பர்சனல் ஃபைனான்ஸ் பரிந்துரைக்கும் கடன் முதலீடுகளில், முக்கியமாக இருக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களைப் பார்த்து வருகிறோம். அஞ்சலகங்களில் இருக்கும் பெரும்பாலான முதலீடுகள் வருமான வரிப் பிரிவு 80-சியின் கீழ் விலக்கு பெறத்தக்கவை.
அஞ்சலக திட்டங்களான நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட்டும் (NSC), கிசான் விகாஸ் பத்ராவும் (KVP) ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்பட்டன. மியூச்சுவல் ஃபண்டுகளின் வருகைக்குப் பின் மங்கிப்போன முதலீடுகளில் இவையும் அடக்கம். என்.எஸ்.சி-யில் முதலீட்டுக்கு உச்ச வரம்பு இல்லை. ஆனால், ரூ.1.50 லட்சம் வரை மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். இதற்கான வட்டி விகிதம் 6.80%. ஐந்து வருட முதலீடான இவற்றில் முதிர்வின்போதுதான் வட்டி கிடைக்கும். முதிர்வுக்கு முன் ப்ரீகுளோஸ் செய்ய இயலாது.
Also Read: வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? - 11
கிஸான் விகாஸ் பத்ராவில் ரூ.1,000/ 2,000/ 5,000/ 10,000 முகமதிப்புள்ள பத்திரங்கள் கிடைக்கும். இவற்றுக்கு வரி விலக்கு இல்லை. தொகை இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படும் முதலீடு என்பதால் இதன் வைப்புக் காலம் 118 மாதங்கள். தேவை என்றால் முதல் 30 மாதங்கள் கழித்து ப்ரீமெச்சூராக குளோஸ் செய்யும் வசதி உள்ளது. இதன் வட்டி விகிதம் 6.90%. அஞ்சலகங்களில் மட்டுமன்றி குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகளிலும் கிடைக்கிறது. 2011-ல் நீக்கப்பட்ட இந்த ஸ்கீம் 2014-ல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணத்துக்கு நிகரான இந்தப் பத்திரங்கள் திருடு போனால் அவற்றை மீட்பது கடினம் என்பதை நினைவு கொள்ளவும்.
இன்று ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் அவர் முதலில் செய்யும் காரியம் சீனியர் சிட்டிசன் சேவிங் திட்டத்தில் முதலீடு செய்வதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அது ரிடையர் ஆனவர்களின் முதலீட்டு லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது. இது போஸ்ட் ஆபீஸில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்றாலும், வங்கிகளிலும் கிடைக்கிறது. முதலீட்டின் உச்ச வரம்பு ரூ.15 லட்சம் அல்லது பணி ஓய்வில் பெற்ற பணம் - இவற்றில் எது குறைவோ அவ்வளவு. ரூ. 1.5 லட்சம் வரை வரிவிலக்கும் உண்டு. ஐந்து வருட முதலீடான இதில் 7.40 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. இன்றைய வட்டி விகிதத்தில் ஒருவர் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் அவருக்கு ரூ. 10,625 மாத வட்டியாக அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கிடைக்கும்.
Also Read: வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10
சுகன்யா சம்ரித்தி திட்டம் - தமிழில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் எனப்படும் இது பெண்குழந்தைகளின் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் முன் இத்திட்டத்தில் சேர வேண்டும். ஒரு வருடத்தில் ரூ.1,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இதில் சேமிக்கலாம். இன்று இதன் வட்டிவிகிதம் 7.60%; ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாற்றமடையலாம். இதன் முதலீட்டுக் காலம் 15 வருடங்கள்; அதன் பின் ஏழு வருடங்கள் பணம் கட்டாமலேயே அக்கவுன்ட்டைத் தொடர்ந்து, முதலீட்டை வளர்க்க முடியும். பெண்ணின் மேற்கல்வி, பிசினஸ் முயற்சிகள், திருமணம் போன்ற விஷயங்களுக்கு இந்தப் பணம் பேருதவியாக இருக்கும். பெண்ணுக்குத் திருமணம் ஆன பின்பு இதைத் தொடர முடியாது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் ஒவ்வொரு வருடமும் ரூ. 1.5 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. உச்ச பட்ச சலுகையான `சேமிப்புக்கும், வட்டி வருமானத்துக்கும், முதிர்வுத் தொகைக்கும் வரி கிடையாது’ (Exempt, Exempt, Exempt) என்ற சலுகை இந்தத் திட்டத்துக்கு உண்டு. பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் இந்த அரசு உத்தரவாதத் திட்டம் அஞ்சலகங்களிலும், குறிப்பிட்ட வங்கிகளிலும் கிடைக்கிறது.
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் திட்டத்துக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ஏனெனில் பாதுகாப்பு, வளர்ச்சி, வரிவிலக்கு என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் இதில் ஒருங்கே கிடைக்கிறது.
Also Read: சம்பளம் மட்டும்தான் உங்க நிதிப்பிரச்னைக்கு காரணம்னு நினைக்குறீங்களா? இதுவும் பிரச்னைதான்! - 5
அதனால்தான் பணிபுரியும் இடத்தில் ப்ராவிடென்ட் ஃபண்ட் வசதி உள்ளவர்கள்கூட ஒரு பி.பி.எஃப். அக்கவுன்ட்டையும் தொடங்குகிறார்கள். முதலீட்டுக் காலம் 15 வருடங்கள் என்றாலும், அதன் பின் ஐந்து, ஐந்து வருடங்களுக்கு இந்த அக்கவுன்ட்டை நீட்டிக்கலாம். தற்சமயம் வட்டி விகிதம் 7.10%.
வங்கி முதலீடுகளைவிட அஞ்சலக முதலீடுகள் விரும்பப்படுவதற்குக் காரணம் வங்கிகள் போன்று வாராக்கடன் பிரச்னைகள் இங்கு இல்லை. ஆனால், இன்னும் வங்கிகள் அளவு கணினிமயமாக்கப்படாததும், வெறும் ஆப் அளவிலேயே இருக்கின்றன என்பதும் முக்கியக் குறைகளாகப் பார்க்கப்படுகின்றன.
உங்களுக்கு உகந்த திட்டத்தைத் தேர்ந்தெடுத்து விரைவில் முதலீடு செய்யுங்கள்!
- அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/finance/best-post-office-investment-schemes-for-longterm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக