Ad

வெள்ளி, 31 ஜூலை, 2020

மகாபிரதோஷம்: நந்தி பகவானை வணங்கி நலம்பெற வேண்டிய நாள் இன்று!

மாதம்தோறும் இரண்டு பிரதோஷங்கள் வந்தாலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் முக்கியமானது. இதை சனி மகாபிரதோஷம் என்று போற்றுவர். பொதுவாகவே பிரதோஷ வேளையில் செய்யப்படும் நந்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். சிவாலயங்களில் இந்த நாளில் நந்திபகவானுக்குப் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

நந்தி

நந்தி பகவான் சிவபெருமானின் கருணையால் தோன்றியவர். கற்களை மட்டுமே உணவாகக் கொண்டு தவம் செய்த சிலாதர் என்பவர் யாகம் செய்வதற்காக பூமியைத் தோண்டியபோது, ஒரு பொற்பெட்டி கிடைத்தது. அதில் அழகிய குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையை வீரகன் என்னும் திருநாமம் சூட்டி சிலாதர் வளர்த்துவந்தார். வீரகன் அழகிய இளைஞனாக மாறிவரும் காலத்தில் சிலாதரின் முன்பாகத் தோன்றிய மித்ரன், வருணன் ஆகிய தேவர்கள் வீரகன் விரைவில் மரணமடைவான் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்டு சிலாதர் வருத்தமடைந்தார். ஆனால் வீரகனோ, தான் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானாகிய சிவபெருமானை எண்ணித் தவம் செய்யப் போவதாகக் கூறினார்.

அதே போன்று ஸ்ரீ ருத்ர ஜபத்தை ஏழுகோடிமுறை ஜபம் செய்தார். இளமையில் மனம் கூடி வீரகன் செய்த இந்த ஜபத்தைக் கேட்ட சிவபெருமான் அவருக்குக் காட்சியருளி நந்தி என்று திருநாமமிட்டுத் தன் வாகனமாக ஏற்று, கணங்களுக்கெல்லாம் அவரைத் தலைவராக மாற்றி சாகாவரமளித்தார். சிவபெருமானே ஆசார்யனாக இருந்து அனைத்துக் கலைகளையும் நந்திக்கு அருளிச் செய்தார். பிற்காலத்தில் பூமியில் குருபரம்பரை தொடங்க நந்தியே முதல் காரணமானார்.

நந்தி

இத்தகைய சிறப்புகள் உடைய நந்திபகவானை வணங்க உகந்த தினம் பிரதோஷம். மகாபிரதோஷ தினத்தன்று நந்திக்குக் காப்பரிசி படைத்து வழிபடுவது வழக்கம். தற்காலத்தில் கோயில்கள் சென்று வழிபட முடியாத சூழல் நிலவுவதால், அனைவரும் வீட்டிலேயே சிவபூஜை செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். நந்திபகவான் ருத்ர ஜபம் செய்ததுபோல, ஸ்ரீ ருத்ரத்தின் பொருள் அனைத்தும் பொதிந்த சிவபுராண பாராயணம் செய்வதன் மூலம் சிவனருளையும் நந்திதேவரின் அருளையும் பெறமுடியும். இன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வீட்டில் அனைவரும் சிவபுராணம் பாடி சிவபெருமானைத் துதித்து இந்த சனிபிரதோஷ தினத்தைக் கடைப்பிடிக்கலாம்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-mahapradosham

``என் ட்விட்டர் பதிவு, குஷ்புவுக்கானது அல்ல!'' - கே.எஸ்.அழகிரி புது விளக்கம்

மத்திய பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் சூழலில், அந்தக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, `புதிய கல்விக் கொள்கை திட்டம் வரவேற்கப்பட வேண்டிய நகர்வு' என்று அதிரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது இந்தச் செயல்பாடு, காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், குஷ்புவின் கருத்துக்கு எதிர்வினையாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிர்ச்சியின்மை. விரக்தி ஒழுக்கமின்மையிலிருந்து வருகிறது. விரக்திக்கு சிறந்த மருந்து யோகா!" என்று ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்தார்.

கே.எஸ்.அழகிரியின் இந்தக் கருத்துக்குப் பதில் தெரிவித்த குஷ்பு, ``கே.எஸ்.அழகிரி, என்னுடைய பெயரைப் பதிவிட்டு எதுவும் சொல்லவில்லை. என்னுடைய கருத்துக்குப் பதில் சொல்வதாக இருந்தால், நேரிடையாக என்னை அழைத்துப் பேசுவார்" என்றார்.

இதற்கிடையே, குஷ்புவின் ட்விட்டர் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றுக்கு நேரிடையாக குஷ்பு பதில் கொடுத்தும் வருகிறார். இதில், `பா.ஜ.க-வுக்குத் தாவத் தயாராகிவிட்டார் குஷ்பு' என்ற கேள்வி அவரது ட்விட்டர் பக்கம் முழுவதும் நிரம்பி வழிகிறது.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக, ``நான் பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை. எனவே, சங்கிகள் மகிழ்ச்சியடைய வேண்டாம். புதிய கல்விக் கொள்கை குறித்த என் கருத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் நான் ரோபோ போன்று கைப்பாவையாக இல்லாமல், உண்மையைப் பேச விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகள் நல்லது. அதுதான் ஜனநாயகத்தின் உறுதியான அங்கம். எனவே, இது சொந்த சிந்தனையில் உதித்த என் தனிப்பட்ட கருத்து.

புதிய கல்விக் கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருக்கின்றன. ஆனாலும் மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன். `ஏன் படிக்கவில்லை...' என்பதற்கான காரணத்தைத் தேடிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. மாறாக, இந்தத் திட்டத்தின் மூலம், `எல்லோருக்கும் கல்வி கிடைக்கும்' என்ற மாற்றத்தை வரவேற்க வேண்டும் என்றே நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

குஷ்பு

தமிழக அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு `புதிய கல்விக் கொள்கை'க்கு எதிராகப் பேசிவரும் நிலையில், குஷ்பு இந்த விஷயத்தில் புதிய நிலைப்பாடு எடுத்திருப்பது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்த நிலையில், `புதிய கல்விக் கொள்கையில் நீங்கள் வரவேற்பு தெரிவிக்கும் அம்சம் என்ன?' என்ற கேள்விக்குப் பதில் கேட்டு, குஷ்புவிடம் பேசினோம்...

``புதிய கல்விக் கொள்கைத் திட்டம் பற்றிய விவரங்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொண்ட பிறகுதான் நான் என் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டேன். மேலும், இந்தத் திட்டத்தில் எனக்கு என்னென்ன அம்சங்கள் பிடித்திருக்கின்றன; என்னென்ன விஷயங்கள் பிடிக்கவில்லை என்பது மாதிரியான அனைத்து விவரங்களையும்கூட தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன்.

குஷ்பு

எனவே, மறுபடியும் இதுபற்றி விரிவாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் இதுகுறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை. தப்பாக நினைக்காதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நமக்கு எழும் கேள்விகளை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டோம்...

``காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்புவே, கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாரே..?''

``அவரது ட்விட்டர் பதிவை இதுவரையில் நான் முழுவதுமாகப் படிக்கவில்லை.''

கே.எஸ்.அழகிரி

``கருத்து சுதந்திரம் காங்கிரஸ் கட்சியில் உண்டு. ஆனால், கட்சிக்கு வெளியே பேசக்கூடாது என்று நீங்களும் ட்விட்டரிலேயே பதில் கொடுத்திருக்கிறீர்களே..?''

``அது என்னுடைய பதிவுதான். ஆனால், அந்தப் பதிவின் எந்த இடத்திலும் நான் குஷ்புவின் பெயரைக் குறிப்பிடவேயில்லை. பின் எப்படி, அது குஷ்புவுக்கான பதில் என்று நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள்?''

``குஷ்பு, நேற்றைய தினம் ஆதரவு கருத்து தெரிவித்திருந்த நிலையில் இன்றைக்கு நீங்கள் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறீர்களே?''

``என்னுடைய பதிவு குஷ்புவுக்கானது அல்ல... அது எல்லோருக்குமே பொருந்தக்கூடியது. எனக்கேகூட அது பொருந்தும். பொதுவான அந்தக் கருத்தை எல்லா கட்சியினருமே கடைப்பிடிக்க வேண்டும்.''

புதிய கல்விக் கொள்கை

``கடந்தகாலத்தில், ரஜினிகாந்த்துக்கு ஆதரவாகச் செயல்பட்டார், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பேசினார் என்பதற்காக கராத்தே தியாகராஜனை இடைநீக்கம் செய்த, தமிழக காங்கிரஸ் கமிட்டி, குஷ்பு மீது மட்டும் கருணைப் பார்வை காட்டுகிறதே ஏன்?''

``கராத்தே தியாகராஜன் மீது காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைக்கும் ரஜினிகாந்த் விஷயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது முடிந்துபோன விஷயம். அதற்கான சூழல் வேறு; இதற்கான சூழல் வேறு. எனவே, இரண்டு நிகழ்வுகளையும் பொதுமைப்படுத்த வேண்டாம்.''

``கட்சிக் கட்டுப்பாட்டை மீறிப் பேசினார் என்பதால்தானே கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார்?''

``மறுபடியும் சொல்கிறேன்... இரண்டு நிகழ்வுகளையும் பொதுமைப்படுத்த வேண்டாம். அந்தப் பிரச்னை வேறு; இந்தப் பிரச்னை வேறு!''

கே.எஸ்.அழகிரி

``குஷ்பு, தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதால், அவர் மீதான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமைதான் எடுக்க வேண்டும் என்கிறீர்களா?''

``நீங்கள் சொல்வது மாதிரி எதுவுமே இல்லை... குஷ்பு, ஒரு கருத்துச் சொல்லியிருக்கிறார்... அவ்வளவுதான். `யாராக இருந்தாலும், கருத்துச் சொல்லும்போது எப்படிச் சொல்ல வேண்டும்' என்பது பற்றி நானும் ஒரு விளக்கத்தைச் சொல்லியிருக்கிறேன். அது குஷ்புவுக்காகச் சொல்லப்பட்ட விளக்கம் அல்ல'' என்று உறுதியாக மறுத்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-in-tamilnadu-congress-party-over-kushboos-tweet-on-new-education-policy

தேனி: `தனி நபர் பயன்படுத்திய உழவர் உற்பத்தியாளர் குழு டிராக்டர்!’ - கொதித்த விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, விளைபொருள்கள் உற்பத்தியினை பெருக்க வழிவகை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, உழவர் உற்பத்தியாளர் குழு எண் 3-ல், ஸ்ரீரெங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்து கிராம விவசாயிகள் 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவிற்கு 2018-ம் ஆண்டு வேளாண்துறை சார்பில் டிராக்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், குழுவில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் டிராக்டர் வழங்கப்பட்டது தெரிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டும் விவசாயிகள், ஒரு தனி நபர் தலைமையிலான 10 பேர் மட்டுமே அந்த டிராக்டரை கடந்த 2 ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்ததை தற்போது கண்டுபிடுத்துள்ளனர்.

டிராக்டர்

Also Read: தேனி: `கறுப்பு கவுணி புட்டு; சிவப்பு அவல் உப்புமா!’ - அசத்தும் சித்த மருத்துவ சிகிச்சை மையம்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய ஸ்ரீரெங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி, ``2016-ம் ஆண்டு குழு ஆரம்பிக்கப்பட்டது. குழுவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதத்தில் டிராக்டர் வழங்கியுள்ளது அரசு. ஆனால், ஸ்ரீரெங்கபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், அதனை குழுவில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல், தன்னுடைய பயன்பாட்டிற்கும், தன்னுடைய உறவினர்களின் பயன்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்திவந்துள்ளார். இதனைக் கண்டுபிடித்து அவரிடம் கேட்டபோது, ’இது என்னுடைய டிராக்டர், இதில் என்னுடைய பெயரும், குல தெய்வத்தில் பெயரை எழுதி வைத்திருக்கிறேன் பாருங்கள்’ என்று கதை விட்டார்.

டிராக்டரின் பதிவு எண்ணை வைத்து நாங்கள் நடத்திய விசாரணையில், அது குழுவிற்குச் சொந்தமான டிராக்டர் எனத் தெரியவந்தது. இதுவரை டிராக்டரை 1,692 மணி நேரங்கள் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். அந்த டிராக்டரை மீட்க வேண்டும், குழு உறுப்பினர்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

டிராக்டர்

வேளாண்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``அந்த நபர் டிராக்டரை பயன்படுத்திய மணி நேரத்திற்கான பணத்தை கட்டுவதாகக் கூறியிருக்கிறார். அந்தப் பணம், குழுவிற்குச் சென்றுவிடும். மேலும், குழு உறுப்பினர்கள் அனைவரும் டிராக்டரைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

Also Read: தேனி: `4 மாதத்துக்குப் பிறகு உயர்ந்த வெல்லம் விலை!’ - ஓணம் குஷியில் விவசாயிகள்



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/one-man-privately-used-farmer-producer-group-tractor-in-theni-created-controversy

கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் ஆகியோரிடம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். அடுத்ததாக என்.ஐ.ஏ திருவனந்தபுரத்தில் வைத்து ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர். அடுத்ததாக கடந்த திங்கள்கிழமை கொச்சிக்கு அழைத்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அன்று விசாரணை முடிவடையாததால் மறுநாளும் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. மேலும், சிவசங்கரன் பணிபுரிந்த திருவனந்தபுரம் தலைமைச் செயலக நார்த் ப்ளாக்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்யும் படலத்தில் இறங்கியுள்ளன. ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் தங்கம் கடத்தலில் யு.ஏ.இ துணைத் தூதருக்கு பங்கு கொடுத்ததாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிவசங்கரனின் ஆகியோர் பதுக்கி வைத்துள்ள பணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்

திருவனந்தபுரத்தில் உள்ள இரண்டு வங்கிகளில் ஸ்வப்னா கணக்கு வைத்துள்ளது கண்டறியப்பட்டது. அந்த வங்கிகளுக்கு கடந்த வாரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஸ்வப்னாவை அழைத்துச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வங்கி லாக்கர்களை திறந்து பார்த்தபோது அதில் 1.05 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 123 சவரன் அதாவது சுமார் ஒரு கிலோ தங்க நகைகளும் லாக்கரில் இருந்து எடுக்கப்பட்டன.

Also Read: பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்

பணம் மற்றும் நகை குறித்து ஸ்வப்னா சுரேஷிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது யு.ஏ.இ தூதரக அதிகாரியுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதில் தனது பங்காகக் கிடைத்த தொகைதான் இந்தப் பணம் எனவும் ஸ்வப்னா தெரிவித்திருக்கிறார். மேலும், முதல் திருமணத்தின்போது தனக்கு ஐந்து கிலோ நகைகள் போடப்பட்டதாகவும். வீடு வைக்கும் பணிக்காக அந்த நகைகளை விற்பனை செய்ததாகவும், மீதி நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததாகவும் ஸ்வப்னா கூறியிருக்கிறார்.

ஸ்வப்னா சுரேஷ்

இதை நம்பாத அதிகாரிகள் பணத்தை வங்கிக்கணக்கில் போடாமல் லாக்கரில் வைத்தது ஏன் என்பதுபோன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் சார்ட்டர்ட் அக்கவுன்டன்டிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதிக சிவசங்கரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஸ்வப்னாவின் வங்கி லாக்கர் திறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: கேரளா: `தங்கம் கடத்தலில் துணை தூதருக்கு பங்கு!’ - விசாரணையில் அதிரவைத்த ஸ்வப்னா



source https://www.vikatan.com/government-and-politics/crime/swapna-suresh-locker-open-regarding-the-gold-smuggling-case

தஞ்சை: `வங்கிக் கணக்கிலிருந்து மாயமான பணம்!’ - சினிமாவை விஞ்சும் ஹைடெக் மோசடி

நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வருவது போல் தஞ்சாவூரில் நிஜத்திலும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்த ஹைடெக் மோசடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரூ. 5 கோடி வரை இந்த மோசடியில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வங்கி கணக்கு புத்தகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கியின் வாடிக்கையாளர்கள், சிலருக்கு அவர்கள் பணம் எடுக்காமலேயே பணம் எடுக்கப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ் வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. அதிலும் சில வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து அடுத்தடுத்து ரூ.50,000 வரை மர்ம நபர்கள் எடுத்தது, பாதிக்கப்பட்ட பலரையும் பதைபதைக்க வைத்தது.

மேலும், இது போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து, இந்தச் சம்பவம் தஞ்சை மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் பாதிக்கப்பட்ட சிலர் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று எனது வங்கி கணக்கிலிருந்து நான் பணத்தை எடுக்கவில்லை, ஆனால் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

பணம் எடுக்கப்பட்டதாக வந்த எஸ்.எம்.எஸ்

இதனை கேட்ட வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக எங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கி நிர்வாகத்தை நம்பியே வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துகின்றனர். வங்கியில் இருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணமும் இதற்குக் காரணம்.

ஆனால், வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட பணமே எங்களுடைய அனுமதி இல்லாமல் மர்ம நபர்கள் எடுக்கின்றனர். வங்கி நிர்வாகம்தான் இதன் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால், தங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போல் நிர்வாகத்தில் பேசுவது வேதனையைத் தருகிறது என புலம்பியபடியே நூதன மோசடி மூலம் பணத்தை இழந்த சிலர் தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

ஹேக்கிங்

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``வங்கிக் கணக்கு எண்ணை ஹேக் செய்து சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே ஏ.டி.எம் மிஷின் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் ஹைடெக் மோசடி கடந்த சில வாரங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்க வங்கி நிர்வாகத்தில் மெத்தனம் காட்டியதால் இவை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.

கடந்த வாரத்தில் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் 2-லிருந்து 3 கோடி ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டது. அப்பகுதியினர் வெளிநாடு மற்றும் பல்வேறு தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து வருவதால் எப்போதும் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். இதனை அறிந்த மோசடி கும்பல் அங்கே கைவரிசையைக் காட்டியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

வங்கியின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள்

இதனால் அதிர்ந்த அப்பகுதி வாடிக்கையாளர்கள் வங்கியில் முறையிட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் விசாரணை செய்த நிலையில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து மோசடியாக பணம் எடுக்கப் பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டதட்ட நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வருவது போலவே நிஜத்திலும் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது இது தொடர்பான வழக்குகளை தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார், சென்னையில் உள்ள எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினர்.

ஹேக்கிங்

இது குறித்து பாதிக்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரிடம் பேசினோம், ``என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் 40,000-க்கும் மேல் பணத்தை எடுத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ந்த நான் எனது பாஸ்புக்கில் பதிவு செய்து பார்த்தேன். பின்னர் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

அதன் பிறகுதான் என்னை போன்ற பலர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது எனக்கு தெரிய வந்தது. வங்கி நிர்வாகத்தினர் இதில் துரித நடவடிக்கை எடுத்தால் மேலும் பலர் பாதிக்கப்படாமல் காக்கலாம். அத்துடன் குற்றவாளிகள் தப்பி விடாமல் உடனடியாகப் பிடித்து விடலாம்” எனத் தெரிவித்தார்.

பாலசுந்தரம்

இது குறித்து அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஊழியர்கள் கூறியதாவது, ``இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், நாங்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸிடம் மனு அளித்துடன், இதனை தலைமை அலுவலகத்துக்கும் தெரிவித்தோம். இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/bank-fraud-happen-in-thanjavur-investigation-on

கர்நாடகா: `குழந்தைகளுக்கு கல்வி முக்கியம்!’ - தாலியை விற்று டி.வி வாங்கிய தாய்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாகி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான இறுதியான முடிவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் எடுக்கவில்லை. இதனால், பல்வேறு பள்ளிகளும் ஆன்லைன் வழியாக வகுப்பை எடுத்து வருகின்றன. இதனால், ஏழை மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையில் நன்றாகப் படிக்கும் திறமை உள்ள மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு தற்கொலை செய்துகொள்ளும் முடிவையும் கையில் எடுக்கின்றனர். இதனால், ஆன்லைன் வழியான வகுப்புகளுக்கு எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

குழந்தைகள்

பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கி அவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. இன்னும் சில மாநிலங்களில் தொலைக்காட்சியின் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனினும், தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பான விவாதங்களும் இருந்து வரும் நிலையில் கர்நாடக மாநிலம் தொலைக்காட்சியின் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தன் குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதிப்படைக் கூடாது என்பதற்காக அம்மாநிலத்தில் கடக் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது தாலியை அடமானம் வைத்து குழந்தைகளின் கல்விக்காகத் தொலைக்காட்சி வாங்கியுள்ள செய்தி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

டி.வி

இதுதொடர்பாகக் குழந்தைகளின் தாய் கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஆசிரியர் எங்களை தொலைக்காட்சி வாங்க வலியுறுத்தினார். ஆனால், எங்களிடம் அதற்கான பணம் இல்லை. தினமும் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகளுக்காகத் தொலைக்காட்சி வாங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்ரனர்.

Also Read: புதிய கல்விக் கொள்கை `அனைவருக்கும் கல்வி டு எம்.பில் நிறுத்தம்!’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்



source https://www.vikatan.com/news/india/mother-sell-her-mangalsutra-to-buy-a-tv-for-her-childrens-education

ரஃபேல்: 126 போர் விமானங்கள் 36 ஆனது எப்படி?! - 13 ஆண்டுகளில் நடந்தது என்ன? #RafaleAToZ

ரஃபேல்... கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியலில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஓர் பெயர். பி.ஜே.பி அரசு மீது, `ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது' எனத் தொடர்ந்து காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கிய காரணத்தால் இந்திய அரசியலில் மிக முக்கிய பேசு பொருளானது ரஃபேல். கடந்த ஆண்டின் இறுதி வரையிலுமே ரஃபேல் பற்றிய ஏதோ ஒரு செய்தி வந்துகொண்டேதான் இருந்தது. கொரோனா நோய்த்தொற்று இந்தியாவுக்குள் வந்ததிலிருந்து ரஃபேல் பற்றிய செய்திகளே இல்லாமல் போயின. ஆனால், கடந்த வாரத்திலிருந்து மீண்டும் செய்திகளாக மாறத் தொடங்கியிருக்கிறது ரஃபேல் போர் விமானம்.

ரஃபேல் விமானம்

கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா போர்ப் படைத் தளத்துக்கு, முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் வந்து இறங்கின. இதன் காரணமாகத்தான் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது ரஃபேல் என்னும் பெயர்.

விமானங்கள் இந்தியா வந்திறங்கிய அன்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஃபேல் விமானங்கள் வந்து இறங்கியதற்காக இந்திய விமானப் படைக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் ரஃபேல் குறித்த மூன்று முக்கியக் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார். அந்த மூன்று கேள்விகள்...

கேள்வி 1: ஒவ்வொரு ரஃபேல் விமானத்தையும் ரூ. 526 கோடிக்கு வாங்குவதற்குப் பதிலாக ரூ.1,670 கோடிக்கு வாங்கியது ஏன்?
கேள்வி 2: 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஏன் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டுள்ளன?
கேள்வி 3: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (HAL) ரஃபேல் ஒப்பந்தம் அளிக்கப்படாமல், வங்கி மோசடியில் ஈடுபட்டு திவாலான அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?

ராகுல் காந்தியின் இந்த 3 சரமாரியான கேள்விகளின் காரணமாக மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது ரஃபேல் விவகாரம். 2007-ம் ஆண்டு தொடங்கிய இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பல சர்ச்சைகளையும், வழக்குகளையும் சந்தித்திருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக ரஃபேல் விவகாரம் பயணித்த பாதை என்னவென்பதைதான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்..!

காங்கிரஸ் ஒப்பந்தம்

2007-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தியாவின் போர்ப் படையை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2012-ல் இறுதிசெய்யப்பட்டது. இதில், பறக்கத் தயாரான நிலையில் உள்ள 18 ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் `டசால்ட்' விமான நிறுவனம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்துடன் இணைந்து `தொழில்நுட்ப பகிர்வு' மூலம் இந்தியாவிலேயே கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

மன்மோகன் சிங்

2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமராகப் பதவியேற்றார் மோடி. 126 ரஃபேல் விமானங்கள் வாங்க ஏற்படுத்திவைத்திருந்த ஒப்பந்தத்திலிருந்து சில காரணங்களால் பின்வாங்கியது மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு. அதாவது, இரட்டை இன்ஜின் கொண்ட ரஃபேல் விமானங்கள் மிகவும் அதிக விலையுள்ளதாக இருந்தன. ஒப்பந்தங்களுக்குள் விவாதம் நடைபெற்றும் நீண்டநாள்களாகியிருந்தன. எனினும், இந்திய விமானப் படையைப் புதுப்பிக்கவும், தரத்தை உயர்த்தவும் உடனடி அவசியம் இருந்ததனால், தொழில்நுட்ப பகிர்வுசெய்த, 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக, பறக்கத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவுசெய்தது.

பி.ஜே.பி அரசின் ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு உறுதிசெய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், பிரான்ஸின் டசால்ட் விமான நிறுவனம், இன்ஜின் உற்பத்தி நிறுவனமான சாஃப்ரான் மற்றும் மின்னணு அமைப்பு நிறுவனமான தேல்ஸ் இணைந்து தொழில்நுட்பங்களை டி.ஆர்.டி.ஓ உடன் பகிர்ந்து உற்பத்தி செய்வதாக முடிவானது.

Modi

Also Read: ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றபோது, பிரான்ஸ் - இந்தியா இடையிலான இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையே இறுதிசெய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், 36 விமானங்களுக்கு 59,000 கோடி ரூபாய் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக, 15 சதவிகித முன்பணம் செலுத்தவும் முடிவுசெய்யப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் மற்ற ஆயுதங்கள், உதிரிபாகங்கள் மற்றும் விண்கற்களைத் தாக்கும் உலகின் அதிநவீன ஏவுகணை ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டது. ரஃபேல் விமான உதிரிபாகங்கள் இந்தியாவில் தயார் செய்யவும், பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்குகள் போன்றவை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

காங்கிரஸின் குற்றச்சாட்டு

இந்த ஒப்பந்தம் வெளியான சில மாதங்களிலேயே, அதன்மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கியது. குறிப்பாக, விமானம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது எனவும், இதன் காரணமாக, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்துக்கு வெறும் 10 நாள்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது எனவும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. இதற்குக் காரணம், இந்த ஒப்பந்தம் கையொப்பமானபோது பதவியிலிருந்த பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்த், ``இந்த ஒப்பந்தத்தின்படி டசால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இறுதிசெய்தது இந்திய அரசுதான்’’ என்று கூறியிருந்தார்.

மேலும், ``வெளிப்படைத்தன்மையினைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று சொன்னதுடன், அந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்." எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன.

Rafale

இதுகுறித்து அந்த சமயத்தில் பிரான்ஸ் நாட்டின் புலனாய்வுச் செய்தி நிறுவனமான மீடியாபார்ட், செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

அதில், ``ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்தச் செய்தி எதிர்க்கட்சிகளின் வாதத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

சௌகிதார் சோர் ஹை!

`இந்த நாட்டின் காவலர் ஓரு திருடர்' என்ற பொருள் கொண்ட `சௌகிதார் சோர் ஹை' என்ற முழக்கத்தை முன் வைத்து ரஃபேலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ராகுல் காந்தி.

மேலும், ``ரஃபேல் ஒப்பந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்பட்டால், மோடி, அனில் அம்பானி போன்றவர்களுடன் சேர்ந்து சிறையில் இருப்பார். ரஃபேல் ஊழல் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று தொடர்ந்து மத்திய அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்

ராகுல் காந்தியின் கருத்துக்குப் பதிலளித்த அப்போதைய மத்திய நிதியமைச்சரும், மறைந்த பி.ஜே.பி. மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, ``ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபருக்குச் சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. ரஃபேல் தொடர்பாக, காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை; ரஃபேல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கற்பனையானவை; மத்திய அரசு வெளியிட்ட அனைத்துத் தரவுகளும் உண்மையானவை; ராகுல் காந்தி தெரிவித்த அனைத்துத் தரவுகளும் போலியானவை. உண்மைக்கு எப்போதும் ஒரேயொரு வடிவம்தான். பொய்கள்தான் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும். அதனால், ராகுல் காந்தி பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் வெறும் விமானத்தின் விலைக்கும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானத்தின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல்கூட இல்லாத ஜென்டில்மேன், காங்கிரஸின் தலைவராக இருப்பது மிகவும் சோகமானது" என்றார்.

அருண் ஜெட்லி

``காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையைவிட, 9 சதவிகிதம் விலை குறைவாகவே ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. பிரதமர் மோடி ஊழல்வாதி அல்ல" என அப்போது ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

இந்த வழக்கில் காங்கிரஸால் குற்றஞ்சாட்டப்பட்டவரும், தொழிலதிபருமான அனில் அம்பானி, ``தம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது; துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவர்களாலும், தொழில்முறைப் போட்டியாளர்களாலும் பரவுகிறது. உண்மை மட்டுமே வெற்றிபெறும். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்" என்றார்.

அனில் அம்பானி

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அவப்பெயர் ஏற்படுத்தியதாக 5,000 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கக்கோரி, அனில் அம்பானி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ``இதில், ராகுல் காந்தி பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை" எனப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு, அனில் அம்பானி பதில் சொல்லவில்லை.

மக்களவையில் ரஃபேல் விவகாரம்

இதற்கிடையே, ரஃபேல் ஊழல் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி-க்கள், கடும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் அவையில், கூச்சல் குழப்பம் நிலவியது. `மத்திய அரசுக்குத் தைரியமிருந்தால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என காங்கிரஸ் வலியுறுத்தியது.

மக்களவையில் ராகுல் காந்தி

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையைத் தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் நேரத்தில், ரஃபேல் குறித்து ராகுல் காந்தி பேசியது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதவிர தமிழகத்தில், `நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிடவிடாமல் தடைசெய்து, புத்தகங்களையும் பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

``ரஃபேல் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தாண்டா, ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், `இதுதொடர்பாகப் புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும்' என காங்கிரஸ் கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

Supreme Court

Also Read: `39 ஆண்டுகள்; 4,250 மணிநேரம் வானில் பறந்த அனுபவம்; ரஃபேல் குழு!' - யார் இந்த ஆர்.கே.எஸ்.பதாரியா?

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், `ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்துள்ளது. அது, நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையை ஏற்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ``ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை" எனச் சொல்லி மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

``மத்திய அரசு கொடுத்த அறிக்கை தவறானது" எனச் சொல்லி, பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் அந்த வழக்கு மீது மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அத்துடன் தி ஹிந்து நாளிதழ் ஒன்றில் வெளியான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ``ராணுவ அமைச்சகத்திடமிருந்த ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது. எனவே, அந்த ஆவணங்களின் அடிப்படையில் எதிர்தரப்பு தாக்கல் செய்திருக்கும் சில குறிப்புகளை இந்த நீதிமன்றம் ஏற்கக்கூடாது" என்று வாதாடினார்.

ரஃபேல்

``திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துவிட முடியுமா?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியதுடன், ``அந்த ஆவணங்கள் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியது. இந்தத் தீர்ப்பை வரவேற்ற ராகுல் காந்தி, ``ரஃபேல் விவகாரத்தில், தன்னைக் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் முன்னர் கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை நடத்த சம்மதித்ததன்மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என உச்ச நீதிமன்றம் கருதுகிறது" என்னும் பொருள்படி கூறியிருந்தார்.

ராகுல் காந்திமீது வழக்கு

உச்சநீதிமன்றம் சொல்லாமல், இப்படியொரு கருத்தை ராகுல் காந்தி சொன்னதற்காக, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பி.ஜே.பி கூறியதுடன், அவர்மீது வழக்கும் தொடரப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``ரஃபேல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்துக் கூறுகிறார். அவரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன. ரஃபேல் குறித்து வெளியான ஒருசில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரஃபேல் வழக்கில் ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி? ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார்." என்றார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரஃபேல் சர்ச்சைகள் நீண்டு வந்த நிலையில், 17-வது நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. அபார வெற்றிபெற்றதுடன், மீண்டும் மோடியே பிரதமரானார். அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தச் சூழலில், 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியாவுக்கான பிரான்ஸ் தலைமைத் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர், ``பிரான்ஸிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில், முதல் போர் விமானம் இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படும். மற்ற போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்

இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ரஃபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ரஃபேல் விமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸில் உள்ள மெரிக்நாக் நகருக்குச் சென்றார்.

ரஃபேல் விமானத்தில் ராஜ்நாத் சிங்

அங்கு சென்ற ராஜ்நாத் சிங், அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி ராணுவ விமானத்தில் பயணித்தார். பின்னர், பிரான்ஸிடமிருந்து முதல் ரஃபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார்.

ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த விமானத்தின் மீது சமஸ்கிருத மொழியில் `ஓம்' என்று எழுதியும், சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழம் வைத்தும் பூஜை செய்தார். இதற்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன.

ரஃபேல் விமானம்

Also Read: ரஃபேல் சக்கரத்தில் எலுமிச்சம்பழம்... சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதங்கள்!

இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``இதில் என்ன தவறு? அதை, நீங்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம்; மூடநம்பிக்கை என்று நினைக்கலாம். அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. நம்பிக்கை இருப்பவர்கள் செய்யட்டும். ராஜ்நாத் சிங் செய்ததெல்லாம் சரியென்றே நான் கருதுகிறேன். இவையெல்லாம் இந்தியக் கலாசாரத்தைச் சேர்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இதைச் செய்கிறார்கள். முன்பு, ராணுவ மந்திரியாக இருந்தவரும், அவருடைய மனைவியும் கடற்படைக் கப்பலைத் தொடங்கிவைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர். இப்போது கவலைப்படுபவர்கள், அப்போது எங்கேயிருந்தனர்?” என்றார்.

இறுதித் தீர்ப்பு!

ரஃபேல் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டுமெனத் தக்கல் செய்யப்பட்ட மனுக்களை, கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியன்று, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

Rahul Gandhi

அதே நாளில், ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவமதிப்பு வழக்கிற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. `ரஃபேல் வழக்கில் மோடியை நீதிமன்றமே திருடர் எனக் கூறிவிட்டது' என்று பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி. அதன்பின், ``இனி நீதிமன்ற தீர்ப்புகள் குறித்துப் பேசும்போது ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும்" என்று கூறி அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்குப் பின் ரஃபேல் விவகாரம் பற்றிய சர்ச்சைகள் அடங்கியிருந்தன. கடந்த புதன்கிழமையன்று ரஃபேல் போர் விமானம் இந்தியாவில் தரையிறங்கியதிலிருந்து மீண்டும் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 2 நாள்களாக சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரஃபேல் விவகாரம் குறித்த விவாதங்களை மீண்டு தொடங்கியுள்ளனர்.

மிக நீண்ட பயணம் கொண்ட இந்த ரஃபேல் விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா, இல்லை ஓரிரு நாள்களில் அடங்கிவிடுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்புகளை கீழுள்ள இன்ஃபோகிராக்ஸில் காணலாம்...
Rafale


source https://www.vikatan.com/government-and-politics/policies/a-brief-timeline-of-rafale-deal-and-its-controversies

`ஜெ. விருது வழங்கும் படம்; கழட்டி வீசிய அமைச்சரின் ஆதரவாளர்கள்?’ - மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடி நகராட்சி அலுவலக முகப்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் போட்டோ ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் கழட்டி வீசியதாகக் கூறப்படும் சம்பவம் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஆர்.காமராஜுடன் கோபி , ஆர்.ஜி.குமார்

மன்னார்குடி நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுதா அன்புச்செல்வன். இவர் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது 2015-ம் ஆண்டு தமிழகத்திலேயே இரண்டாவது சிறந்த நகராட்சியாக மன்னார்குடி நகராட்சியை ஜெயலலிதா அறிவித்ததுடன் அதற்கான பாராட்டுச் சான்றிதழையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போது வாங்கினார்.

ஜெயலலிதாவிடம் பாராட்டுச் சான்று மற்றும் விருது வாங்கும் அந்த போட்டோவை சுதா பிரேம் செய்து நகராட்சி அலுவலகத்தின் முகப்பில் மாட்டியிருந்தார். கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அந்த போட்டோ அதே இடத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமாரின் ஆதரவாளர்கள் சிலர் அந்த போட்டவை கழட்டி வீசி உடைக்க முயன்றதாகத் தெரிகிறது. ஜெயலலிதா இருக்கும் போட்டோவை அ.தி.மு.க-வினரே கழட்டி வீசியது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குட்டி மணி

இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், `மன்னார்குடி நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுதா அன்புச் செல்வன். இவர் தற்போது மன்னார்குடி நகர மகளிரணி செயலாளராக உள்ளார். இவருடைய கணவர் அன்புச் செல்வன் முன்னாள் கவுன்சிலராகவும், தற்போது நகரத் துணை செயலாளராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் அமைச்சரின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார் தரப்புக்கும் சுதா தரப்புக்கும் அவர் நகர்மன்றத் தலைவராக இருக்கும் போதிலிருந்தே சுத்தமாக ஆகாது. சுதா, அமைச்சர் ஆர்.காமராஜ் சொல்லும் விஷயங்களை உடனே செய்துவிடுவார். ஆனால், ஆர்.ஜி.குமார் சொல்லும் விஷயங்களை செய்யவும் மாட்டார், கண்டுகொள்ளவும் மாட்டார்.

மன்னார்குடி நகராட்சி அலுவலகம்

இதனால் குமாரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் கோபி, குட்டி மணி ஆகியோர் சுதா மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வந்தனர். சிறந்த நகராட்சிக்காக ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் போட்டோவை மன்னார்குடி நகராட்சி அலுவலக முகப்பில் சுதா மாட்டி வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அங்கு சென்ற கோபி, குட்டி மணி அந்த போட்டோவைக் கழட்டி கீழே வீசியதுடன் உடைக்கவும் முயன்றுள்ளனர். அங்கிருந்த சிலர் இதைத் தடுத்துள்ளனர்.

இதை நகராட்சி ஊழியர்கள் சிலர் சுதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஏற்கெனவே இதே போல் ஒருமுறை போட்டோவை உடைத்துள்ளனர். அப்போது நகராட்சி ஊழியர்களே போட்டோவை சரி செய்து வைத்த சம்பவமும் நடைபெற்றது. தற்போது மீண்டும் அதைச் செய்துள்ளனர்.

ஜெயலலிதா - சுதா அன்புச்செல்வன்

சுதாவை இழிவுபடுத்துவதாகக் கூறி அ.தி.மு.க-வினரால் வணங்கப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போட்டோவை கீழே வீசியது அ.தி.மு.க நிர்வாகிகள் பலரையும் வேதனையில் ஆழ்தியுள்ளது. இது தொடர்பாக சுதா, அமைச்சர் ஆர்.காமராஜிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மன்னார்குடி அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

இது தொடர்பாக ஆர்.ஜி.குமாரிடம் பேசினோம், ``இரவு 11 மணி வரை நகராட்சி அலுவலக வளாகத்தில் லைட் எரிந்து கொண்டிருந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்ற முன்னாள் கவுன்சிலரான கோபி பார்த்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு நகராட்சி ஊழியர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைக் கண்டித்ததுடன் லைட்டையும் ஆஃப் செய்ய சொல்லியிருக்கிறார். அப்போது குறிப்பிட்ட போட்டோவில் பொருத்தப்பட்டிருந்த லைட்டும் நின்றது. இதை போட்டோவை உடைத்து விட்டதாக வேண்டுமென்றே சிலர் பரப்பி வருகின்றனர். இதய தெய்வம் அம்மா இருக்கும் போட்டோவுக்கு அ.தி.மு.க-வை சேர்ந்தவர்களே அவமரியாதை செய்வார்களா? என்றார்.

ஆர்.ஜி.குமார் உடன் கோபி

முன்னாள் நகர்மன்ற தலைவர் சுதாவிடம் பேசினோம், ``சின்ன பசங்க காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதைச் செய்துவிட்டனர். அமைச்சர் ஆர்.காமராஜ், அவர்களைக் கூப்பிட்டு கடுமையாகக் கண்டித்துவிட்டார். அதனால் இதைப் பெரிதுபடுத்தவில்லை நீங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/news/politics/is-the-photo-of-jayalalitha-was-removed-from-manargudi-municipality-office

Corona Live Updates: `இந்தியாவில் ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா’ - 17 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு

இந்தியாவில் 17 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,94,374 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,93,58,659 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 5,25,689 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/01-08-2020-corona-live-updates

``முதல் படத்துக்கே ஆனந்த விகடன் விருது... புக்கைப் பார்த்ததும் அனில்..!'' - V.Z.துரை #RIPAnil

மலையாள நடிகர் அனில் முரளி, உடல் நலக்குறைவால் காலமானது மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷாம் நடித்த `6 மெழுகுவர்த்திகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனில் முரளி, இந்த ஆண்டு வெளியான `வால்டர்’ படம் வரைக்கும் பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். இவரை `6 மெழுகுவர்த்திகள்’ படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் வி.இசட்.துரை, அனில் முரளி குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

``அனில் முரளி அவர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?"

`` `6 மெழுகுவர்த்திகள்’ படத்துல பெண்மை கலந்த ஆண் கதாபாத்திரம் ஒண்ணு இருந்தது; அதுதான் படத்தோட வில்லன் கேரக்டர். மலையாளம் கலந்த தமிழில் பேசக்கூடிய அந்தக் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம்னு பல யோசனைகளுக்குப் பிறகு, அனில் முரளி சாரை கமிட் பண்ணேன். அனில் சாருக்கு இதுதான் முதல் தமிழ்ப்படம். அவர் மலையாளத்தில் பெரிய நடிகராக இருந்தாலும், தமிழ் தெரியாததால் இந்தப் படத்தில் நடிக்க தயங்குவாரோனு நினைச்சேன். ஆனால், அவர் ரொம்ப ஆர்வமா இருந்தார். இந்தப் படத்தில் அவரோட காஸ்ட்யூம், பாடி லாங்குவேஜ் எல்லாமே வித்தியாசமா இருக்கும். அதனால, ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த கேரக்டரில் நடிக்கிறதுக்காக அனில் சாருக்கு கொஞ்சம் ட்ரெய்னிங்கும் கொடுத்தோம்.

VZ durai

ஷூட்டிங் நடக்கும் போதும் ரொம்ப ஆர்வமா இருந்தார். தமிழில் பேசி நடிக்கிறதில் அவருக்கு கொஞ்சம் சிரமங்கள் இருந்தனால, அவரை, `மலையாளத்திலேயே பேசி நடிங்க’னு சொன்னேன். ஆனால், அவர் கஷ்டப்பட்டு, முயற்சி பண்ணி தமிழிலேயே பேசி நடிச்சார். தமிழ் சரியா பேச வரலைனாலும், அவர் கேரக்டருக்கு அவரே மெனக்கெட்டு டப்பிங்கும் பேசினார். படம் ரிலீஸானதுக்குப் பிறகு அவரோட நடிப்பை பல பேர் பாராட்டினதும், ரொம்ப சந்தோஷப்பட்டார். முக்கியமா, அந்த வருடத்தோட சிறந்த வில்லனுக்கான ஆனந்த விகடன் விருது அவருக்கு கிடைச்சது. அந்த புக்கைப் பார்த்ததும், என்னை நேரில் பார்க்கணும்னு உடனே என் வீட்டுக்கு வந்துட்டார். `நான் நடிச்ச முதல் தமிழ்ப்படத்திற்கே விருது கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்’னு சொன்னார்.’’

`` `6 மெழுகுவர்த்திகள்’ படத்திற்குப் பிறகு உங்க இருவருக்குமான நட்பு எப்படி இருந்தது?"

`` `6 மெழுகுவர்த்திகள்’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம் 5 வருடங்கள் நான் படம் இயக்கவில்லை. விளம்பரப் படங்கள் எடுக்கிறதில் பிஸியாகிட்டேன். அனில் சார் அடுத்தடுத்து பல படங்களில் நடிச்சிட்டு இருந்தார். அந்தப் படங்கள் பார்த்திட்டு நானும் அவர்கிட்ட பேசுவேன். அவர் சென்னைக்கு வரும் போதெல்லாம், என்னை வந்துப் பார்ப்பார். சமுத்திரக்கனி எடுத்த, `நிமிர்ந்து நில்’, `அப்பா’, `தொண்டன்’, `நாடோடிகள் - 2’ என பல படங்களில் நடிச்சி, சமுத்திரக்கனிக்கு நல்லா பழக்கமாகிட்டார். நானும் 5 வருடங்கள் கழித்து சமுத்திரக்கனியை வைத்து `ஏமாலி’ படம் எடுக்கும் போது, அனில் சார் ஒரு கேரக்டரில் நடிக்கிற மாதிரி இருந்துச்சு. அப்புறம், அவர் வேற படத்தில் பிஸியாக இருந்தனால, அதில் நடிக்க முடியாமல் போயிருச்சு.

anil murali in 6 Melugu Varthigal

இப்போ நான் அமீரை வெச்சு எடுத்திட்டு இருக்கிற `நாற்காலி’ படத்தில் அனில் சாருக்கு ஒரு கேரக்டர் சொல்லியிருந்தேன். அவருக்கும் அது ரொம்ப பிடிச்சிருந்தது. மார்ச் 25-ம் தேதி அவர் கேரக்டருக்கான ஷூட்டிங் ஆரம்பமாக இருந்துச்சு. கொரோனா வைரஸ் பரவலின் காரணமா மார்ச் 19-ம் தேதியே ஷூட்டிங் எல்லாத்தையும் நிறுத்துனதுனால, அவரோட போர்ஷனை அப்போ எடுக்க முடியலை. `லாக்டெளன் முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம் சார்'னு சொல்லி வெச்சிருந்தேன். அதுமட்டுமில்லாம, மலையாளத்தில் `ஜோசப்' படத்தில் நடிச்சிருந்த ஜோஜு ஜார்ஜை வெச்சு, தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் பண்ணலாம்னு ப்ளான் பண்ணேன். அனில் சாரும் `ஜோசப்' படத்துல நடிச்சிருந்ததுனால, அவர் மூலமாத்தான் ஜோஜுகிட்ட இந்தப் படத்தைப் பற்றி பேசுனேன். அப்போ அனில் சார், `இந்தப் படத்தில் எனக்கு ஒரு ரோல் இருக்கா சார்’னு கேட்டார். `நிச்சயமா இருக்கு சார். எனக்கு முதல் மலையாளப் படம். நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்’னு சொன்னேன். இந்தப் படம் சம்பந்தமா 15 நாளுக்கு முன்னாடிகூட அனில் சார்கிட்ட பேசினேன். ஆனால், அவர் இறந்துட்டார்னு செய்தி வந்ததும் எனக்கு ரொம்பவே ஷாக்கா இருந்துச்சு. இப்போ வரைக்கும் அதிலிருந்து என்னால மீளவே முடியலை.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-vz-durai-shares-his-memories-of-actor-anil-murali

கோவை: `சச்சின் போட்டோ விளம்பரம்; 10% வட்டி... 8,200 பேர் முதலீடு!’ - அதிர வைத்த மோசடி

கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மென்ட் என்ற எம்.எல்.எம் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. மணிகண்டன் மற்றும் அவர் மகன் சஞ்சய் குமார் ஆகியோர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். அவர்கள், `எங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் நூற்றுக்கு 0.5% வட்டி தருவோம்.

சச்சின் உடன் மணிகண்டன்
சஞ்சய்குமார்

Also Read: `சச்சின் உள்ளிட்ட செலிபிரிட்டிகளுக்கு விற்கப்பட்ட ஏரி நிலம்?’ - அதிரவைத்த ரியல் எஸ்டேட் மோசடி

முதலீடு செய்ய ஆள் சேர்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்’ என்று ஆசையைத் தூண்டியுள்ளனர். மேலும், அவர்களை நம்ப வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கருடன் இருந்த புகைப்படங்களைக் காண்பித்தும் விளம்பரங்கள் செய்துள்ளனர்.

அதனால், அவர்கள் சொன்னதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர். இதுகுறித்து அதில் பணம் போட்ட முதலீட்டாளர்கள் கூறுகையில், “குறைந்தபட்சம் ரூ.56,250 முதலீடு செய்ய வேண்டும். அப்படி முதலீடு செய்தால் தொடர்ந்து 10 மாதங்களுக்கு 10 சதவிகிதம் வட்டி கொடுப்போம் எனக் கூறியிருந்தனர். அதை நம்பி கோவையில் மட்டும் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோரும், தமிழகம் முழுவதும் 8,200 பேரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளோம். ஆரம்பத்தில் பணம் சரியாகக் கொடுத்து வந்தனர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணம் கொடுக்கவில்லை.

மணிகண்டன் வீடு

யாரும் அவரைப் பார்க்கவும் முடியவில்லை. செல்போனில்தான் பேசிவந்தார். திடீரென அவர் வீட்டை காலி செய்து ஊரைவிட்டு போவதாகக் கேள்விப்பட்டோம். அதனால்தான் இங்கு கூடியுள்ளோம். வீட்டுக்குள் 18 அடியாட்களை வைத்துள்ளார். ‘உங்கனால என்ன முடியுமோ அதப்பண்ணுங்க’ என்று பதிலக்கிறார்கள். எங்களுக்கு நாங்கள் கட்டிய பணம் வேண்டும்” என்றனர்.

இதனிடையே பணத்தைக் கேட்டும், மணிகண்டன் மற்றும் சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்களின் வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும், முதலீட்டாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்ற பிரிவிலும் இது தொடர்பாகப் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பல கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

முதலீட்டாளர்கள்

இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-finance-company-scam

நோய் எதிர்ப்புத்திறனைக் குறைத்து COVID-19-க்கு வழிவகுக்கும் புகைப்பழக்கம்!

மிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த காலம் எல்லாம் கடந்து இப்போது கொரோனாவின் கட்டுப்பாட்டுக்குள் தமிழகம் சென்றுவிட்டது. இந்நிலையில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், `புகைப்பழக்கம் உள்ளவர்களின் கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. புகைபிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியைத் தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகை பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்.

அது மட்டுமல்லாமல், புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராகப் போரிடும் சக்தியை உடல் இழந்துவிடும். இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும்போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்.

``கொரோனா காலம் மட்டுமில்லை எந்தக் காலத்திற்கும் புகைப்பழக்கம் உடலுக்கு ஏற்றதில்லை. ஒருவர் புகைபிடிப்பதனால் இரண்டுவிதமான முக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று COPD (Chronic obstructive pulmonary disease). COPD பாதிப்பில் முதலில் நுரையீரலில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். இறுதியில் இதனால் மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம், வீஸிங் மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம். புகைப்பழக்கத்தினால் ஏற்படும் மற்றொரு பிரச்னை நுரையீரல் புற்றுநோய் (Lung cancer). இவற்றைத் தவிர ரத்த அழுத்தம், ரத்த நாள அடைப்பு நோய் போன்ற பிரச்னைகளும் புகைபிடிப்பதால் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்குக் கருவுறுதலிலும், குழந்தை பிறக்கும்போதும் சிக்கல்கள் ஏற்படலாம். புகை பிடிப்பவர்கள் வெளியிடும் சிகரெட் புகையால் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நுரையீரல் பிரச்னைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

Corona infection (Representational Image)

சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் சென்று வரக்கூடிய ரத்தம் சுத்திகரிக்கப்பட்டதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ஆகையால் அவையெல்லாம் நோய்க் கிருமிகளிடமிருந்து ஓரளவிற்குப் பாதுகாப்பாகவே இருக்கின்றன. ஆனால் சுவாசத்தின்போது நுரையீரலுக்குள் சென்று வரும் காற்றானது வெளியிலிருந்து நேரடியாக நுரையீரலுக்குள் செல்கிறது. வெளியிலிருந்து வரும் அந்தக் காற்றில் ஏராளமான நோய்க்கிருமிகள் கலந்திருக்கலாம். இதுபோல் வெளியுலகத்துடன் நேரடி தொடர்பில் நுரையீரல் இருப்பதால் அதில் கிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் நுரையீரலால் காற்றில் நோய்க்கிருமிகள் கலந்து வந்தாலும் அதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

Also Read: `கல்லீரல் பாதிப்பு; உடல் நலக்குறைவு’ - மல்லுவுட்டை உலுக்கிய நடிகர் அனில் முரளியின் மரணம்!

காரணம், நுரையீரலுக்குள் இருக்கும் ஆல்வியோலார் மேக்ரோபாஜ் செல்கள் (Alveolar macrophage cells). இவை உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமியைத் தாக்கி அழிப்பதற்கும் ஆல்வியோலார் மேக்ரோபாஜ் செல்கள் உதவுகின்றன. இதனால் ஆரோக்கியமான நுரையீரல் என்பது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு பாகம்.

Lung problem (Representational Image)

புகையிலை, சிகரெட் புகைப்பதனால் நுரையீரலின் செயல்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத்திறனும் குறைகிறது. இதனால் வெளியிலிருந்து வரும் நோய்க் கிருமிகளால் எளிதில் தொற்று ஏற்படலாம். மேலும் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி நோயை உண்டுபண்ணக் கூடிய கிருமி என்பதால் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே நுரையீரல் பிரச்னைகளுடன் புகைபிடிக்கும் பழக்கமும் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களைப் பிழைக்கவைப்பது மிகவும் கஷ்டம்.

புகைப்பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம், புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எடுத்துரைத்து அதன் மீது ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று புகைப்பழக்கத்திலிருந்து வெளியே வர உதவலாம்.

சினிமாக்களில் வரும் ஹீரோக்கள் புகைப்பதைப் பார்க்கும் சிறுவர்களும், இளைஞர்களும் அதனை ஒரு ஹீரோயிஸமாக நினைத்து அவர்களும் புகைப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அதனால் சினிமாக்களில் காட்டப்படும் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு முழுவதுமாகத் தடை விதிக்கலாம்.

புகைப்பழக்கம் (Representational Image)

புகையிலை பொருள்களில் இருக்கும் நிக்கோட்டின் (Nicotine) என்ற வேதிப்பொருள்தான் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு முக்கியக் காரணம். இது ரத்தத்தில் கலக்கும்போது ஒருவித மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு `நிக்கோட்டின் மாற்று சிகிச்சை (Nicotine replacement therapy)' தரப்படுகிறது. இதில் நிக்கோட்டின் வேதிப்பொருள் புகையிலையின் வழியே இல்லாமல் மூக்கு மற்றும் வாய்வழி ஸ்பிரே, சர்க்கரை கலந்த மருந்து, மாத்திரைகளாகக் கொடுக்கப்பட்டு சிகிச்சையாக்கப்படுகிறது.

புகைப்பழக்கத்திக்கு அடிமையாகி அதிலிருந்து மீள்வதைவிடப் புகைப்பழக்கமே இல்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்" என்கிறார் மருத்துவர் திருப்பதி.



source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-how-smoking-lowers-immunity-and-it-leads-to-high-impact-of-corona

ஈரோடு: `12 நாள்கள் புத்தகத் திருவிழா... லைவ் சொற்பொழிவு! - அசத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை

சென்னை, நெய்வேலி புத்தகத் திருவிழாவுக்கு அடுத்து மிகவும் பிரமாண்டமானதொரு புத்தகத் திருவிழா என்றால், அது ஈரோடு புத்தகத் திருவிழாதான். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் ஏராளமான வாசகர்கள் படையெடுப்பார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள், எண்ண முடியாத மனிதத் தலைகள், தினமும் மாலையில் நடைபெறும் அறிஞர்களின் சொற்பொழிவுகள் என வெகு விமரிசையாக ஈரோடு புத்தகத் திருவிழா இருக்கும்.

ஈரோடு புத்தகத் திருவிழா

கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்தப் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திவரும் மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் அமைப்பானது, 16-வது ஈரோடு புத்தகத் திருவிழாவை இந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 12 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடுவது என்பது இன்றைய சூழலுக்கு ஏற்றதல்ல என்ற காரணத்தாலும் இந்த வருடம் நடைபெறுவதாய் இருந்த, `16-வது ஈரோடு புத்தகத் திருவிழா’ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், புத்தகத் திருவிழாவின் மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்டிருந்த அனைத்தையும் சமூக வலைதளங்கள் வழியாக நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அந்தவகையில் இன்றைய முதல்நாள் நிகழ்ச்சியில் ‘இலக்கியத்தில் நாகரிகம்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசுகிறார். ஆகஸ்ட் 1-ம் தேதி ‘அறிவினைத் தூண்டி நடத்துக!’ என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாரும், ஆகஸ்ட் 2-ம் தேதி ‘அகழ்வாரைத் தேடும் நிலம்’ என்ற தலைப்பில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களும் சொற்பொழிவாற்றுகின்றனர். ஆகஸ்ட் 3-ம் தேதி ‘காலவெளியில் ஒரு ஜீவநதி’ என்ற தலைப்பில் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களும், ஆகஸ்ட் 4-ம் தேதி ‘விசும்பின் துளியாய்’ என்ற தலைப்பில் பேராசிரியர் த.ராஜாராம் அவர்களும், ஆகஸ்ட் 5-ம் தேதி ‘ஆறாவது விரல்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் அவர்களும் உரையாற்றுகின்றனர்.

ஈரோடு புத்தகத் திருவிழா

Also Read: 'புத்தகங்கள் படியுங்கள்; சமூக வலைதங்களை ஒதுக்குங்கள்!' - கரூர் இளைஞரின் நூதன விழிப்புணர்வு

ஆகஸ்ட் 6-ம் தேதி ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்ற தலைப்பில் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களும், ஆகஸ்ட் 7-ம் தேதி ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களும், ஆகஸ்ட் 8-ம் தேதி ‘நூலேணி’ என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனும் பேசுகின்றனர். ஆகஸ்ட் 9-ம் தேதி ‘அறம் பொருள் இன்பம் அகிலமே சூழ்க’ என்ற தலைப்பில் நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்களும், ஆகஸ்ட் 10-ம் தேதி ‘சவால்களும் சந்தர்ப்பங்களும்’ என்ற தலைப்பில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், இறுதி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதியன்று ‘சங்கத்தமிழ்ச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும் உரையாற்றுகின்றனர்.

‘தினசரி மாலை சரியாக 6 மணிக்குத் தொடங்கி, 7.30-க்கு முடியும் விதத்தில் இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சொற்பொழிவுகள் அனைத்தும்`makkalsinthanaiperavai' என்ற பெயரிலான யூடியூப், முகநூல் பக்கம் மூலம் பார்க்கலாம். கொரோனா சூழலால் இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெற முடியாமல் போயிருக்கிறது. அடுத்த புத்தகத் திருவிழா நிச்சயமாக வெகு சிறப்பாக, பிரமாண்டமாக இருக்கும்’ என்கின்றனர் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/erode-book-festival-cancelled-guests-speeches-will-go-live