திருவண்ணாமலை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (64) - பிரகதாம்பாள் (60) தம்பதியர். பிரகதாம்பாளுக்கு கடந்த 10 நாள்களாக மூச்சுத் திணறல் இருந்து வந்திருக்கிறது. அதனால் திருவண்ணாமலையை அடுத்திருக்கும் தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை எடுத்திருக்கிறார். அதையடுத்து சுகாதாரத்துறையால் அவர் தனிமைப்படுத்தப்படாத நிலையில், திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.
அப்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதால், 11-ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்ததுடன், அத்தியந்தல் கிராமத்தில் இருக்கும் கொரோனா மருத்துவ முகாமில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்காத பிரகதாம்பாள் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
பார்வைக்கு வைக்கப்பட்ட கொரோனா தொற்று உடல்:
மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் நேற்று காலை அத்தியந்தல் கிராமத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு பிரகதாம்பாளை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத் திணறலும், இதய பிரச்னையும் இருப்பதாகக் கூறி அவருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் அடுத்த சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். அதையடுத்து அவரது உடலை உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் வைத்திருக்கின்றனர்.
அதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், `கொரோனா அறிகுறிகளுடன் இறந்தவரின் உடலை உறவினர்களின் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள்’ என்று நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மூதாட்டியின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவையும் ஆய்வு செய்தனர். அப்போது பிரகதாம்பாளுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவரது உடலை பாதுகாப்புடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் நகராட்சி ஊழியர்கள். தொடர்ந்து அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
`அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?’
அதேபோல துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறவினர்களின் பட்டியலைத் தயார் செய்திருக்கும் நகராட்சி நிர்வாகம், அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது. பிரகதாம்பாள் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத அவரின் கணவர் பாலகிருஷ்ணன், ``அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?” என்று உறவினர்களிடம் திரும்ப திரும்பக் கூறி அழுது கொண்டிருந்திருக்கிறார்.
Also Read: `பேய் பிடித்துவிட்டது, ஆத்தா இறங்கிவிட்டாள்!’ - மனைவியின் மூடநம்பிக்கையால் கணவனுக்கு நேர்ந்த சோகம்
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அங்கிருந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இறப்பிலும் இணைபிரியாத அந்தத் தம்பதியரின் உடல் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அரசு மருத்துவமனை நிர்வாகங்களே அடக்கம் செய்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சுகாதாரத்துறையின் அலட்சியம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/death/tiruvannamalai-woman-died-due-to-corona-husband-dies-hours-later
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக