Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கொதிக்கும் அரிசிக் கஞ்சியை தலையில் ஊற்றும் வேட்டைப்பானைத் திருவிழா... இதில் என்னவெல்லாம் நடக்கும்?

தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயணத்து காலத்து சம்பவங்கள் பல நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஒன்றுதான் ’வாலிவதம்’.

தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்திரி மலையில் இருந்த ராமனைச் சந்தித்து உதவி கேட்கிறார். சுக்ரீவனுக்கு உதவ நினைத்தார் ராமர். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டால், தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், வாலியை மறைந்திருந்து வதம் செய்தார் ராமர்.

கள்ளவாண்ட சுவாமி

கீழே விழுந்த வாலி, ’மறைந்திருந்து என்னை வீழ்த்தி விட்டாயே ராமா..! கள்ள ஆண்டவனே!’ என்று கதறியபடியே உயிர்நீத்தார். ராமாயணத்தில் ’கிஷ்கிந்தை’ காண்டத்தில் வரும் இந்த வாலிவதம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள மணக்கரை பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டி மணக்கரையில் ராமரின் நினைவாக கள்ளவாண்ட சுவாமி கோயிலை எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். ’கள்ள ஆண்டவர்’ என்ற பெயரே மருவி ‘கள்ளவாண்டர்’ என்றானதாம்.

இங்கிருந்து ’பிடிமண்’ எடுத்துச் சென்று சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் கள்ளவாண்ட சுவாமி கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் மட்டுமே கள்ளவாண்ட சுவாமி கோயில்களைப் பார்க்க முடியும். வாலிவதம் திறந்தவெளியில் நடைபெற்றதால் இக்கோயில்களும் திறந்தவெளியிலேயே உள்ளன. தீராத்திகுளம் கிராமத்தில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலில் திருவிழா நடைபெற்றது.

பானைகளில் அரிசிக்கஞ்சி காய்ச்சுதல்
’வேட்டைப்பானை போடுதல்’தான் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி. மண்பானையில் கொதிக்கும் அரிசிக்கஞ்சியை தென்னம் பாளையால் எடுத்து தலை வழியே ஊற்றுதல்தான் வேட்டைப்பானை போடுதலின் சிறப்பு.

வேட்டைப்பானை நிகழ்ச்சியைப் பார்க்க சுற்றுவட்டார கிராம மக்கள் தீராத்திகுளத்தில் குவிந்திருந்தனர். நள்ளிரவில் 12 மணிக்கு கோயிலின் முன்பு வரிசையாக 11 அடுப்புகள் வைக்கப்பட்டு, அதன் மேல் 11 பெரிய மண் பானைகள் வைக்கப்பட்டன.

Also Read: தடைகள் நீங்கி எங்கும் எதிலும் வெற்றிபெற வைக்கும் ஸ்ரீஜெய விஜய ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

பனையோலைகளைக் கொண்டு தீ மூட்டி பச்சரிசிக்கஞ்சி காய்ச்சினார்கள். கஞ்சி கொதித்த பிறகு வேட்டைப்பானை பூஜை நடந்தது. நையாண்டி மேளமும், உருமி மேளமும் வாசிக்கப்பட்டன. வில்லிசைப் பாடலில் கள்ளவாண்ட சுவாமியின் திருக்கதைத் தாளத்துடன் எடுத்துச் சொல்லப்பட்டது. கள்ளவாண்ட சுவாமிக்கு ஆடும் பக்தர்கள் அந்தக் கதையைக் கேட்டபடியே சுவாமி வந்து ஆடினார்கள். அருள்முற்றிய நிலையில் வேட்டைப்பானைகள் அருகில் சென்று தென்னம்பாளையை (தென்னை மரத்து பாளை) எடுத்து பானைக்குள் முக்கி எடுத்து அரிசிக்கஞ்சியை தலையில் ஊற்றினார்கள்.

அரிசிக்கஞ்சியை தலையில் ஊற்றும் சாமியாடி

காண்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்த காட்சி அது. மேளச்சத்தத்தை விட விண்ணை முட்டியது பெண்களின் குலவைச் சத்தம். வேட்டைப்பானைத் திருவிழா குறித்து ஊர்மக்கள் சிலரிடம் பேசினோம், “பொதுவா மற்ற கோயில்கள்ல தீ மிதித்தல், ஆணிச்செறுப்பு போட்டு நடத்தல், அரிவாள்கள் மீது ஏறி நடத்தல்னு நடக்கும். ஆனா, கள்ளவாண்டசுவாமி கோயில்கள்ல ’வேட்டைப்பானை’தான் விசேஷம்.

Also Read: திருவண்ணாமலை: தொன்மையான வீரனுடைய நடுகல், தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு! சொல்லும் சேதி என்ன?

வாலியை மறைந்திருந்து வீழ்த்தியதால், கொதிக்கும் கஞ்சியை தன் தலையில் கொட்டிக்கொண்டு, தனக்குத்தானே ராமர் தண்டனை கொடுத்துக் கொள்வதாக ஐதிகம். கொதிக்கிற பானைக்கஞ்சியை தலையில ஊத்துறது சாதாரண விஷயமல்ல. சரியான விரதம் கடைபிடிக்கலேன்னா தலை வெந்துடும். கள்ளவாண்ட சுவாமிக்கு வேட்டைப்பானை போடுவதாக வேண்டிக்கிட்டா கல்வியில் மேன்மை, வேலைவாய்ப்பு, விவசாயச் செழிப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், கடன் பிரச்னையிலிருந்து விடுபடுதல், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி போன்ற வேண்டுதல்களை மனசுல நினைச்சு வேண்டிக்கிட்டா அடுத்த வருச வேட்டைப்பானை திருவிழாவுக்குள்ள வேண்டுதல்கள் நிறைவேறிடும்.

அரிசிக்கஞ்சியை தலையில் ஊற்றும் சாமியாடி

பணம், பொருள்களைத் திருடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அடுக்கடுக்கான கஷ்டங்களைக் கொடுத்து, மூன்றே நாள்களில் திருடியவரை அடையாளம் காட்டிவிடுவாரம் கள்ளவாண்டர் சுவாமி. அதனால், கள்ளவாண்ட சுவாமி கோயில் இருக்கும் ஊர்களில் திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கின்றனர்.



source https://www.vikatan.com/spiritual/news/thoothukudi-kallavandar-swamy-temple-vettai-paanai-festival-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக