Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கொடநாடு வழக்கு: `என்கிட்ட வாங்கின 4 செல்போன் எங்கே?!’ - நீதிமன்றத்தில் போலீஸாரிடம் சயான் வாக்குவாதம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய மூளையாக செயல்பட்டதாக மறைந்த முன்னாள் முதல்வரின் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் சயான் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சேலம் ஆத்தூரில் நடந்த வாகன விபத்தில் கனகராஜ் இறந்த நிலையில்,மற்றொரு வாகன விபத்தில் படுகாயத்துடன் உயிர் தப்பிய சயானை முதன்மை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். சயான் மூலம் மட்டுமே இந்த வழக்கின் மர்மங்கள் வெளிவர முடியும் என்பதால், ஜாமினில் உள்ள சயானிடம் கடந்த 17 -ம் தேதி ஊட்டியில் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலம் இன்னும் நீதின்றதில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும் தமிழக அரசியல் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

சயான்

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரை மணி நேரம் நடந்த விசாரணைக்குப்பின் வருகின்ற 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சஞ்சய்பாபா. வழக்கு விசாரணைக்காக சயான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த சயான் காவல்துறையினரிடம், "என்கிட்ட இருந்து பிடுங்குன செல்போனை கோர்ட்டுலயும் ஒப்படைக்கல, என்கிட்டயும் திரும்ப கொடுக்கல அப்போ என்ன மாயம் பண்ணீங்க. ரெண்டாம் தேதிக்குள்ள செல்போனை திருப்பி கொடுக்கலைன்னா கோர்ட்டுல முறையிடுவேன்" என்றார். செய்தியாளர்கள் முன்னிலையில் சயான் இப்படி கேட்டதால் காவல்துறையினர் மழுப்பி சமாளித்துவிட்டனர்.

Also Read: கொடநாடு: `கருணைக் கொலைகூட செய்துவிடுங்கள்; அரசியல் வேண்டாம்!’- நீதிமன்றத்தில் சயான் ஆவேசம்

சயானின் செல்போன் விவகாரம் தொடர்பாக எதிர்தரப்பு வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம், "சயானுக்கு நடந்த விபத்துல இவரோட மனைவி மகள் ரெண்டுபேரும் இறந்துட்டாங்க. இவரை படுகாயத்தோட சுயநினைவில்லாம ஆஸ்பிட்டல்ல இருந்தப்போ இவரோட செல்போனை போலீஸ் கைப்பத்திருக்காங்க. அந்த போன்லதான் கனகராஜும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ இருக்காதா சொல்றாங்க. இப்போவாரை அந்த போனை கோர்ட்டுல ஹேண்டோவர் பண்ணல. இந்த விவகாரத்தை கோர்ட்டுல கேள்வியாவே எழுப்புனோம். அப்புறம் ஜாமின்ல இருந்த சயான டெல்லில இருந்து கூட்டிட்டு வரும்போது ஒரு ஐபோன் உள்ளிட்ட ரெண்டு போனை பறிமுதல் பண்ணிருக்காங்க. அப்பறம் 2019 -ல இரு செல்போனை வாங்கிருக்காங்க. இதுல என்ன வேடிக்கைன்னா எந்த போனையும் கோர்ட்டுள்ள ஒப்படைக்கல. சயானுக்கும் கொடுக்கல. இதுவே ரொம்ப மர்மமா இருக்கு. அடுத்த விசாரையில இந்த கேள்வியை எழுப்புவோம்"என்றார்.

ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றம்

இந்த விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், "எந்த தேதிகளில் சயானிடம் இருந்த எந்த காவல்த்துறை அதிகாரி செல்போனை பறிமுதல் செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சயானின் செல்போனில் இருக்கும் ஆதரங்கள் வெளியானால் இந்த வழக்கின் உண்மை குற்றவாளிகள் சிக்க வாய்ப்பு இருப்பதால் காவல்துறையினர் திட்டமிட்டே செல்போன்களை கைப்பற்றியுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

Also Read: கொடநாடு வழக்கு: ``மீண்டும் என் உயிருக்கு அச்சுறுத்தல்!'' - பாதுகாப்பு கேட்கும் சயான்!



source https://www.vikatan.com/government-and-politics/crime/sayaan-cellphone-controversy-in-nilgiri-court-shocked

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக