Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

பனீர் பாயசம் | மிர்ச்சி பனீர் | பனீர் பெப்பர் ஃப்ரை - பனீர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

சைவ உணவுக்காரர்களுக்கு புரதத் தேவையை நிறைவேற்றுவதில் பனீருக்கு முக்கிய இடமுண்டு. பனீரில் என்ன வேண்டுமானாலும் சமைக்கலாம்... சொன்னபடியெல்லாம் கேட்கும். குழந்தைகளின் ஃபேவரைட் என்பதால் அம்மாக்களுக்கு பனீர் சமையல் எப்போதும் சந்தோஷம் தரும். டிக்கா, பிரியாணி, புர்ஜி என வழக்கமான அயிட்டங்கள் தவிர்த்து இந்த வார வீக் எண்டுக்கு விதம் விதமான பனீர் சமையல் செய்து அசத்துங்கள்.

தேவையானவை:

துருவிய பனீர் - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

ஏலக்காய் - 2

கெட்டியான பால் - அரை லிட்டர்

முந்திரி, பாதாம் - தலா 4

நெய் - 3 டீஸ்பூன்

பனீர் பாயசம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காமல் பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துருவிய பனீர் சேர்க்கவும். ஏலக்காயை இடித்துச் சேர்க்கவும், ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கிளறி, இறக்கவும். சர்க்கரை, பால், பனீர், ஏலக்காய் ஆகிய அனைத்தும் சேர்ந்து நல்ல மணம் தரும்.

ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாமை நன்றாக வறுத்து, செய்துவைத்திருக்கும் பாயசத்துடன் சேர்க்கவும். சுவையான பனீர் பாயசம் 10 நிமிடங்களில் தயார்.

தேவையானவை:

பனீர் - ஒரு கப் (நறுக்கவும்)

பஜ்ஜி மிளகாய் - 4

பெரிய வெங்காயம் -

ஒன்று (சிறிதாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - கால் கப்

சிறிதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்

சிறிதாக நறுக்கிய கேரட் - கால் கப்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மிர்ச்சி பனீர்

செய்முறை:

ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும் (விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கலாம்). அடுத்து உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர், பனீரை சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். வதங்கிய உடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிவிடவும். ஸ்டஃப்பிங் மசாலா தயார்.

நீளமான பஜ்ஜி மிளகாயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிடவும். செய்து வைத்திருக்கும் பனீர் ஸ்டஃபிங்கை அதனுள் ஸ்டஃப் செய்யவும்

ஒரு நான் - ஸ்டிக் பான் (pan) அல்லது தவாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் தயார் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்டு பஜ்ஜி மிளகாய் சேர்த்து, இரண்டு பக்கமும் மூன்று நிமிடங்கள் மூடிவைத்து எடுத்தால், சுவையான ஸ்டஃப்டு மிர்ச்சி தயார்

தேவையானவை:

பனீர் - ஒரு கப் (நறுக்கவும்)

மிளகு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)

பூண்டு - 6 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

தண்ணீர் - அரை கப்

பட்டை - ஒன்று

கிராம்பு - 3

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பனீர் பெப்பர் ஃப்ரை

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்துக் கிளறவும். கால் கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். எண்ணெய் தனியாகப் பிரிந்த பின்பு, நறுக்கிய பனீரைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.

காரம் அதிகம் தேவை என்றால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாகக் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால், சுவையான பனீர் பெப்பர் ஃப்ரை தயார். நான், சப்பாத்திக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.

தேவையானவை:

பனீர் - ஒரு கப் (நறுக்கவும்)

பாசிப்பருப்பு - ஒரு கப்

பெரிய வெங்காயம் - ஒன்று (சிறிதாக நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி - கால் கப்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சிறிதாக நறுக்கிய

குடமிளகாய் - கால் கப்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)

பச்சை மிளகாய் - 2

சிறிதாக நறுக்கிய கேரட் - கால் கப்

பச்சைப் பட்டாணி - கால் கப்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நெய் அல்லது எண்ணெய் (சுட்டெடுக்க) - தேவையான அளவு.

ஸ்டஃப்டு பாசிப்பருப்பு சில்லா

செய்முறை:

பாசிப்பருப்பை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரில் பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும் (விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கலாம்). அத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பனீரை சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். வதங்கிய உடன் சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிவிடலாம். ஸ்டஃப்பிங் மசாலா தயார்.

அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு மாவைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு எடுத்துக்கொள்ளவும். தோசை தவாவில் 2 கரண்டி மாவைச் சேர்த்து தோசையாக ஊற்றி நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசையை இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

இப்போது செய்துவைத்திருக்கும் பனீர் ஸ்டஃபிங்கை பாசிப்பருப்பு தோசையின் நடுவில் கொஞ்சம் சேர்த்து மடிக்கவும். தக்காளிச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/paneer-payasam-mirchi-paneer-paneer-pepper-fry-paneer-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக