மதுரை மாவட்டம் ரிசர்வ்லைன் அருகே உள்ள ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் போதிலெட்சுமி. இவர், தினமும், தனது வீட்டு வாசலில், கொரோனா பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, விழிப்பு உணர்வு வாசகங்கள், எச்சரிக்கை மற்றும் விளக்கப் படங்கள் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
போதிலெட்சுமியிடம் பேசிய போது, “எங்கள் ஏரியா மக்களுக்கு என் கோலம் ரொம்பவும் பிடிக்கும். கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த போது, ஊரே வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த நேரத்தில் வண்ண வண்ண கோலங்களை வீட்டு வாசலில் போட எனக்கு மனசு வரல.! கொரோனா பற்றி ஏதாவது எழுதி, விழிப்பு உணர்வு கோலம் வரையலாம் என தோன்றியது. முதல் ஊரடங்கு ஆரம்பித்த 4வது நாளில் ஆரம்பித்தேன். இன்று 104வது நாள் ஆகிறது. தினமும் கொரோனா நோய்த் தொற்று பற்றியும், அதில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது பற்றியும் எழுதி கோலம் போடுவேன்.
Also Read: மதுரை: கொரோனா போண்டாவைத் தொடர்ந்து மாஸ்க்! - வரவேற்பால் மிரளும் ஹோட்டல்
Also Read: மதுரை: `மாலைக்கு 10 ரூபாய் கிடைக்கும்... இப்ப அதுவும் போச்சு’ -கலங்கும் பூ வியாபாரிகள்
ஒரு நாள் கபசுரக் குடிநீர் பற்றி, ஒரு நாள் ஆர்சனிக் ஆல்பம் மருந்து பற்றி, ஒருநாள் ஆடாதொடை மணப்பாகு பற்றி, மாஸ்க், சமூக இடைவெளி, ஹேண்ட் சானிடைசர் என தினம் தினம் படங்களோடு விதவிதமாக கோலம் போடுவேன். என் வீட்டைக் கடக்கிறவர்கள், ஒரு நிமிடம் நின்று, நான் என்ன எழுதியிருக்கிறேன் என பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
சமீபத்தில் மூலிகை டீ, மூலிகை ரசம் அதனை எப்படி வீட்டில் தயார் செய்ய வேண்டும் என நான் வரைந்த கோலம், ரொம்பவே பிடித்திருந்ததாக பலரும் கூறினர். காலையில் 5 மணிக்கு கோலம் போட ஆரம்பிப்பேன். எழுதி, வரைந்து கோலம் போடுவதற்கு 2 மணி நேரம் ஆகும். முன்தினம் இரவு, அன்றைய கொரோனா பற்றிய செய்திகளை பார்த்து, நாளை கோலத்திற்கான ஸ்க்ரிப்ட் எழுதிவிட்டு தான் தூங்குவேன். விரைவில் கொரோனா பிரச்னை முடிவுக்கு வரவேண்டும். மக்களுக்கும் தங்களது இயல்புவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இது தான் என் ஆசை.!” என்றார் புன்னகையோடு.
source https://www.vikatan.com/news/tamilnadu/a-madurai-woman-draws-a-corona-awakening-kolam-on-her-doorstep
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக