நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தில் சிபிஐ முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
Also Read: தி.மு.க ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா? - பொள்ளாச்சி பாலியல் வழக்கு
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அதிமுக பிரமுகர்கள் மூன்று பேர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் என்று, தற்போதுவரை இந்தாண்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் ஒன்பது பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தம், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், வழக்கு விசாரணை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில்,
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பெண்கள் மற்றும் சாட்சிகள் அளித்த தகவல்கள் இதில் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்ற பத்திரிகை நகல் விரைவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அடுத்ததாக செப்டம்பர் 1-ம் தேதி முதல், அதாவது இன்னும் நான்கு நாள்களில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல், கோவை மகளிர் நீதிமன்றத்தில் தினந்தோறும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. .
source https://www.vikatan.com/news/crime/in-pollachi-sexual-case-cbi-submitted-additional-charge-sheet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக