Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

பனங்கேணி, ஜாலரா, ஜோஹாத்; பழங்கால மக்களின் நீர் மேலாண்மை எப்படி இருந்தது தெரியுமா?

தண்ணீர் எவ்வளவு அவசியமானது என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆனால், நம்மில் பலருக்கும் அது ஏதோ அளவின்றிக் கிடைத்துக் கொண்டேயிருப்பதாக ஓர் எண்ணம் உண்டு. ஆனால் எதார்த்தத்தில், பூமியிலுள்ள நீர் வளத்துக்கும் ஓர் அளவுண்டு. அதிலும் தற்போது தீவிரமடைந்து வரும் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்புகளால், ஏரிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. வேகமான நகரமயமாக்கல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மாசுபாடுகளால் மேற்பரப்பு நீர் மட்டுமன்றி நிலத்தடி நீர் வளத்தையும் பெருமளவு இழந்து கொண்டிருக்கிறோம்.

நீர்ப் பாதுகாப்புதான் பூமியிலுள்ள உயிரினங்களின் இருப்பைத் தக்க வைக்க அடிப்படையானது. ஒவ்வோர் ஆண்டும் மாறிக் கொண்டிருக்கும் மழை அளவும் மழை பெய்யும் காலகட்டமும், சுற்றுச்சூழலுக்கும் சரி, நம் பயன்பாட்டிற்கும் சரி, திறம் மிக்க நீர் மேலாண்மைக்கான தேவையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

நீர் மேலாண்மை

வெள்ளம், வறட்சி ஆகிய பிரச்னைகளைப் பழங்கால மக்களும் சந்தித்துள்ளார்கள் என்பதைப் பழங்கால இந்தியாவின் வரலாறு சொல்கிறது. அதிலிருந்து தங்களின் இருப்பைத் தற்காத்துக் கொள்ள, அவர்கள் தனித்துவமான பல நீர் மேலாண்மை முறைகளைக் கையாண்டுள்ளார்கள். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலுமே அந்தந்த நிலவியலுக்குத் தகுந்தவாறு, மக்கள் தங்கள் நீர் மேலாண்மை முறைகளைக் கையாண்டுள்ளனர். சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தோலவிராவிலும் இரண்டு கால்வாய்கள் மழைநீரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் போலவே, தமிழ்நாடு முதல் பாலைவன மாநிலமான ராஜஸ்தான் வரை பல்வேறு வகையான மக்கள் அவர்களுக்குரிய நீரியல் கட்டுமானங்களைக் கொண்டிருந்தார்கள்.

1. ஜாலரா

ஜாலரா/ Jhalara

செவ்வக வடிவிலிருக்கும் செங்குத்தான கிணறுதான் இந்த ஜாலரா. பூமியின் மேற்பரப்பிலிருக்கும் ஏரி அல்லது குளத்தின் நீரிலிருந்து வடியும் நீரைப் பிடித்து வைப்பதற்கு வசதியாக, கிணற்றின் மூன்று பக்கங்களிலும் அடுக்கடுக்காகப் படிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

அவை கொஞ்சம் கொஞ்சமாக மேல்நிலை ஏரிகளிலிருந்து வடியும் நீரைப் பிடித்து வைக்க உதவும். சமூகப் பயன்பாடுகள், பெரிய பெரிய திருவிழாக் கூட்டங்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இதில் சேமிக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட்டது. ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜோத்பூரில் இதுபோன்ற 8 ஜாலராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் மிகவும் பழைமையானதாக அறியப்படுவது, 1660-ம் ஆண்டைச் சேர்ந்த மகாமந்திர் ஜாலரா.

2. ஜோஹாத்

ஜோஹாத்/ Johad

கர்நாடகா, ஒடிசா போன்ற பகுதிகளில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மீள்நிரப்பில் பயன்படுத்தப்பட்ட பழைமையான நீர் மேலாண்மை முறையில் இதுவும் ஒன்று. இதுவொரு சிறிய அணைக்கட்டைப் போன்றது. மூன்று புறங்களில் நிலம் உயரமாக இருக்கும் இடத்தில் இது கட்டப்படும்.

ஆழமாகக் குழிதோண்டி நீர்த்தேக்கத்தை அமைப்பார்கள். அதிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்ணைப் பயன்படுத்தி அதைச் சுற்றியும் சுவர் அமைப்பார்கள். சிலநேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோஹாத்துகளை குறுகிய கால்வாய்களின் வழியே இணைத்திருப்பார்கள். அவற்றின் முடிவில் ஒரு நதி அல்லது ஓடையோடு இணைக்கப்பட்டிருக்கும்.

3. பனங்கேணி

பனங்கேணி/ Panam Keni

வயநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட குருமா என்ற பழங்குடிகள் ஒரு தனித்துவமான கிணற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதன் பெயர், பனங்கேணி. பனை மரத் தண்டுகளை நீரி நீண்ட நேரத்துக்கு ஊற வைத்து, கெட்டிப்படுத்தி, நான்கு மீட்டர் விட்டமும் ஆழமும் கொண்ட மரத் தொட்டிகளை உருவாக்குகிறார்கள்.

பின்னர், காட்டுக்குள்ளும் விவசாய நிலங்களிலும் இருக்கும் நிலத்தடி நீர் ஊறும் பகுதிகளில் அதை நிலத்தில் குழி தோண்டிப் பொருத்துகிறார்கள். இதன்மூலம் கோடைக்காலங்களிலும் அந்த மரத் தொட்டிகளில் நீர் ஊறிக்கொண்டேயிருக்கும். பழங்குடி மக்கள் அந்த நீரைத் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

4. பவோலி

பவோலி/ Baoli

கொடைத்தன்மை நிறைந்த, குடிமை சார்ந்த நீர்ப் பாதுகாப்பு அமைப்பாக பவோலி கருதப்படுகிறது. இது அனைத்து மக்களுக்குமானது. இதில் யார் வேண்டுமானாலும் நீர் அருந்தலாம். இதன் சுவர்களில், கலை வேலைப்பாடுகள் இருப்பதோடு, படிக்கட்டுகளும் உள்ளே மேலும் சில அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது நீர்ப் பயன்பாட்டுக்கானதாக மட்டுமன்றி, இங்கு சமூகக் கூடுதல்களும் நிகழ்ந்துள்ளன.

வணிகப் போக்குவரத்து நிறைந்த பாதைகளில் இந்தப் பவோலிகள் பயணிகளுக்கான ஓய்விடங்களாகவும் செயல் பட்டுள்ளன. இதிலிருக்கும் படிக்கட்டுகளில், வடிகால்கள் அமைக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்குத் தேவையான நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

5. குல்ஸ்

குல்ஸ்/ Kuhls

இமாசலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் அமைக்கப்படும் மேற்பரப்பு வாய்க்கால்களே குல்ஸ் என்றழைக்கப்படுகின்றன. இவை, ஆறுகள் மற்றும் ஓடைகளிலிருந்து உருகும் பனி நீரை விவசாய நிலங்களுக்குக் கொண்டு வருகின்றன. கங்க்ரா பள்ளத்தாக்கில் சுமார் 715 பெரியளவிலான குல்ஸ் வாய்க்கால்களும் 2,500 சிறு சிறு குல்ஸ் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அவை அந்தப் பள்ளத்தாக்கில் இருக்கும் சுமார் 30,000 ஹெக்டேர் விவசாய நிலத்துக்குப் பாசனம் வழங்குகின்றன. இவை பொதுமக்களின் நன்கொடைகள் மூலமாகக் கட்டப்படுகின்றன என்பது இதன் தனிச் சிறப்பு. அதோடு, இதைப் பராமரிப்பதற்கு என்றே தனியாக ஒருவர் நியமிக்கவும் படுகிறார்.

6. ஏரி

ஏரி

Also Read: குழந்தைகளுக்கும் சிறுநீரகத்தில் கல், மக்களுக்கு உடல்நல பாதிப்புகள்; ஆபத்தில் எண்ணூர் மக்கள்!

தமிழ்நாட்டின் மிகவும் தொன்மை வாய்ந்த நீர் மேலாண்மை முறையில் முக்கியமானவை ஏரிகள். வெள்ளக் கட்டுப்பாட்டு முறையாகவும் இது செயல்படுகிறது. மண் அரிப்பு, மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு என்று பல வழிகளில் ஏரி நீர் மேலாண்மை தனித்துவம் வாய்ந்தது. இந்த முறையிலான நீர்ப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆற்று நீரைத் திசைதிருப்பி ஏரிக்கு நீர் கொண்டுவரும் முறை, மழை நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் ஏரிகள் என்று வெவ்வேறு வகைகளில் நிலத்துக்கு தகுந்தாற்போல் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை வாய்க்கால் மூலம் தொடர்புபடுத்தவும் பட்டுள்ளன. இதன்மூலம், விவசாய நிலங்களுக்கும் ஊர் மக்களின் பயன்பாட்டுக்காகவும் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி அமைப்புகள் தமிழக விவசாயத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளன, வகித்து வருகின்றன.

நீர் மேலாண்மை

Also Read: `இமயமலையில் பனிமனிதர்கள் வாழ்வது உண்மையா?' - இத்தாலியரின் ஆதாரங்கள் சொல்வது என்ன?

சூழலியல் ஒத்திசைவான, மரபு மிக்க அமைப்புகளை நிலவியலுக்குத் தகுந்தாற்போல் இந்திய மக்கள் உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். அவை, பல்வேறு வழிகளில் இன்றளவும் சூழலியல் சேவைகளைச் செய்வதோடு, நீர்ப் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. அத்தகைய நீரியல் அமைப்புகளை அழிக்கும் வேலைகள் கடந்த 30 ஆண்டுகளில் அதிகமாகவே நடந்துள்ளன. தற்போதும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றைத் தவிர்த்து நம்முடைய மரபுமிக்க நீர் மேலாண்மையை முழுமையாகப் புரிந்துகொண்டு பாதுகாப்போம்.



source https://www.vikatan.com/news/environment/marvellous-water-management-techniques-of-ancient-indians

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக