Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

`எடப்பாடி பழனிசாமி, பன்னீருக்கு சிக்கல் தொடங்கி ஸ்டாலினின் புது உத்தரவு வரை'- கழுகார் அப்டேட்ஸ்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா பணிகளுக்காக, ‘அவசரகால நிதி’ மூலம் பொருள்களை வாங்கிக்குவித்தார்கள். இதில் மாஜியின் ஆசிபெற்ற பழனி பெயர்கொண்ட ஒருவர் கைகாட்டிய நிறுவனங்களுக்கே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டன. அப்படி சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, சுமார் 13 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருந்தது.

கொரோனா 3-வது தடுப்பூசி

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த விவகாரங்களைத் தோண்டித் துருவிய துறை அதிகாரி ஒருவர், பழைய பில்களை செட்டில் செய்ய 13 சதவிகிதம் கமிஷன் கேட்கிறாராம். விஷயம் துறை அமைச்சரின் கவனத்துக்குச் சென்றும், கண்டிக்காமல் அமைதியாக இருக்கிறாராம்!

உள்துறைச் செயலாளர் அலுவலகத்தின் ‘சூப்பர்’ செயலாளராக ஓர் அதிகாரியைச் சுட்டிக்காட்டுகிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணிபுரிபவர்கள். இந்தப் பிரிவில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் அவர், ரகசியத் தகவல்களை அனுப்பும் பிரிவுடன் சேர்த்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடர்பான ஃபைல்களையும் கவனிக்கிறாராம்.

Also Read: மிஸ்டர் கழுகு: கொடநாடு விவகாரம்... தி..மு.க-வுக்கு உதவுகிறாரா சசிகலா?

கடந்த நான்கு ஆண்டுகளாக ஐ.பி.எஸ் பதவி உயர்வுக்காக தமிழக உள்துறை அலுவலகத்திலிருந்து சிபாரிசு செய்யப்பட்ட அதிகாரிகளின் ஃபைல்களை, டெல்லியிலுள்ள யூ.பி.எஸ்.ஸி அதிகாரிகள் `போதிய விவரங்கள் இல்லை’ என்று சொல்லி, திருப்பியனுப்பி வருகிறார்கள. இதற்குக் காரணமே `சூப்பர்' செயலாளர்தான் என்று காவல்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

தமிழக சென்சார் போர்டு அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த வாரம் பாலியல் வீடியோ சர்சையில் சிக்கி ராஜினாமா செய்த பா.ஜ.க பிரமுகரின் ஆசியுடன் பதவிபெற்றவர்களும் இவர்களில் அடக்கம். இதையடுத்து அவர் கோட்டாவை செக் செய்து வருகிறதாம் கட்சித் தலைமை. விரைவில் அவர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்கிற பேச்சு அடிபடும் நிலையில், அவர்கள் கட்சியின் பல்வேறு அதிகார மையங்களிடம் சரண்டராகிவருகிறார்கள்!

முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, தமிழக ஆளுங்கட்சியினருடன் முரண்டு பிடித்ததால், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆனால், தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் வேல்ராஜ் டெல்லி மேலிடம், தமிழக ஆளுங்கட்சி என இரு தரப்பையும் பேலன்ஸ் செய்துவிட்டாராம்.

துணைவேந்தர் வேல்ராஜ்

சமீபத்தில் தமிழக அரசுத் தரப்பைச் சந்தித்தவர் பூங்கொத்து கொடுத்ததுடன், `உங்கள் தரப்பிடம் கருத்து கேட்காமல் எதையும் செய்ய மாட்டோம். அனைத்தும் முறைப்படி நடக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். பதிலுக்கு `மகிழ்ச்சி’ என்று கைகுலுக்கி அனுப்பியதாம் மாநிலத் தலைமை!

Also Read: ``அகதிகள் முகாம் அல்ல மறுவாழ்வு முகாம்" - முதல்வர் ஸ்டாலின்- சட்டசபை ஹைலைட்ஸ்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறுவிசாரணையால் எடப்பாடி தரப்பு ஆடிப்போயிருக்கும் நிலையில், பன்னீர் ஆதரவாளர்கள் உற்சாகமானார்கள். தொடர்ந்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருக்கும் விவகாரத்தில் பன்னீர் பெயர் அடிபட்டதும், எடப்பாடி ஆதரவாளர்கள் குஷியானார்கள்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

இன்னொரு பக்கம், இப்படி இரண்டு தலைமைகளும் வழக்குகளில் சிக்கியிருப்பதைப் பார்த்து முன்னாள் அமைச்சர்களான ராமநாதபுரம் மணிகண்டன், சிவகங்கை பாஸ்கரன் தரப்பினர் கொண்டாட்டத்தில் இருக்கிறார்களாம். ‘பாலியல் புகாரில் நான் கைதுசெய்யப்பட்டதற்கு எடப்பாடிதான் காரணம்’ என்று மணிகண்டனும், ‘கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததாக என்மீது புகார் வந்தபோது, கட்சித் தலைமை எனக்கு ஆதரவாகப் பேசவில்லை’ என்று பாஸ்கரனும் கொண்டாட்டத்துக்குக் காரணம் சொல்கிறார்கள்!

துறைரீதியிலான கருத்துகள் எதையும் அமைச்சர்களிடம் கேட்காமல், அதிகாரிகளின் ஆலோசனைப்படியே செயல்படுகிறாராம் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, துறைரீதியான முக்கிய நியமனங்கள், டிரான்ஸ்ஃபர், நிதி ஒதுக்கீடு போன்றவை அமைச்சர்களின் கவனத்துக்கு வராமலேயே நடக்கின்றனவாம்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதையடுத்து அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தங்களுக்கு இல்லையே என்று மத்திய மண்டலம் மற்றும் தென் மண்டலத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர்கள் சிலர் புலம்பியிருக்கிறார்கள். இந்தத் தகவல் ஸ்டாலின் காதுக்குச் சென்றதும், அவர்களை அழைத்த முதல்வர் தரப்பு “ஆமாம்... அப்படித்தான்!” என்று உத்தரவு தோரணையில் பதிலளிக்க ஆடிப்போனார்களாம் அமைச்சர்கள்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் இரண்டு நாள்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்தது. அதில், வாய்மொழித் தீர்மானம் ஒன்று போட்டிருக்கிறார்களாம். ‘குமரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், இனி கிழக்கு மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனுக்குத் தகவல் சொல்லிவிட்டுதான் வர வேண்டும்.

மனோ தங்கராஜ்

அப்படி தகவல் சொல்லாமல் கிழக்கு மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால், அது பற்றித் தலைமைக்குப் புகாராகத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதுதான் அந்தத் தீர்மானமாம். அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி கிழக்கு மாவட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, உள்ளூர் நிர்வாகிகளுக்குத் தகவல் சொல்லப்படுகிறதாம். ஆனால், மாவட்டச் செயலாளருக்குத் தகவல் சொல்வது இல்லை என்ற புகார் இருந்துவந்த நிலையில்தான் இப்படியொரு தீர்மானம் போடப்படட்டிருக்கிறது என்கிறார்கள்.

தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011-16 காலகட்டத்தில் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தபோது, அவருடன் இருந்த ‘ஆனந்தமான’ நபர், அமைச்சரின் பெயரைச் சொல்லியே பல இடங்களிலும் கல்லாகட்டியதாக சர்ச்சை எழுந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

தொடர்ந்து, செந்தில் பாலாஜி அ.ம.மு.க சென்றபோது, அங்கும் சென்றவர், செந்தில் பாலாஜியுடன் தி.மு.க-வுக்கும் வந்திருக்கிறார். தற்போது, கரூர் மாவட்டத்தில் நடக்கும் சிறிய வேலை தொடங்கி, பெரிய ஒப்பந்தப் பணிகள் வரை அனைத்தும் ஆனந்தமான நபர் கண்ணசைவில்தான் நடக்கின்றனவாம். அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைகளால் கடுப்பான தி.மு.க-வினர், கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பத் தயாராகிவருகிறார்கள்!



source https://www.vikatan.com/news/politics/latest-political-updates-from-kazhugar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக