நம்மூரில் கொஞ்சம் முற்போக்காக பெண்கள் சிந்திக்க ஆரம்பித்ததும் முதல் முட்டுக்கட்டை பெற்றோரிடம், குறிப்பாக அம்மாவிடமிருந்துதான் வரும். உடை, வேலைக்குச் செல்வது, பொருளாதார சுதந்திரம், திருமணம் என்று எதைப் பற்றியும் சுய முடிவு எடுக்கும் பெண்களை முதலில் எதிர்ப்பவர் அம்மா தான். திருமண வயதில், ‘முறைப்படி யார் கையிலாவது பிடித்துக் கொடுத்துவிட்டால் தனது கடமை முடிந்து விடும்’ என்றும் அதுவரை எந்த சூழ்நிலையிலும் தனது மகள்கள் பேசவே கூடாது என்பதும் அம்மாக்களின் எண்ணமாக இருக்கிறது.
பல அம்மாக்களுக்கு மகள்களுக்கு நல்ல கல்வியும், வேலையும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட திருமணம் என்று வரும்போது ’மாப்பிள்ளை சொல்படி நடந்துகொள்’ என்பதே பிரதான பாடமாக இருக்கிறது. சமூகம் என்ன சொல்லும் என்கிற பயமே அவர்களை அதிகம் வழிநடத்துகிறது.
ஓகே… எது முற்போக்கு, குடும்ப அமைப்பில் அம்மாக்களின் பங்கு என்ன என்பதையெல்லாம் பின்னர் விவாதித்து அலசுவோம். அதற்கு முன் ‘ஆதலினால் காதல் செய்வீர் 3’-வது எபிசோட் எப்படி இருந்தது?!
காயத்ரி தனது அத்தை மகள் புனிதாவிடம் தனக்கு வேலை பார்க்க அனுமதி கிடைத்ததையும், தனது தந்தை புனிதாவின் பொறுப்பில் சென்னை அனுப்ப ஒப்புக்கொண்டது பற்றியும் சொல்கிறாள். புனிதா காயத்ரியை ‘லிட்டில் பிரின்சஸ்’ என்று கேலி செய்கிறாள். வெளி உலகம் தெரியாமல் பெற்றோரின் அதீத செல்லத்தில் வளரும் பெண்களை டேட்’ஸ் லிட்டில் பிரின்சஸ் #DadsLittlePrincess என்பது சோஷியல் மீடியாவின் மொழி.
மாப்பிள்ளை, காயத்ரியை ’ஆறு மாதங்கள் வேலைக்குச் செல்ல அனுமதித்திருக்கிறார்’ என்று சொன்னது புனிதாவை கோபப்பட வைக்கிறது. ”யார் யாருக்கு பர்மிஷன் கொடுப்பது, அதுவும் பெருந்தன்மையா மாப்பிள்ளையே சொல்லிட்டாருன்னு சொல்றாங்க” என்று கோபத்துடன் தனது லிவிங் டுகெதர் பார்ட்னரிடம் சொல்கிறாள். மேலும் தனக்கு இதெல்லாம் ஒத்துவராது என்றும் பொருமுகிறாள்.
அவளது பார்ட்னர், “நீயும் தான் பயங்கர Progressive thinking மாதிரி பேசற... ஆனா வேஷம் போடுறது மாதிரிதான இருக்கு உன் நிலைமையும்” என்று கேட்பான். அதற்கு புனிதா, “என்ன செய்வது நான் மட்டும் யோசிச்சா போதுமா, ஊரும் திருந்தனும்ல. இந்த வேஷம் போடாட்டி எங்கம்மா அடுத்த பஸ் பிடிச்சு இங்க வந்துடுவாங்க. அதை சமாளிக்கத்தான் இந்த வேஷம்” என்பாள்.
‘’உன் மாமா மகள் இங்கு வந்து இதையெல்லாம் பார்த்தால் ஷாக் ஆக மாட்டாளா’’ என்று கேட்கும் நண்பனிடம், ‘’அவளையும் ஒரு குட்டி புனிதாவா மாத்திடுறேன்’’ என்று சொல்லிவிட்டு இருவரும் மது அருந்த தொடங்குகிறார்கள். இரண்டாவது எபிசோடில் ஆடை விஷயத்தில் கண்ணிவெடி வைத்த புனிதா மூன்றாவது எபிசோடில் லிவிங் டுகெதர், மது அருந்துதல் என அடுத்தடுத்த அதிர்ச்சிகளை நோக்கிப் பயணிக்கிறது.
ஆண்களுக்கு இணையாக சுதந்திரமும், சம உரிமையும் பெண்களுக்கு உண்டு என்று பேசும்போதெல்லாம் ஆண்களை போல முடிவெட்டிக் கொள்வது, உடை அணிவது, மது அருந்துவது, புகைப்பது இதைத்தான் பெண்கள் கேட்கிறார்கள் என ஆண்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அதுபோல் இருக்கும் ஓரிரு பெண்களில் ஒருத்தியாக புனிதா இருக்கிறாள்.
நம் லிட்டில் பிரின்சஸும் அவள் அண்ணியும், சென்னை கொண்டு செல்வதற்கான பொருட்களை வாங்க கடைக்கு செல்கிறார்கள். கடையில் காயத்ரியை உற்சாகமாக வரவேற்று, அவளுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் கொண்டு வந்து கொடுப்பார்கள். எல்லாம் அவளது ரசனையின்படி இருக்க, இருவரும் அதிர்ச்சியாகி பார்த்தால், அங்கு மாப்பிள்ளை சுந்தர் நின்று கொண்டிருப்பான். அந்த கடை அவனுடையதுதான்.
சுந்தரின் அம்மாவும், அக்காவும் காயத்ரிக்கு நிச்சயதார்த்த புடவை எடுப்பதற்காக கடைக்கு வந்திருப்பார்கள். சுந்தர் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த சேலையையே காயத்ரியும் தேர்வு செய்ததை கண்டு ஆச்சரியப்பட்டு எல்லோரும் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பெருமையாக பேசுவார்கள்.
மீண்டும் வட்ட வட்ட சாம்பிராணி புகை, மீண்டும் ஃபிளாஷ்பேக் கதை, மீண்டும் மனதின் மூலையில் இருந்து ஒரு குரல், “சேலை செலக்ஷன் ஒன்றாக இருந்ததெல்லாம் காதல் என நெக்குருகி போகத் தேவையில்லை” என்று இம்முறை காதை திருகிச் சொல்ல, அவசரமாக சாம்பிராணி புகைக்கு மூடிபோட்டு வைத்துவிட்டு பார்த்தால், ஜோடிப் பொருத்தத்தை பற்றி பேசியதைக் கேட்டு காயத்ரி அழகாக வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். காயத்ரிக்கும் சுந்தரை மிகவும் பிடித்து போயிருக்கிறது.
இரண்டாவது ஹீரோவான சிவா, தன் காதலி மாயாவின் தந்தையின் முகத்தில் கோபத்தில் காபியை ஊற்றிவிட்டு வந்ததற்கு பிறகு நூறு முறையாவது அவளது நம்பருக்கு அழைத்து இருப்பான். ஆனால் அவனது போன் கால்களை மாயா புறக்கணிப்பாள். அவள் காலை அட்டண்ட் செய்யாத ஏமாற்றத்திலும், கோபத்திலும் சிவா தனது வீட்டுக்கு வருவான். அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் நின்று கொண்டிருக்கும் பைக்கின் மீது மோதி அதை கீழே தள்ளி தன் கோபத்தை வெளிப்படுத்துவான்.
மாயா, சென்னையில் இருக்கும் சிவாவின் நண்பனை அழைத்து இனிமேல் சிவா தனக்கு கால் செய்தால் சைபர் க்ரைமில் புகார் அளிக்க இருப்பதாக கூறி விடுவாள். ”நான் எப்படின்னு தெரிஞ்சுதானே லவ் பண்ணா, இஷ்டத்துக்கு கழட்டி விடுவாளா” என்று சிவா தனது நண்பரிடம் கோபமாக கேட்பான். அதோடு, “அவளை அப்படி எல்லாம் விட்டுவிட முடியாது” என்றும் சொல்வான்.
தன்னுடைய சுகம், விருப்பம் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கும் எந்த உறவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அதேபோல் பிரச்னை என்று வரும்போது பழிவாங்கும் எண்ணமும் காதல் கிடையாது. இன்று பெரும்பாலும் ஆணும் பெண்ணும் தங்களுடைய காதலில் பிரச்னை ஏற்பட்டு பிரிய நேரிட்டால் பழிவாங்குவது மட்டுமே முதல் குறிக்கோளாக இருக்கிறது. தாங்கள் சேர்ந்து இருந்தபோது பகிர்ந்துகொண்ட விஷயங்களையும், புகைப்படங்களையும் வெளியிடுவது முதல் ஆசிட் வீசுவது வரைக்கும் பழி வாங்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் கமல்ஹாசன் கமலினியை கண்டதும் காதல் சொல்வார். ”சந்தித்து இரண்டு மணி நேரத்திலேயே எப்படி சொல்கிறீர்கள்” என்று கேட்டதற்கு ”இரண்டு நிமிடத்திலேயே சொல்லியிருப்பேன்” என்பார். கண்டதும் காதல் கதைகள் ’குறுந்தொகை’ காலம் முதலே இருக்கின்றன. ஆனால் இன்றைய காதல் கதைகள் தொடங்கும் வேகத்திலேயே முடிவுக்கும் வருகின்றன.
ஒத்துவராத உறவில் இருந்து வேகமாக வெளியேறுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் உறவுகள் ஒத்துவராமல் இருப்பதற்கு சுயநலம், புரிதலின்மை, அடுத்தவரை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாத சகிப்புதன்மையின்மை முதலியவை பிரதான காரணங்களாக இருக்கின்றன.
கோபத்துடன் வீட்டுக்குள் வரும் சிவா மியூசிக் பிளேயரில் சத்தமாக பாடல் வைத்தது கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனது அண்டை வீட்டினருக்கு அது தொந்தரவாக இருக்க, கதவை தட்டி சத்தத்தை குறைக்குமாறு சொல்கின்றனர். சிவா கோப்பபட்டு ஒருவரின் மூக்கில் ரத்தம் வருமளவு குத்தி விடுகிறான். அவர் காவல்துறையில் புகார் அளிக்கிறார். சிவா சென்னையில் இருக்கும் தனது நண்பனை அழைத்து தான் பிரச்னையில் சிக்கிக்கொண்டதை சொல்லி, ”நீ உடனே கிளம்பி பெங்களூரு வா” என்கிறான். அடுத்தவரின் நிலைமை என்ன என்பதை துளியும் யோசிக்காமல் தங்களுக்கு வேண்டியதை மட்டும் சாதித்துக் கொள்ளும் சிவாவை போலத்தான் இன்று பெரும்பாலான 2K கிட்ஸும் இருக்கிறார்கள்.
காயத்ரி - சுந்தருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆறு மாதங்கள் கழித்து திருமணத்திற்கு நாள் குறிப்பதை எதிர்க்கும் சுந்தரின் பெரியப்பா நிச்சயம் முடிந்த முதல் முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்கிறார். காயத்ரி வேலைக்கு செல்ல இருக்கும் விஷயத்தை காயத்ரியின் மாமா சொன்னதை கேட்டு சுந்தரின் பெரியப்பா, ”அதெல்லாம் ஒத்துவராது” என்று கூறுவார். காயத்ரியின் அப்பா தனக்கு கிடைக்கும் சிறு இடைவெளியில் எல்லாம் தன் மகள் வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்து கொண்டேயிருக்கிறார். எல்லோருமாக சேர்ந்து நிச்சயம் முடிந்ததும் உடனே திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர். சுந்தர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.
காயத்ரி கோபமாகவும், குழப்பமாகவும் சுந்தரை பார்ப்பாள். வேலைக்கு செல்ல அனுமதி கிடைக்கும் என்கிற உறுதியில் தான் காயத்ரி திருமணத்துக்கே சம்மதித்தாள். அப்படியிருக்க கடைசி நிமிடத்தில் சுந்தர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது அவளுக்கு அவன்மீது கோபத்தை உண்டாக்குகிறது.
சுதந்திரமான பெண் புனிதாவுடன் லிட்டில் பிரின்சஸ் காயத்ரி இணைவாளா, சிவாவுடனான டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து மாயா தன்னை எப்படி காப்பாற்றிக்கொள்வாள், அதற்கு முன்பு காவல் நிலையத்தில் இருக்கும் சிவாவை யார் காப்பாற்றுவார்கள் என பல கேள்விகள் நாளைய எபிசோடை நோக்கி ஆர்வமாக காத்திருக்கச் செய்கின்றன.
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/television/vikatans-adhalinaal-kaadhal-seiveer-episode-3-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக