ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்திலுள்ள தனியார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினந்தோறும் நள்ளிரவு நேரத்தில், பாலாற்றுக்கு கழிவுநீரைத் திறந்துவிடுகிறார்கள். மேல்விஷாரம் மலையிலிருந்து தஞ்சாவூரான் காலனி வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பாலாற்றில் கலக்கிறது ஒரு சிறிய மழைநீர் ஓடை. சுத்திகரிப்பு நிலையத்துக்குப் பின்புறமுள்ள தெருவிலும் இந்த ஓடையின் கால்வாய் இணைகிறது. யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க தொழிற்சாலைக்குள்ளிருந்து பின்பக்க தடுப்புச் சுவர் வரை பைப்லைன் பதித்திருக்கிறார்கள்.
அங்கு சுவரின் அடிப்பாகத்தில் இரண்டு பெரிய துளைகளைப் போட்டிருக்கிறார்கள். இந்தத் துளைகளின் வழியாகத்தான் பாலாற்று ஓடையில், ‘திபுதிபு’வென அருவியைப்போல் நச்சுநீரை திறந்துவிடுகிறார்கள். இதுகுறித்து, ஜூனியர் விகடன் நடப்பு இதழில், ‘‘நள்ளிரவில் நச்சுநீர் அருவி! -ராணிப்பேட்டையிலிருந்து ஆக்ஷன் ரிப்போர்ட்’’ என்ற தலைப்பில் தனியார் சுத்திகரிப்பு நிலையம் செய்த அட்டூழியத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறோம்.
கட்டுரை வெளியான நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் மற்றும் இளைஞர்கள் சிலர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நிரந்தமாக ‘சீல்’ வைக்கக்கோரியும், அதன் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாசுக்கட்டுப்பாடு வாரிய இணை இயக்குநர் ஆகியோரிடம் தொடர்ந்து புகாரளித்து வருகிறார்கள். தொழிற்சாலை தரப்பிலிருந்து சல்மானை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல்கள் வருகின்றன.
இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் கூறுகையில், ‘‘இந்தப் பிரச்னையை இத்துடன் கைவிட்டுவிட வேண்டும். முழுக்க முழுக்க முதலாளிகளின் மாவட்டம் இது. முதலாளிகளை எதிர்த்துவிட்டு உன்னால் இருக்க முடியாது. பேரத்துக்குப் படியவில்லையெனில் உயிரோடு இருக்க மாட்டாய்’ என மிரட்டினார்கள். மிரட்டல்கள் குறித்து அண்ணன் சீமானிடம் தெரிவித்தபின் காவல்துறையில் புகாரளிக்க உள்ளேன். ஒருபோதும் மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. பணத்துக்காகவும் பணியப் போவதில்லை. நச்சுநீரை நள்ளிரவில் திறந்துவிடும் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் வரை ஓயமாட்டோம். அதேசமயம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்களும், போலி சமூக ஆர்வலர்களும் சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் நச்சுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு நேர்மையாக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்கிறார்கள். இது, எங்களைப் போன்று களத்துக்கு வரும் இளைஞர்களின் மனதைப் புண்படுத்துகிறது. சிலரின் வாட்ஸ்-அப் பதிவுகளை ஸ்கிரீன் ஸாட் மூலம் எடுத்துவைத்துள்ளேன். விரைவில் அவர்கள் மீதும் காவல்துறையில் புகாரளிக்கப்படும்’’ என்றார்.
source https://www.vikatan.com/social-affairs/crime/unknown-people-threatened-a-young-man-who-protest-against-private-factory-in-ranipet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக