Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

சத்தீஸ்கர்: `முதல்வர் பதவி; அதிகார போட்டியால் ஆட்டம் காணும் காங்கிரஸ்!' - உச்சத்தில் உட்கட்சி பூசல்

காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் மட்டும் எப்போதுமே உட்கட்சி பூசல்களுக்குக் குறையிருக்காது. கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பாஜகவை வீழ்த்த தீவிரமாக களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பதவிக்காகக் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் பனிப் போர் நடத்துவதென்பது தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாகவே டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிகமாக விமர்சனத்துக்குள்ளாகும் கட்சியாகக் காங்கிரஸ் மாறியிருக்கிறது. காங்கிரஸில் முதல்வர் அரியணைக்காகவே பெரும்பாலான பனிப்போர்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான், பஞ்சாபைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் தற்போது அம்மாநில முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையேயான உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து முடிந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. பாஜக அலையின் தாக்கம் இந்தியா முழுவதும் தீவிரமாக இருந்த நேரத்தில் பாஜக ஆட்சி செய்து வந்த மாநிலத்திலேயே அக்கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது அந்நேரத்தில் பெரியளவில் பேசப்பட்டது .

முதல்வர் பூபேஷ் பாகேல்

மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த பின்னர், காங்கிரஸ் தலைமை அக்கட்சியின் சார்பில் படான் தொகுதியில் போட்டியிட்டுத் தொடர்ந்து 5 முறை சட்டசபைக்குத் தேர்வான பூபேஷ் பாகேலை முதல்வராகத் தேர்வு செய்தது. ஆனால், அந்த நேரத்தில் பூபேஷ் பாகேலை தவிர்த்து முதல்வர் ரேஸில் அம்மாநில மூத்த தலைவர்களுள் ஒருவரான டி.எஸ். சிங் டியோவின் பெயரும் அடிபட்டது. கட்சியில் பெரும்பான்மை ஆதரவு மற்றும் மக்கள் செல்வாக்கு என்ற இரு அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இருவருமே சமபலம் படைத்தவர்களாக இருந்த போதும், காங்கிரஸ் தலைமை பூபேஷ் பாகேலுக்கு தான் முதல்வர் வாய்ப்பு வழங்கியது.

பூபேஷ் பாகேலை முதல்வராகக் காங்கிரஸ் தலைமை 2018-ல் அறிவித்த போதே, 'சுழற்சி முறை முதல்வர் பதவி' என்ற பேச்சும் அடிபட்டது. அதாவது, மாநிலத்தில் கட்சியின் ஸ்திரத்தன்மையை அதிகரித்து கட்சியில் உட்கட்சி பூசல்களைத் தவிர்க்கக் காங்கிரஸ் தலைமை பூபேஷ் பாகேல் மற்றும் சிங் டியோஆகிய இருவரையும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

Also Read: பஞ்சாப்: சிக்கலில் பாஜக; விரிசலில் காங்கிரஸ்; முந்தும் ஆம் ஆத்மி! - 2022 தேர்தல் யாருக்குச் சாதகம்?

இரண்டரை ஆண்டுகள் பூபேஷும் , மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிங் டியோவும் முதல்வராகப் பதவி வகித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையின் இந்த திட்டத்திற்கு பூபேஷ் பாகேல் மற்றும் சிங் டியோ இருவரும் ஒப்புதல் அளிக்கவே, முதல்வர் பதவி புபேஷுக்கும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பதவி சிங் டியோவுக்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2018-ல் சத்தீஸ்கர் முதல்வராகப் பதவியேற்ற பூபேஷ் தற்போது முழுமையாக இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில், சுழற்சி முறை முதல்வர் ஒப்பந்தத்தின் படி பூபேஷ் பாகேல் நடந்து கொள்ளாமல் தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி சிங் டியோ, பூபேஷ் பாகேலுக்கு எதிராகத் தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கி இருக்கிறார். ஆனால், பூபேஷ் பாகேல், சிங் டியோவின் அதிருப்தி குரல்களுக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கத் தேவையான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இருவரிடையே நிலவி வந்த பனிப் போரானது தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் தி.எஸ்.சிங் டியோ

மாநில காங்கிரஸில் நிலவும் இந்த உட்கட்சி பூசல்கள் தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூன் மாதத்தின் தொடக்கம் முதலே சிங் டியோவின் ஆதரவாளர்கள் சுழற்சி முறை முதல்வர் என்ற ஒப்பந்தத்தின் படி முதல்வர் பதவி சிங் டியோவுக்கு வழங்கப்படும் என்று பலத்த எதிர்பார்ப்பிலிருந்து வந்தனர். ஆனால், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பூபேஷுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகார மாற்றத்திற்கான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது . அதன் காரணமாக சிங் டியோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் முதல்வர் பூபேஷ் பாகேலை கட்சி பணிகளில் ஓரம் கட்ட துவங்கினார்கள். அதே போல், முதல்வர் பூபேஷ் ஆதரவாளர்களும் கட்சி நிகழ்ச்சிகளில் சிங் டியோ மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓரம் கட்டினார்கள். அதனால், சத்தீஸ்கர் காங்கிரஸ் இரண்டாக உடைந்து போனது.

Also Read: தொடர்ந்து முடக்கப்படும் காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள்; என்ன காரணம்?

சுழற்சி முறை திட்டத்தின் கீழ் தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று டெல்லி மேலிடத்திடம் தொலைபேசியில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிங் டியோ, அண்மையில் டெல்லிக்குத் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று காங்கிரஸ் எம்.பி .ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்து தன்னை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார். சிங் டியோ டெல்லிக்கு சென்றதைத் தொடர்ந்து, முதல்வர் பூபேஷ் பாகேலும் டெல்லிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் முகாமிட்டிருந்த சிங் டியோ மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த பேச்சுவார்த்தை கூட்டம் முடிந்த கையுடன் முதல்வர் பூபேஷ் பாகேல் ராய்பூருக்கு திரும்பினார். ஆனால், சிங் டியோ தொடர்ந்து டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார். ராய்ப்பூர் திரும்பிய முதல்வர் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களிடம், "காங்கிரஸ் அரசைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் சிலர் களமிறங்கியிருக்கின்றனர். அதன் காரணமாகவே தேவையில்லாமல் சுழற்சி முறை முதல்வர் என்ற கோரிக்கையினை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.

சத்தீஸ்கர் சலசலப்பு!

இந்நிலையில், மீண்டும் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முதல்வர் பூபேஷ் பாகேல் டெல்லிக்குத் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களுடன் சென்றிருக்கிறார். மீண்டும் சிங் டியோ மற்றும் பூபேஷ் ஆகியோரிடம் ராகுல்காந்தி கலந்தாலோசித்து விட்டு சத்தீஸ்கர் முதல்வர் பதவி தொடர்பான முக்கிய முடிவினை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூபேஷுடன் மூன்று அமைச்சர்கள் உட்பட 20 எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு ஆதவராக டெல்லிக்குச் சென்றிருக்கின்றனர். ராய்ப்பூர் விமான நிலையத்தில் டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பூபேஷ், "கட்சித் தலைமையிலிருந்து எனக்கு நேற்றைய தினம் அழைப்பு வந்திருந்தது. அதன் பேரில், தான் தற்போது டெல்லிக்குச் செல்கிறேன். மற்றபடி ஒன்றுமில்லை" என்று கூறினார். ஆனால், சத்தீஸ்கர் காங்கிரஸின் நிலவரம் குறித்துப் பேசிய மாநில பொறுப்பாளர் பி.எல். புன்யா, "கட்சியில் முதல்வர் பதவி தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முதல்வர் பூபேஷ் டெல்லிக்குச் சென்றிருப்பது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கவே" என்றார். இதன் மூலம் கட்சி அதிகார போட்டியால் இரண்டாக உடைந்து கிடப்பது உறுதியாகியிருக்கிறது.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் சிங் டியோ, "சத்தீஸ்கர் காங்கிரஸில் சுழற்சி முறை முதல்வர் என்ற திட்டம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. அது குறித்த பேச்சுகள் அனைத்தும் ஊடகங்களின் யூகங்கள் மட்டுமே. டெல்லி மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நடக்கத் தயாராக இருக்கிறேன். சத்தீஸ்கரில் தொடர்ந்து முழுமையாக 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும்" என்றார். இதுவரை மறைமுகமாக முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த சிங் டியோ தற்போது பொதுவெளியில் சுழற்சி முறை முதல்வர் ஒப்பந்தம் என்றெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி விட்டு, பின்னர் எதற்காக டெல்லியில் ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார் என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: கோஷ்டிப்பூசல்தான் காங்கிரஸ் கட்சியின் சாபக்கேடு!

சத்தீஸ்கர் காங்கிரஸைப் பொறுத்தமட்டில் சிங் டியோவை விடவும் செல்வாக்கு மிக்க நபராக தற்போதைய முதல்வர் பூபேஷ் பாகேல் இருப்பதால், காங்கிரஸ் மேலிடம் சிங்கிற்கு முதல்வர் பதவி வழங்குவது சந்தேகம் தான் என்றும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களால் இந்த தொடர் உட்கட்சி பூசல்களால் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chhattisgarh-congress-crisis-congress-high-command-on-full-swing-to-resolve-conflict

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக