அடுத்தடுத்து பல பரபரப்பு திருப்பங்களைக் கண்டுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் உச்சகட்ட பரப்பாக சயானின் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது. கொட்டும் மழையில் ஊட்டியில் நடைபெற்ற அந்த ரகசிய வாக்குமூலத்தில், தொடர்ந்து 3 மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பல உண்மைகளை தெரிவித்திருக்கிறாராம் சயான்.
சயானின் இந்த ரகசிய வாக்குமூலம், வருகின்ற 27-ம் தேதி ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வாக்குமூலத்தின் சாரம்சங்கள் என சில தகவல்கள் வெளியில் கசிந்து வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் இந்த வழக்கில் சயான் தெரிவித்திருக்கலாம் என்பதுதான். அப்படி ஒருவேளை எடப்பாடி பழனிசாமியை சயான் இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தால், இது ஒன்றும் முதல் முறையல்ல, கடந்த முறை ஜாமினில் வெளிவந்த வாளையார் மனோஜும் இதே சயானும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து ,"எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரிலியே இந்த குற்றத்தை செய்தோம்" என பகிரங்கமாக பேட்டி கொடுத்தனர்.
இந்த பேட்டியால் நாடே பரபரப்பு அடைந்தாலும், அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியோ எதுவும் அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக இருந்து, இரண்டு பேரின் ஜாமீனையும் ரத்து செய்து சிறையில் அடைத்ததோடு குண்டர் சட்டத்தையும் பாயச்செய்தார். ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழாக மாறி, எல்லோரும் கூலாக இருக்க வாக்குமூலத்தின் சாராம்சம் வெளிவரும் முன்னரே எடப்பாடி கொந்தளிப்பில் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே கொடநாடு வழக்கை விரைந்து முடித்து இழுத்து மூட பல்வேறு திட்டங்களை வகுத்தாக நம்மிடம் பகிர்கிறார் எதிர்தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், "கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்திலும் இந்த வழக்கை விரைந்து நடத்த தீவிரம் காட்டினர். முதல் சாட்சியான கிருஷ்ணதாபாவை விருந்தினரைப் போல சொந்த செலவில் தங்கவைத்து பராமரித்து வந்தனர். 103 அரசு தரப்பு சாட்சிகள் இருந்த நிலையில், அனைவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினால் வழக்கு விசாரணை தாமதமாகும் என கருதி, வலுவில்லாத சாட்சிகளென 41ஆக குறைத்தனர்.
Also Read: கொடநாடு வழக்கு: `முன்னாள் முதல்வர் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டியது தானே?!’ - கார்த்தி சிதம்பரம்
எதிரிகளின் நியாயமான கேரிக்களைக் கூட கடுமையாக எதிர்த்தனர். இதையெல்லாம் விட ஒருபடி மேலே போய், ஊட்டியைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 90 நாள்களில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பெற்றனர். எதிரிகளுக்கு முறையாக நோட்டீஸ் வழங்காமயே விரைந்து முடிக்கவும் முயற்சித்தனர். ஆனால் எதுவுமே இந்த வழக்கில் எடுபடவில்லை. சயானிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கூடுதல் விசாரணையே இந்த வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்"என்றார்.
சயான் அளித்த வாக்குமூலத்தின் சாராம்சமே இன்னும் முறையாக வெளிவராத நிலையில், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதீத பதற்றத்துக்கு காரணம் என்பதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/edappaadi-tried-to-close-the-kodanad-case-when-he-was-in-power-says-opposition-lawyer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக