Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

100 நாள், நான்கு தூண்கள்! - உதய சூரியனாக ஒளியேற்றினாரா ஸ்டாலின்?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி இந்த வார்த்தைகள் தமிழக அரசியலில் இருந்து பிரிக்க முடியாத வார்த்தைகள். ஏன் இன்னும் சொல்லப் போனால் இந்த நான்கு வார்த்தைகள் தான் திராவிட இயக்கங்களை தமிழக அரசியலிலே இயக்கி கொண்டிருக்கிறது. 1967 இல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகள் இந்த வார்த்தைகள் தான் திராவிட இயக்கங்களின், குறிப்பாக திமுக-வின் ஆணிவேர். அந்த அளவுக்கு இந்த வார்த்தைகளும், திராவிட முன்னேற்ற கழகமும் பிரிக்க முடியாதவை.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்த ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்தின் போது “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல இந்த அறிக்கையில் யானையும் இல்லை, மணியோசையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் உரையை குறிப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் "நான்கு கால்கள் தான் யானையின் பலம், அதேபோல சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி இந்த நான்கின் பலத்தில் தான் திமுகவும் நிற்கிறது இந்த அரசும் நிற்கிறது.” என்று யானையின் கால்களையும், திமுகவின் கொள்கை ரீதியிலான சிந்தனைகளையும் உவமையாக எடுத்து கூறி பதிலளித்தார். அதனை சொல்வதோடு மட்டும் நிற்காமல் தனது இந்த நூறு நாள் ஆட்சியில் நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார்.

இவற்றில் முதல் சிந்தனை சமூக நீதி, சமூக நீதியென்றால் அதன் தொடக்கம் நீதிக்கட்சியையே சாரும், இந்திய துணை கண்டத்தில் இடஒதுக்கீடு என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே முதன் முதலாக அறிமுகப்படுத்தியது நீதி கட்சியே. அதன் தொடர்ச்சியாக, சமூக நீதி காத்திடும் விதமாக, 13 நவம்பர் 1969 அன்று அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முதலாவது பிற்படுத்தப் பட்டோருக்கான ஆணையம் , ஏ.என்.சட்டநாதன் தலைமையிலும், எஸ். சின்னப்பன் மற்றும் எம். ஏ. ஜமால் உசேன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டுருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த குழுவின் முதன்மை பணியானது அதுவரை அரசால் பிற்படுத்த பட்டோரின் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பிற்படுத்த பட்டோர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் ஆகும். மேலும் , இந்த சட்டநாதன் கமிஷன் அறிக்கை வெளிவந்தபின், அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 25% லிருந்து 31% மாகவும் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடவொதிக்கீட்டை 16% லிருந்து 18% மாகவும் அரசு உயர்த்தியது. இதன் மூலம் இடவொதிக்கீடு மொத்தம் 49% மாக உயர்ந்தது.

இதன் தொடர்ச்சியான, இப்போதைய திமுக அரசும் சமூக நீதியை காத்திடும் வகையில், கடந்த சில வருடங்களாக மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்பின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர்க்கான இடவொதிக்கீடு பின்பற்ற படாத நிலையில், அதனை நடைமுறை படுத்த வலியுறுத்தி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த வழக்கில், 27 ஜூலை 2020 இல் சென்னை உயர்நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோர்க்கான இடவொதிக்கீட்டை நடைமுறை படுத்த வேண்டுமென்று ஆணையிட்டது.

ஆனாலும் இதை நடைமுறை படுத்தாமல் ஒன்றிய அரசு தாமதப்படுத்தியதால் ,ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதுதொடர்பாக இந்த ஆண்டு ஜூலை 19 இல் ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவின் விசாரணையின் விளைவாக, ஒன்றிய அரசு, மாநிலங்கள் அகிலஇந்திய தொகுப்பிற்கு வழங்கும் 15% மருத்துவ படிப்பிற்கான இளங்கலை இடங்களிலும் மற்றும் 50% முதுகலை இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்க்கான 27% இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 50% பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை அகில இந்திய தொகுப்பிலும் நடைமுறை படுத்த சட்ட ரீதியாக திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார்.

கவச உடையில் முதல்வர் ஸ்டாலின்

இரண்டாவது சிந்தனை சுயமரியாதை, சமூக நீதியை பற்றி பேசும் போது எப்படி நீதி கட்சின் பங்களிப்பை மறக்க முடியாதோ, அதை போலவே சுயமரியாதை என்றால் தந்தை பெரியாரின் பங்களிப்பை தவிர்க்க முடியாது.

பெரியார் அவர்களால் தொடங்க பட்ட சுயமரியாதை இயக்கமும் மற்றும் நீதி கட்சியும், அதன் பின் வந்த திராவிடர் கழகமும் ஆலய நுழைவு போராட்டம் மட்டுமல்லாது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான சம உரிமை மற்றும் இன்னும் பல சுயமரியாதை சார்ந்த சமூக சீர்திருத்தங்கள் தொடர்பான போராட்டங்களை இந்த மண்ணில் விதைத்தனர்,

அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் விதைத்த அந்த விதை இப்போது ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நூறு நாள் ஆட்சியில் அன்னை தமிழில் அர்ச்சனை முதல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது வரை ஆழமாக வேரூன்றி வளர்ந்திருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் சுயமரியாதையை நிலைநிறுத்த, கடந்த 14 ம் தேதி இதற்காக முறையாக பயிற்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிநியமனம் செய்யப்படாமல் இருந்த அனைத்து சாதியை சேர்ந்த 24 அர்ச்சகர்களை தமிழ்நாடெங்கிலும் உள்ள திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்துள்ளார். இதன் மூலமாக, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியும் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் கனவையும் நனவாக்கி சுயமரியாதையைக் காத்துள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

மூன்றாவது சிந்தனை மொழி இன பற்று, தமிழ் மொழியை காக்கும் பொருட்டு, 1937 இல் நீதிக்கட்சி, அதன் பின் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நடத்திய இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், இன்றளவிலும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது. மேலும், 18 ஜூலை 1967 அன்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு தமிழ் பேசும் இந்த நிலத்தின் பெயரை மெட்ராஸ் ஸ்டேட் என்பதிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதை நிறைவேற்றி தமிழுக்கு பெருமையை சேர்த்தது.

அதன் தொடர்ச்சியாக, 2004 இல், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட இலக்கண, இலக்கிய செழுமை கொண்ட உலகின் மூத்த மொழியான தமிழை இந்தியாவின் முதல் செம்மொழியாக ஒன்றிய அரசு அறிவித்ததில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் சீரிய மற்றும் தொடர் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். இப்படியாக அரசியலில் அன்னை தமிழை அரியணை ஏற்றி மகுடம் சேர்த்த திமுக, இந்த நூறு நாள் ஆட்சியில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பின் மூலம் கோயில் கருவறையில் தமிழை ஒலிக்க செய்து அன்னை தமிழை அனைத்து துறைகளிலும் அரியணை ஏற்றி மகுடம் சேர்த்துள்ளது.

நான்காவது சிந்தனை மாநில சுயாட்சி, 22 செப்டம்பர் 1969 அன்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை பற்றி ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அரசாணை மூலம் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில், மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார்.

இந்த குழுவின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்ந்து மாநில சுயாட்சியின் உயிர் நாடியான சட்டமன்றம், நிர்வாகம், நிதி பங்கீடு மற்றும் அதன் கீழ் இயங்கும் நீதித்துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பது. அந்த குழுவின் ஆய்வறிக்கைக்கு பிறகு , 16 ஏப்ரல் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ராஜமன்னார் குழுவின் அறிக்கை தொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதன் பின், இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்டு , இறுதியாக 20 ஏப்ரல் 1974 இல் மு.கருணாநிதி அவர்களின் பதிலுரையை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

ராஜமன்னார் கமிஷனின் அறிக்கையே மாநில சுயாட்சி குறித்து அகில இந்திய அளவில் முதல் விவாதத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக, கலைஞரின் வழிவந்த ஸ்டாலின் அவர்கள் தான் பதவி ஏற்றவுடன் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை நீக்கி கல்வியில் மாநிலங்களால் நடத்த படும் கல்வி நிறுவனங்களில் மாநிலங்களின் உரிமையை நிலை நாட்டும் பொருட்டு ஒய்வு பெற்ற நீதிபதி ஏ. கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவும் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையானது நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கி கல்வியில் மாநில உரிமைகள் மீட்டு எடுக்க ஒரு வழிகாட்டியாக உள்ளது.

நீதி கட்சி வழியில் சமூக நீதி, தந்தை பெரியார் வழியில் சுயமரியாதை, அறிஞர் அண்ணா வழியில் மொழிப்பற்று மற்றும் கலைஞர் கருணாநிதி வழியில் மாநில சுயாட்சி என்று ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தின் நான்கு தூண்களையும் ஒருங்கே நூறு நாட்களில் நிறைவேற்றி இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு உதய சூரியனாக ஒளியேற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.


-க. சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-hundred-days-of-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக