Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

`சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தோம்!’ - தூக்கிட்டு தம்பதி தற்கொலை; கலங்கவைத்த கடிதம்

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை கூட்ரோட்டிலுள்ள போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி என்கிற வரதராஜ். வயது 35. இவரின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இதனால், அணைக்கட்டு அருகேயுள்ள வசந்தநடை, கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா (வயது 23) என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் வரதராஜ். அணைக்கட்டுக்கு அருகிலுள்ள பெரிய ஊனை கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இரண்டாவது மனைவியுடன் புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். அணைக்கட்டு காவல் நிலையம் அருகிலேயே அரிசி, மாட்டுத்தீவனக் கடைவைத்து தொழிலிலும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டார். இதன் மூலம் மாதாந்திர ஏலச்சீட்டும் நடத்திவந்த வரதராஜுக்கு, கொரோனா காலம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

வரதராஜ்

கடன் வாங்கியவர்களும், சீட்டுப் பணம் எடுத்தவர்களும் திருப்பித் தராமல் இழுத்தடித்துவந்துள்ளனர். இன்னொரு பக்கம் குழந்தையில்லையே என்ற மனவேதனை வரதாஜையும் அவர் மனைவியையும் வாட்டி வதைத்திருக்கிற்து. இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வரதராஜ் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அவரின் மனைவி ஆஷா புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த வரதராஜ், மனைவி தூக்கில் சடலமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, மனைவியின் சடலம் தொங்கிய அதே புடவையில் தனது கழுத்தையும் சுற்றிக்கொண்டு தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று பகல் முழுவதும் இருவரும் வீட்டிலிருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். வீட்டுக் கதவைத் தட்டியும் அவர்கள் கதவைத் திறக்கவில்லை. உள்ளிருந்து சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அணைக்கட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, படுக்கை அறையில் வரதராஜும், அவரின் மனைவியும் தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜானும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

ஆஷா

உடல்கள் தொங்கிய இடத்தில், உருக்கமாக எழுதியிருந்த ஆறு பக்கங்கள்கொண்ட கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்தக் கடிதத்தில், `எங்கள் இறப்புக்கு யாரும் காரணமில்லை. நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தோம். மனைவி இறந்துவிட்டதால் நானும் தற்கொலை செய்துகொள்கிறேன். நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறேன். வட்டிக்குப் பலருக்கும் பணம் கொடுத்திருக்கிறேன். சீட்டு நடத்திவருகிறேன். எனக்கு எட்டுப் பேரிடமிருந்து ரூ.5.28 லட்சம் பணம் வர வேண்டும்’’ என்று எழுதியிருந்தார் வரதராஜ். மேலும் அந்தக் கடிதத்தில் கடன் கொடுத்தவர்கள், கடன் வாங்கியவர்கள், ஏலச்சீட்டு எடுத்தவர்கள், அரிசிக் கடையில் கடன் வைத்தவர்கள் யார் யார் போன்ற விவரங்களைப் பெயர், விலாசம், செல் நம்பருடன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/husband-and-wife-suicide-after-debt-issue-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக