என் மகளுக்கு 18 வயது. அவள் வயதுக்கு வந்தது முதல் அதிக ப்ளீடிங் இருக்கிறது. ரொம்பவும் அனீமிக்காக இருக்கிறாள். ஹீமோகுளோபின் அளவு 8 தான் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அடிக்கடி சளி, காய்ச்சல் என படுத்துவிடுவாள். கல்லூரிகள் திறக்கப்படவிருக்கும் இந்நிலையில் அவளை காலேஜுக்கு அனுப்பலாமா? நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த என்ன செய்வது?
- யசோதா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
``ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும். அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம். சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். சினைப்பையிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களும், மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகிய எல்லாம் ஒரே அலைவரிசைக்கு வரும். இவை எல்லாம் ஒழுங்கானால்தான் அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வரும். சரியான நாளில் வரும். சினைப்பையிலிருந்து கருமுட்டையும் வெளியே வரும். ஒரு பெண் வயதுக்கு வந்து, அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இவையெல்லாம் ஒழுங்குக்கு வரும்.
இந்த நாள்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் கொடுக்கலாம்.
Also Read: Covid Questions: பீரியட்ஸின்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
உங்களுடைய 18 வயது மகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னை இருக்கிறது என்று கேள்விப்படும்போது அவருக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்கு காரணம் சினைப்பைகளின் முறையற்ற இயக்கம். பாலிசிஸ்டிக் ஓவரீஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம்.
உங்கள் மகளின் லைஃப்ஸ்டைல் சரியில்லாமல், அதாவது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவராக இருக்கலாம். அடிக்கடி வெளியில் சாப்பிடுபவராக இருக்கலாம். பருமன் பிரச்னை அல்லது தைராய்டு பிரச்னை இருக்கலாம்.
அவருக்கு ப்ளீடிங் டிஸ்ஆர்டர் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தக் கசிவு, எங்கேயாவது அடிபட்டால் அந்தக் காயம் ஆறுவதற்கு நேரமெடுப்பது போன்றவை இருந்தால் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் அதை உறுதி செய்யலாம்.
Also Read: Covid Questions: பிசிஓடி (PCOD) பாதிப்புள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
முதல் கட்ட சிகிச்சையாக ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் கொடுக்க வேண்டும். இவை வலியையும் அதிக ப்ளீடிங்கையும் ஓரளவு கட்டுப்படுத்தும். அடுத்து ஹார்மோன்கள் கலக்காத மருந்துகள் கொடுத்து ப்ளீடிங்கை கட்டுப்படுத்தலாம். அதிலும் முன்னேற்றம் தெரியாவிட்டால் ஹார்மோன் மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம். பருமன் அதிகமிருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். இது ஒரு சுழற்சி மாதிரி. இதை ஏதோ ஓரிடத்தில் நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஓர் அம்மாவாக உங்களுடைய கவலை புரிகிறது. நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள மகளை கல்லூரிக்கு அனுப்பலாமா என்கிறீர்கள். வீட்டிலிருக்கும் நாள்களில் உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லுங்கள். மூன்று வேளைகளும் வீட்டில் சமைக்கிற சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என சத்தாகச் சாப்பிட வையுங்கள். பருமனாக இருந்தால்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. எல்லோருமே ஆரோக்கியத்துக்காக அதைப் பின்பற்றலாம்.
அனீமியா குணப்படுத்தப்படாவிட்டால் நிச்சயம் இன்ஃபெக்ஷன் வரும். எனவே முதல் வேலையாக அதைச் சரிசெய்யும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி வந்துவிட்டதால் தாமதிக்காமல் உங்கள் மகளுக்கு தடுப்பூசி போட்டு பிறகு காலேஜுக்கு அனுப்புங்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-i-send-my-anemic-daughter-to-college-amidst-this-pandemic-situation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக