கரீபியன் பிரிமியர் லீக்கில், அதிவேக அரைசதத்தை அரங்கேற்றியுள்ள ஆன்ட்ரே ரசல், 'ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில், தரமான சம்பவங்கள் லோடிங்' என்பதற்கான மிரட்டலான முன்னோட்டத்தை காட்டியுள்ளார். கரீபியன் வீரர்கள், அதிரடிக்குப் பெயர் போனவர்கள். சிங்கிள்களால் பேசத் தெரியாது, சிக்ஸர்களால் வெடிவெடிக்க மட்டுமே தெரியும். அப்படிப்பட்ட அதிரடி தர்பாரின் ஆஸ்தான நாயகன், ஆண்ட்ரே ரசல்தான்.
ஐபிஎல்-ல் இருந்து பிக்பேஷ் லீக் வரை, கால் பதிக்காத டி20 பிரீமியர் லீகே, உலகத்தில் இல்லை எனுமளவு, எல்லாத் தொடர்களிலும், அதிரடி முகம் காட்டி வெற்றிவலம் வந்துவிட்டார் ரசல். மற்ற நாடுகளின் தொடர்களுக்கே, அதுதான் நிலை எனில், கரீபியன் பிரீமியர் லீக்கும், அவர் ஆடும் ஜமைக்கா அணியும், எவ்வகையில் விதிவிலக்காகும்?! 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளிலேயே, முறையே 42 மற்றும் 40 பந்துகளில், கரிபீயன் பிரீமியர் லீக்கின் அதிவேக சதங்களை, ரசல் பதிவேற்றியிருந்தார்.
இமாலய இலக்கை நிர்ணயிப்பது என்றாலும் சரி, எட்டவே முடியாத இலக்கங்களை இலகுவாகத் தாண்டுவதென்றாலும் சரி, ரசல் மட்டுமேகூட, எத்தனையோ சந்தர்ப்பங்களில், அதனை ஒற்றை வீரராகச் செய்து காட்டியுள்ளார். கடந்த இரு ஐபிஎல் தொடர்கள் அவருக்குச் சிறப்பாக அமையாவிட்டாலும், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற, லங்கா பிரீமியர் லீக்கில் 14 பந்துகளில், அரைசதம் அடித்து, "பௌலர்கள் ஜாக்கிரதை" என அறைகூவல் விடுத்திருந்தார் ரசல். அது நடந்து முடிந்து, ஒன்பது மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதே போன்றதொரு, இன்னொரு அதிவேக அரைசதத்தை, 14 பந்துகளிலேயே குவித்து, மீண்டும் ஒருமுறை, பௌலர்களைப் பந்தாடியுள்ளார் ரசல்.
இந்த ஆண்டிற்கான கரீபியன் பிரீமியர் லீக், கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடந்த மூன்றாவது போட்டியில்தான், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சீசனில் இரண்டாவது இடத்தில் முடித்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கும், ரசல் சார்ந்த ஜமைக்கா அணிக்கும் இடையேதான் போட்டி. டாஸை லூசியா அணி வென்றது, மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற பிட்ச் ரிப்போர்ட், இவையெல்லாம்தான் நிஜ உலகில் நடந்த நிகழ்வுகள். அதற்கடுத்ததாக நடந்ததெல்லாம், கற்பனைக்கு எட்டாத இணை உலகில் நடந்தேறக் கூடியவை.
பேட்களோடு களம் கண்ட வால்டன் மற்றும் கென்னர் லூயிஸ், இருவருமே பவர்பிளே ஓவர்களைச் சிறப்பாக கவனித்தனர். ஆறு ஓவர்களில், 81 ரன்களைக் குவித்து, வேகப்பந்து வீச்சால் துளைக்க முடியாத அடித்தளத்தை இருவரும் அமைத்துத் தர, அங்கிருந்து ஸ்கோரை, 200-க்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, அடுத்து வந்த வீரர்களின் கைக்கு மாற்றி விடப்பட்டது.
பொதுவாக ஓப்பனர்கள், அடித்து ஆடி நம்பமுடியா ரன்ரேட்டில் ரன்களைச் சேர்த்து 200+ ரன்கள் உறுதியாக வந்து விடும் என நம்பிக்கை அளிக்கும் போட்டிகளில், அதன்பிறகு எதுவும் சரியாக நடக்காது. அடுத்துவரும் வீரர்கள், அதிரடிக்கு ஆசைப்பட்டு, விக்கெட் விலைகொடுத்து, பின் ஏதோ ஒருகட்டத்தில் கொஞ்சமாகப் போராடி, மறுபடியும், 160-களில் கொண்டு வந்து ஒரு சராசரி போட்டிபோல முடிப்பார்கள். ஆனால், இந்தப் போட்டியில், அந்தத் தடத்தில், போட்டி பயணிக்கவில்லை.
ஓப்பனர்களுக்குப் பிறகு, அறிமுக வீரராக களமிறங்கிய ஹைதர் அலி மட்டுமின்றி, ரோவ்மேன் பவலும் கூட, சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். டாப் 4 வீரர்களும், 140-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டோடு, ரன்களைக் குவித்திருந்தால், என்ன நேருமோ, அதுதான் நேர்ந்தது. 17-வது ஓவரின் முடிவிலேயே, 200-க்கு ஒன்று குறைவென்ற நிலைக்கு, ஜமைக்கா அணி வந்துவிட்டது.
2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த, ஜமைக்காவுக்கு, ஒரே ஓவரில், அடுத்தடுத்த மூன்று தாக்குதல்கள் மூலமாக, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓபெட் மெக்காய், மேற்கொண்டு சேதாரத்தை, தடுக்க முயன்றார். அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, நையப்புடைக்க ரசல் இருக்கிறார் என்று. 22 யார்டுக்குள் ரசல் இருப்பதும், அவருடன் மல்யுத்த ரிங்கில் இருப்பதும் ஒன்றே. அந்த அளவுக்கு ஒட்டுமொத்த லூசியா அணியையும், அடுத்த பதினைந்து நிமிடங்களில் கதிகலங்க வைத்து விட்டார் ரசல்.
18-வது ஓவரில்தான் களமிறங்கினார் ரசல். பொதுவாக, 'இறுதியாக வந்து, என்ன சாதித்துவிட முடியும்?!' என்பது, டி20-யில் சொல்லவே கூடாத சொற்றொடர். ஃபினிஷர்கள், பவர் ஹிட்டர்களின் கேமியோ ரோல்களும், பின்ச் ஹிட்டிங்குகளும் முண்டியடித்து, முன்னர் பார்த்த ஓவர்களைப் பற்றிய தகவல்களையே, மூளையில் இருந்து அழித்து விடுமளவுக்கு சம்பவங்களைச் செய்யும்.
ரசல் இருக்கும் இடத்தில், அத்தகைய காட்சிகள் நிகழாவிட்டால்தான் ஆச்சரியம். களமிறங்கிய 18-வது ஓவரில், ஒரு பந்தில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து, சமாதானத்தை விரும்பும் சாதுவாகத்தான் ஆரம்பித்தார். ஆனால், அவரது சுயரூபம் வெளிப்பட்டது, அடுத்து வந்த ஓவர்களில்தான். 19-வது ஓவரை வீச வந்த வஹாப் ரியாஸ், தனது வாழ்நாளிலேயே நினைத்துப் பார்க்கக்கூட விரும்பாத, ஒரு ஓவரை வீசினார். இந்தப் போட்டி முழுவதிலுமே, லூசியா பௌலர்களின் பந்துவீச்சு, மிகவும் மோசமானதாகவே இருந்தது, நோ பால்கள், அள்ளி இறைக்கப்பட, வொய்டுகள் வாரி வழங்கப்பட்டன. ரியாஸும் இதற்கு விதிவிலக்கல்ல.
இரண்டு ஓவர்களை வீசி, 29 ரன்களை வள்ளலாக வாரித் தந்து, மற்ற பேட்ஸ்மேன்களிடம் மரண அடி வாங்கி, நொந்து போய்தான் ரசலிடம் வந்தார். அவரது ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் கூட, மன ஆறுதலாவது மிஞ்சியிருக்கும். டிரெஸ்ஸிங் ரூமில் வாழ்த்துக்களைப் பெற, ஒரு வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால், ஒரு அங்குல இடுக்கில்கூட நுழைய முடியாதவாறு, ரசலின் ராட்சத பேட், ரியாஸை வெளுத்து வாங்கியது.
சந்தித்த முதல் பந்திலேயே, ரசல், ரியாஸுக்கு, சிக்ஸரோடே சிறப்பு வரவேற்பு கொடுத்தார். ஓவர் த மிட் விக்கெட்டில், லைனுக்கு அப்பால் போய் விழுந்தது பந்து. அரண்ட ரியாஸிடம் இருந்து, அடுத்த, பந்து நோ பாலாக வந்தது. இதன் பிறகெல்லாம், "இரக்கத்தை என்னிடம் எதிர்பார்க்காதே, இம்மியளவு கூட அது என்னிடம் இல்லை" எனும் ரீதியில் ஆடத் தொடங்கினார் ரசல்.
இந்த ஓவரின் இறுதி நான்கு பந்துகள், ரசலின் அசுரத்தனமான ரன் பசிக்கு பலியாகின. அந்த நான்கு பந்துகளில் மட்டும், மூன்று சிக்ஸர்களைப் பார்த்தது பேட். ரியாஸின் யார்க்கர்களும், குட் லென்த்தில் வரும் பந்துகளும் அவரைத் திணறடிக்கவில்லை. இலகுவாக, ரியாஸின் பந்துகளைப் பதம் பார்த்தது ரசலின் பேட். சிக்ஸர்கள் எல்லாம், மைதானத்துக்கு வெளியே பவுண்டரி லைன் இருப்பதாக நினைத்து, ஆளில்லாமல் அநாதரவான விமானமாக காற்றில், நானோ விநாடிகளில் பயணித்து, பல மீட்டர்களுக்கு அப்பால், தரையைத் தொட்டன.
அந்த ஓவரில் மட்டும், அணியின் ஸ்கோரோடு, 32 ரன்கள், கூட்டப்பட்டன. எட்டே பந்துகளில், 30 ரன்களை, அதுவும் ஒரே ஓவரில், சேர்த்த புண்ணியத்தை, ரசல் கட்டிக் கொண்டார். ஒன்று, இரண்டு என்பதற்கோ, ஓடி ரன் சேர்ப்பது என்பதற்கோ, அவரது அகராதியில் இடமேயில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அதே, மூன்று ஓவர்களில், 61 ரன்கள் என, அதிவேக அரைசதத்தை, தனது பௌலிங்கிலும் நிகழ்த்தி இருந்தார் ரியாஸ். இதெல்லாம், இணை உலகக் காட்சிகள்தானே!? பாவம், ரியாஸுக்கு, நேற்றிரவு கண்களை மூடினால் கூட, கணநேரத்திற்குள் கண்களில் இருந்து மறைந்த பந்துகளும், சூப்பர் ஹீரோ 'ஃபிளாஷ்' உருவத்தில், ரசலும்தான் கனவில் வந்திருப்பார்கள்.
ரசல் மேனியா, எதிரணியை ஜுரத்தில் தள்ள, ஜமைக்காவின் ஸ்கோர், 233 என்று மாற, ஒரே ஓவரில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஓபெட் மெக்ராய்தான் இறுதி ஓவரை வீச வந்தார். முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்தானே? முந்தைய ஓவரில், தனது அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான தண்டனையை வழங்க, பீஸ்ட் மோடுக்கு மாறி ரசல் காத்திருந்தார்.
சரி, ஆறு பந்துகளில், இன்னும் என்ன செய்ய இருக்கிறார், ரசல் என்ற ஆவல் மேலோங்கியது. முதல் பந்தைச் சந்தித்த ப்ரிடோட்ரியஸ், "உங்களுக்காச்சு, ஓபெட்டுக்காச்சு", என சமர்த்தாக ஒரு ரன்னோடு, நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு நகர்ந்து விட்டார்.
அடுத்த இரண்டு பந்துகளும், அரக்கப்பரக்க, அந்தரத்தில் பறந்து, அம்பயரைக்கூட, இரண்டு கைகளையும் தூக்கி, அபயம் எனச் சொல்ல வைத்தன. யார்க்கர்களால் ரன்னெடுக்க விடாமல் தடுக்கலாம் என்பதெல்லாம், ரசலிடம் நடக்காமல் போக, அந்த இரண்டு சிக்ஸர்களின் முடிவில், பத்து பந்துகளில், 42 ரன்கள் என பதற வைத்தார், ரசல். அதற்கடுத்த பந்தையே, பதற்றத்தில் ஓபெட் நோ பாலாக்கினார். அதற்குப் பரிகாரமாக, வீசிய அடுத்த பந்தில், நினைத்திருந்தால், ஒரு ரன்னுக்கு ஓடி இருக்கலாம். ஆனால், ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்துக் கொள்ள ரசல் விரும்ப, அது டாட் பாலானது.
பந்து பௌலரிடமிருந்து விடுபடும் வரை மட்டுமே, அது அவர்களது கட்டுப்பாட்டில். அதன்பின், அதன் பாதையையும், போட்டியின் போக்கையும், ஒருங்கே தீர்மானிப்பது ரசல்தானே! போட்டியில், ஒருபந்து மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், பவுண்டரியோடு, 46 ரன்களை அடைந்திருந்தார் ரசல். அரைசதம் தவறவிடப்படுமோ என எதிர்பார்க்கப்பட, இறுதிப் பந்தில், ஓபெட் வீசிய ஷார்ட் பால், ரசலிடம் அடிவாங்கி, டீப் மிட் விக்கெட்டுக்கு முன்னேறி, அங்கிருந்த ஃபீல்டருக்கும் ஹலோ சொல்லி, பவுண்டரி லைனுக்குள் அடைக்கலம் புகுந்தது.
வெறும் 14 பந்துகளில், தனது அதிவேக அரைசதத்தை, ரசல் பூர்த்தி செய்தார். கரீபியன் லீக் வரலாற்றில் அடிக்கப்பட்ட, அதிவேக அரைசதம் இதுதான். இதற்கு முன்னதாக, 2019 சீசனில், டூமினி 15 பந்துகளில் அடித்த அரைசதம்தான் அதிவேகமானதாக இருந்தது. அதை ரசல் முறியடித்துள்ளார்.
255 ரன்களை ஜமைக்கா குவித்தது. இந்தத் தொடரின் வரலாற்றில் நிர்ணயிக்கப்பட்ட, இரண்டாவது அதிகபட்ச இலக்கு இது. லூசியா அணி, 17.3 ஓவர்களில், 135 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக, 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஜமைக்கா.
சில நாட்களுக்கு முன்னதாக, டேரன் சமி, மேற்கிந்தியத் தீவுகள், நடக்க இருக்கும், உலக டி20 தொடரிலும் வென்று, கோப்பையைக் கைப்பற்றும் என்றும், அந்தத் தொடரின் நாயகனாக, ஆண்ட்ரே ரசல் இருப்பார் என்றும், ஆருடம் கணித்திருந்தார். அவர் சொன்னவை உண்மையாகுமோ எனத் தோன்ற வைப்பதற்குரிய ஆரம்ப அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன.
எதிரணியின் நம்பிக்கையை, உருக்கிக் கரைக்கும் ரசவாதம்தானே ரசல்!
source https://sports.vikatan.com/cricket/andre-russell-scores-fastest-half-century-in-caribbean-premier-league
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக