Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

``நதியில் வெள்ளம்; கரையில் நெருப்பு;" ஓ.பி.எஸ் பாடலின் பின்னணி?!

சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி சனிக்கிழமையன்று வேளாண்மை, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது ‘நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு... இதுதான் தற்போது எனது நிலைமை’ என்ற சிவாஜி பாடலின் வரிகளைப் பாடி, ‘இப்படியான தனது நிலைமை சட்டசபை முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாகத் தெரியும்’ என்றும் குறிப்பிட்டார் ஓ.பி.எஸ். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாத நாளன்று பன்னீர் இப்படிப் பேசியதுதான் கட்சிக்குள் ஹாட் டாபிக்!

எடப்பாடி பழனிசாமி

பன்னீரின் இந்த பாடலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் விசாரித்தோம். “அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராகவும், எம்.ஜி.ஆரின் பக்தராகவும் திகழும் பன்னீர், எம்.ஜி.ஆர் பாடலைக் குறிப்பிட்டுப் பேசாமல், சிவாஜி பாடலைக் குறிப்பிட்டது ஆச்சர்யம்தான். 1971-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘தேனும் பாலும்’ படத்தில் சிவாஜிக்கு பத்மினி மற்றும் சரோஜாதேவி என இரு மனைவிகள். இருவருக்கிடையிலும் மாட்டிக்கொண்டு விழிக்கும் சிவாஜி இந்தப் பாடலைப் பாடியிருப்பார்.

தேனும் பாலும் திரைப்படம்

நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நதியிலும் இருக்க முடியாது. கரைக்குப் போகலாம் என நினைத்தால் அங்கும் நெருப்பு பரவிவருகிறது. எங்கு போவதென்று தெரியாத நிலையிலும் சிரித்துக்கொண்டிருப்பதாக அதன் அர்த்தம் சொல்கிறது. இதனை இந்த நேரத்தில், அதிலும் சட்டசபையில் சொல்வதற்கு பன்னீருக்கு என்ன நேர்ந்தது? என்று நினைக்கலாம். நதியில் வெள்ளம் என்பது கட்சிக்குள் நடக்கும் களேபரங்களைக் குறிப்பிடுகிறார் பன்னீர். தனக்கெதிராக தொடர்ந்து சதி செய்து எடப்பாடி அண்ட் கோ முன்னேறிவிட்டதை மறைமுகமாகப் போட்டுடைக்கிறார். அதேசமயம் தி.மு.க அரசின் நடவடிக்கைகளாலும் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்ற அர்த்தமும் அதில் அடங்கியிருக்கிறது. இந்த பிரச்னையெல்லாம் எனக்குத் தேவையில்லை, கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு மட்டும் போதும், நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்று ஒதுங்கப்பார்த்தாலும், கரை நெருப்பு போல விட மறுக்கிறார்கள். தொடர்ந்து உள்ளுக்குள்ளேயே இருக்கவைத்து, குட்டக்குட்ட குனியச்சொல்லி வருகிறார்கள். இந்த இரண்டு வகையான தாக்குதல்களையும் சமாளித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார். எனினும், வெள்ளமும் வடியும், நெருப்பும் அணையும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பதாகவும் அதன் உள் அர்த்தம் சொல்கிறது. எங்களுக்குத் தெரிந்தவரை இதுதான் அர்த்தமாக இருக்கும் என்ற நாங்கள் நினைக்கிறோம். தனது இந்த நிலைமை அவை முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாகத் தெரியும் என்று துரைமுருகனை இதில் கோர்த்துவிட்டதற்காக நோக்கம்தான் என்னவென்று விளங்கவில்லை. விரைவில் வெள்ளம் வடிந்து, நெருப்பு அடங்கி கட்சி பன்னீரின் கைகளுக்கு வரும்” என்றனர்.

Also Read: `எடப்பாடி பழனிசாமி, பன்னீருக்கு சிக்கல் தொடங்கி ஸ்டாலினின் புது உத்தரவு வரை'- கழுகார் அப்டேட்ஸ்

கோவை செல்வராஜ்

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசியபோது, “சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்கள், விவசாயம், பால், மீன்வளம், கால்நடை எல்லா துறைகளும் சேர்ந்து வந்ததால், அரசுடைய நிதியமைச்சர் எந்த துறைகளிலும் அரசு கஜானாவில் பணமேயில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு கருத்துச் சொல்லியிருக்கிற சினிமா பாடலை எடுத்து உதாரணத்துக்குச் சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/opaneerselvam-sang-a-song-during-his-speech-at-tamil-nadu-assembly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக