‘ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் சீரிஸின் ஐந்தாவது எபிசோடைப் பார்த்தபோது எனக்கு என் தோழியின் கதை நியாபகம் வந்தது. ‘அந்நியன்’ திரைப்படத்தில் கதாநாயகிக்கு எழுதும் காதல் கடிதத்தை அவளது பெற்றோரிடம் கொடுக்கும் அம்பி கதாபாத்திரத்தை போல எனது தோழியை அவளது உறவினர் ஒருவர் காதலிப்பதாக அவளது பெற்றோரிடம் வந்து சொன்னார். சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘நல்ல மாப்பிள்ளை’ ஃப்ரேமுக்குள் பொருந்துபவர் என்பதால் யோசிக்காமல் அவர்களும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர்.
ஆனால், அதன்பின் அந்த ‘அம்பி’ அவளை பின் தொடர்ந்து அலுவலகம்வரை செல்வது, அவள் போனில் யாருடன் பேசுகிறாள் என தெரிந்துகொள்ள நினைப்பது, தனியாக எங்கும் செல்லக்கூடாது என கட்டளையிடுவது என்று பெண் கேட்ட உடனேயே அதிகாரம் செய்ய தொடங்கிவிட்டார். ஜாதக பொருத்தமில்லாமல் அத்திருமணம் நின்றபோதுதான் என் தோழி சிறையில் இருந்து தப்பித்ததை போல் உணர்ந்தாள். தங்களை அதீத நல்லவர்களாக(?!) நினைத்துக்கொள்பவர்கள் மற்றவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என பர்ஃபெக்ட்னெஸை எதிர்பார்த்து, தங்களுக்குள் இருக்கும் உறவை டாக்ஸிக்காக மாற்றிக்கொள்கின்றனர். அதை நேரடியாக சொல்லாமல் சொல்லியது ஐந்தாவது எபிசோட்!
தேனியில் இருந்து தப்பித்து சென்னைக்கு கிளம்பும் பாண்டியன் கவிதாவிடம் மாட்டிக்கொள்வதை நேற்று பார்த்தோம். கவிதாவுக்கு பயந்து சுவர் ஏறிக்குதித்து பேருந்து நிலையம் வந்த பாண்டியனிடம் கவிதாவையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கவிதாவின் தந்தை மிரட்டுகிறார். ஆனால் அவளை ’இம்சை’ என்று திட்டிக் கொண்டே இருக்கிறான் பாண்டியன்.
பாண்டியன் அவளை திட்டும்போதும், கவிதாவின் அப்பா அவளிடம் பேசும்போதும், கவிதாவின் சிரிப்பு, உடல்மொழி, பாவனைகள் ரசிக்கும்படி இருக்கின்றன.
பெட்ரோலை மிச்சம் செய்ய இறக்கத்தில் செல்லும்போது வண்டியை ஆஃப் செய்துவிட்டு ஓட்டுவது, ஊருக்கு செல்லும் மகன் கையில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அதை எப்படி செலவு செய்யாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று அரைமணி நேரம் அறிவுரை சொல்வது, , டீ சாப்பிட அழைக்கும் நண்பனிடம் ‘’எப்பவும் போல நீதான காசு கொடுப்ப’’ எனக் கேட்டுக்கொள்வது என எல்லா வகையிலும் சிக்கனம் என்கிற பேரில் மிக கஞ்சனாக இருக்கிறார் பாண்டியனின் தந்தை.
அவரை போல நம்மை சுற்றி அதிகம் பேர் இருக்கிறார்கள். தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை, அன்புடன் அவர்களைச் சார்ந்து வாழ்பவர்கள். தனக்கு கிடைத்தது, கிடைக்காதது எல்லாம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெரும்பாலும் ஒரே வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் நடுத்தர குடும்பங்கள் இதுபோன்று எண்ணி எண்ணி செலவு செய்பவர்களாக இருப்பார்கள். தனக்கு ஒரு தேவை என்று வரும்போது அடுத்தவரிடம் கையேந்தி நிற்க வேண்டாம் என்கிற எண்ணமும் ஒரு காரணம். இப்படி இருப்பவர்கள் அதிகம் கேலிக்கு ஆளாவார்கள். ஆனால் இத்தகைய பெற்றோர்கள்தான் தங்களது பிள்ளைகளை கல்வி, பொருளாதார ரீதியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்கள்.
பாண்டியனுக்கு முன்கூட்டியே பேருந்தில் ஏறும் கவிதா, பாண்டியனின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொள்கிறாள். அவளை கண்டதும் மீண்டும் எரிச்சலடைகிறான் பாண்டியன். கவிதா உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கு உரிமையானவர் வந்து கேட்க பாண்டியன் ஒருவழியாக அவளிடமிருந்து தப்பித்தோம் என்று மகிழ்ச்சி அடைகிறான். அவள் பதிவு செய்திருந்த இருக்கையில் சென்று உட்கார்ந்து கொள்கிறாள்.
இரவு உணவுக்காக வழியில் நிற்கும்போது தூங்கிக் கொண்டிருக்கும் கவிதாவை அன்போடு திரும்பிப் பார்ப்பான் பாண்டியன். அதுவரையிலும் கவிதாவை எரிச்சலோடு திட்டிக்கொண்டு அவளிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்யும் பாண்டியனின் முகத்தில் முதல்முறை அந்த மெல்லிய புன்னகை... நன்றாகவே இருந்தது.
கவிதாவுக்கு சாப்பிட வாங்கி வந்து தூங்குபவளின் அருகில் உட்கார்ந்து ஊட்டிவிடுவான். அவள் அவனது தோளில் சாய்ந்து கண்களை மூடியபடியே சாப்பிடுவாள். பேருந்தில் அவர்களை காணும் ஒவ்வொருவரும் புன்னகைத்துவிட்டு அவரவர் இருக்கைக்கு செல்வார்கள். பேருந்து கிளம்பியதும் பாண்டியனின் பக்கத்து இருக்கைக்காரர் அவனை காணவில்லை என்று வெளியில் தேடுவார். அருகில் இருப்பவர் அவரிடம் கடைசி இருக்கையில் இருக்கும் பாண்டியனை காட்டி ’புதுசா லவ் பண்றாங்கபோல’ என்பார். பாண்டியனின் பக்கத்து இருக்கைக்காரரும் அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பது ஒரு அழகிய கவிதைபோல இருந்தது.
இதுபோன்ற காட்சிகள் சமூக மாற்றத்திற்கு மிக முக்கியமானது. ஏனென்றால் பொதுவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தால் உடனே அவர்கள் காதலர்களாக இருக்கக்கூடும் என்று குறுகுறுவென்று பார்ப்பது, காதலர்களை கண்டால் பொதுவெளியில் அவர்கள் காதில் விழும்படி மோசமாக கேலி செய்வது, காதலர் தினம் வந்தால் பொது இடங்களில் காதலர்கள் சந்திக்கக்கூடாது என்று மதத்தின் பேரால் மிரட்டுவது போன்ற நிகழ்ச்சிகள் நம் நாட்டில் சகஜமாகி கொண்டிருக்கிறது. இச்சூழலில் தோளில் சாய்ந்திருக்கும் ஒருத்திக்கு கேக் ஊட்டுபவனை பார்த்து புன்னகைக்கும் மனிதர்களை காண்பது நம்பிக்கையளிக்கிறது.
சென்னைக்கு கிளம்பும் காயத்ரி சாமி கும்பிட்டு, பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்குகிறாள். சென்னையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று காயத்ரிக்கு அவள் தந்தை அறிவுரை கூறுகிறார். ”சென்னையின் கவர்ச்சியும், பிரம்மாண்டமும் யாரையும் உள்ளிழுத்துக் கொள்ளும், நீ அதற்கெல்லாம் மயங்கக்கூடாது, நாம் எங்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் நடக்க வேண்டும் என்பதற்காக நாம் நம்முடைய அடையாளத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது” என்பார். சிறுநகரம் அல்லது கிராமத்தில் இருந்து பெண்களை பெருநகரங்களுக்கு படிக்க அல்லது வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு பெருநகரங்களின் சுதந்திரமான வாழ்க்கைமுறை பயத்தை ஏற்படுத்துகிறது. அங்கே தன் பிள்ளைகள் ஏதாவது தவறு செய்தால் ஊரில் சுற்றியிருப்பவர்கள் விலகிச் செல்வார்கள் என அஞ்சுகிறார்கள்.
காயத்ரி தன் அண்ணனுடன் பேருந்து நிலையத்துக்கு புறப்படுகையில் சுந்தர் வருகிறான். காயத்ரியின் தந்தை அவளை சுந்தரோடு அனுப்பி வைக்கிறார். ஜீப்பில் செல்லும்போது காயத்ரி செந்தாழம் பூவில் பாடலை ஹம் செய்கிறாள். அதைக்கேட்ட சுந்தர், “இது ரொம்ப பழைய பாடல் ஆச்சே... பிடிக்குமா?” எனக் கேட்கிறான்.
காயத்ரி முகமெல்லாம் மலர்ந்து அவளுக்கு இளையராஜவை எவ்வளவு பிடிக்கும் என உணர்ச்சிபூர்வமாக பேசுகிறாள். தான் தினமும் இரவு பத்திலிருந்து பதினொரு மணிவரை இரவு இளையராஜா பாடலை கேட்காமல் தூங்கமுடியாது என்கிறாள். சுந்தர் அவள் சொன்னதைக் கேட்டு “பத்து மணிக்குமேல பாட்டு கேட்பியா?” என அதிர்ச்சியாகிறான். பாடல் கேட்பது நல்ல விஷயம்தான். ஆனால் ஹெல்த்தும் முக்கியம் என்று சுந்தர் கூறும்போது அவன் பேசும் தொனி மாறுவதை காயத்ரி கவனிப்பாள்.
‘’சீக்கிரமாக தூங்கி சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும்’’ என்று தனது அறிவுரையை ஆரம்பிக்கும் சுந்தர், சீக்கிரம் எழுவதால் உடலுக்கு உண்டாகும் பலன்களை விளக்குவான். அதிகாலையில் எழுந்தால் மெமரி அதிகரிக்கும் என சொன்னால், “மெமரி பத்தலைனா அடிஷ்னல் 32GB கார்டு வாங்கி போட்டுக்க போறேன்” என்று சந்தானம் பாணியில் கலாய்க்கும் 2K கிட்ஸ்கள் மத்தியில், 2K கிட்டான சுந்தர், சீனியர் சிட்டிசன் போல காயத்ரிக்கு வாட்ஸ்அப் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறான். காயத்ரிக்கு அவன் பேசுவது எரிச்சலாக இருப்பதை அவள் முகத்தில் கண்ட சுந்தர், ’அறிவுரை சொல்லி போரடிக்கிறேனா’ என்கிறான்.
அப்படி எல்லாம் இல்லை என காயத்ரி சொன்னதும், ’உணவு விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும், டீ, காபி சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை குறைத்து கொள்ள வேண்டும்’ என அறிவுரைகளை தொடர்வான். அதிர்ச்சியும் கோபமுமாக ”என்ன?” என காயத்ரி கேட்பதோடு இந்த வார எபிசோட் முடிகிறது.
சுந்தரின் உறவு காயத்ரிக்கு டாக்ஸிக்காக மாறுமா அல்லது சுந்தர் மனம் மாறுவானா? வரும் எபிசோட்களில் பார்ப்போம். அதுவரையில் காதல் செய்வீர்!
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-digital-series-episode-5-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக