குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது எந்த வகை மாஸ்க் அணியச் சொல்ல வேண்டும்? எது கோவிட் தொற்றிலிருந்து அவர்களை முழுமையாகப் பாதுகாக்கும்?
- சீதா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்.
``குழந்தையின் முகத்துக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய, இரண்டு அல்லது அதற்கு மேலான அடுக்குகள் (லேயர்கள்) உள்ள துணியாலான, சுவாசிப்பதற்கு வசதியான அனைத்துவகை மாஸ்க்குகளுமே சிறந்த பாதுகாப்பைத் தரும். N95 மற்றும் KN95 வகை மாஸ்க்குகளும் பாதுகாப்பைத் தரும்.
எந்தவகை முகக்கவசமானாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்தினால்தான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணியலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வகுப்பறையிலும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைக்குத் தேர்ந்தெடுக்கும் முகக்கவசம் சரியான அளவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
Also Read: Covid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா?
அது மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூடும்படி இருக்க வேண்டும். துவைத்து, மீண்டும் பயன்படுத்த ஏதுவாக, துணியால் ஆனதாக இருப்பது சிறந்தது. மூக்குத் தண்டுப் பகுதியில் கிளிப் இருப்பது சிறப்பு. இது முகக்கவசம் மூக்கிலிருந்து நழுவுவதைத் தடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளுக்கும் வசதியாக இருக்கும்.
பேசும்போது, இருமும்போது, தும்மும்போதெல்லாம் மாஸ்க்கை கீழே இறக்கிவிடக் கூடாது என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்கும்போது அதைத் தொடுவது, இழுத்துவிடுவது போன்றவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்றும் பழக்க வேண்டும்.
Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
ஓரளவு வளர்ந்த பிள்ளைகளுக்கு இவை புரியும். சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பே வீட்டிலிருக்கும் நேரத்தில் மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியத்தை, அதைச் சரியாக அணியும் முறையை, அணிந்திருக்கும்போது செய்யக் கூடாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அப்போதுதான் பள்ளிக்கூடம் உள்ளிட்ட வெளியிடங்களிலும் அவர்கள் அதைச் சரியாகப் பின்பற்றுவார்கள். நோய்த்தொற்றிலிருந்து விலகி இருப்பார்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/which-type-of-masks-provide-more-safety-to-school-going-children
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக