம். வண்டியில் பூட்டி பயண சவாரி செய்யப் பயன்படுத்தலாம். இந்த ரெண்டு இனக் குதிரைகளையும் அஞ்சு மாதக் குட்டிப் பருவத்துல வாங்கி வளர்த்து, முறையான பராமரிப்பு செஞ்சு, ஓரிரு வருஷம் வளர்த்து விற்பனை செஞ்சா 50,000 ரூபாய்வரை லாபம் பார்க்கலாம்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Thoroughbred, Hanoverian உட்பட சில இனங்களைச் சேர்ந்த குதிரைகள் மட்டுமே, ஊட்டி, சென்னையில் நடக்கும் பிரபலமான குதிரை ரேஸ்ல பயன்படுத்தப்படும். அவை ஏ.சி அறையில்தான் இருக்கும். அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு குதிரையைப் பராமரிக்க ஒருநாளைக்கு சில ஆயிரம்வரை செலவாகும். அவை குதிரை ரேஸூக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இனப்பெருக்கம் செய்யப் பயன்படுத்தமாட்டாங்க. அந்த வகை குதிரைகளை போட்டோஸ் எடுக்கவும் கூப்பிடுவாங்க.
நாட்டு இனக் குதிரைகளை மட்டுமே பிரபலப்படுத்த நினைப்பதால், அந்த இன குதிரைகளை போட்டோ எடுக்க நான் போக மாட்டேன். குறிப்பா, குதிரை சவாரியில சில வகை இருக்கு. இந்தச் சவாரியே தனி கலை மாதிரி. மன்னர் ஆட்சியில் கம்பீரமா குதிரை ஓட்டும் வீரருக்குத் தனி மரியாதை கொடுக்கப்பட்டிருக்கு. இப்போ பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளைக் குதிரையேற்றப் பயிற்சிக்கு அனுப்புறதால, இந்தக் கலைக்கு மீண்டும் புத்துயிர் கிடைச்சிருக்கு” என்பவர், நாட்டு மாடுகள் உள்ளிட்ட பிற கால்நடைகளை புகைப்படம் எடுக்கும் அனுபவம் குறித்தும் பேசுகிறார்.
``எங்ககிட்ட நாட்டு மாடுகள்ல 10 உருப்படிகள் இருக்கு. மூணு நாட்டு நாய்களையும், நிறைய நாட்டு கோழிகளையும் வளர்க்கிறோம். நாட்டு மாடு வளர்ப்புக்கான வரவேற்பு தற்போது அதிகரிச்சுட்டு வருது. இந்த நிலை மேலும் அதிகரிக்கணும். நாட்டு மாடுகளையும் போட்டோ எடுக்கறேன். காங்கேயம் அருகில் நத்தக்கடையூர்ல வாரம்தோறும் நாட்டு மாடுகளுக்கான சந்தை நடக்கும். லாக்டெளனுக்கு முன்புவரை அங்க தவறாமல் சென்று போட்டோஸ் எடுத்தேன். தவிர, வெளியூர்ல இருந்து கூப்பிடுறவங்களுக்கும் அவங்க மாடுகளைக் கம்பீரமாகவும், அழகாகவும் போட்டோஸ் எடுத்துக் கொடுக்குறேன். இதுவரை 200 நாட்டு மாடு வகைகளை போட்டோஸ் எடுத்திருக்கேன்.
தவிர, நாட்டு நாய்கள், ஆடு, சேவல் உள்ளிட்ட கால்நடைகளையும் போட்டோ எடுக்கறேன். படிப்பு இன்னும் ஒருவருஷம் இருக்கு. அதுக்குப் பிறகுதான் என் கரியர் பத்தி முடிவெடுக்கணும். எதிர்காலத்துல எந்தத் துறையில் இருந்தாலும், குதிரை, மாடுகள் உள்ளிட்ட நாட்டு இனக் கால்நடைகளைத் தொடர்ந்து போட்டோஸ் எடுப்பேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறார் சுரேஷ்.
source https://www.vikatan.com/living-things/miscellaneous/horse-photographer-suresh-shares-his-photography-experience
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக