Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

`அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அன்று..!’ - சி.வி.சண்முகம் சவால்

கடந்த அதிமுக ஆட்சியின் போது, வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தில் இருந்த பழைய தாலுகா அலுவலகத்திற்கு வண்ணம் தீட்டி ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் புதியதாக துவங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த பல்கலைக்கழகம் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்படத்துவங்கியது. 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இப்பல்கலைக்கழகம் இணைக்கப்படும்' என கடந்த ஜூலை மாதம் பொன்முடி அறிவித்ததை தொடர்ந்து பிரச்னை பூதாகரமானது. அதிமுக-வினர் இந்த முயற்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கினர்.

Also Read: `பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகமா?’ - ஜெயலலிதா பல்கலை விவகாரத்தில் பொன்முடி காட்டம்

இந்நிலையில், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா குறித்த பேச்சு சட்டமன்றத்தில் எழுந்த போதே, அதிமுக வெளிநடப்பு செய்தது. சட்டமன்றத்திற்கு முன்பாக ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஓ.பி.எஸ் உடன் எம்.எல்.ஏ-க்களும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் சி.வி.சண்முகம்

அதேபோல, பல்கலை., இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சி.வி.சண்முகமும், கைது செய்யப்பட்டு தனியார் மண்டபம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டார். எதிர்ப்புகள் பலமாக இருந்த போதும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதா சட்டமன்றத்தில் நேற்று (31.08.2021) மதியம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாலையில் விடுவிக்கப்பட்ட சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்த போது, "விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாட்கள் கோரிக்கையை அம்மாவிடம் கொண்டு சென்றிருந்தோம். அவரும் அதற்காக முயற்சி எடுத்துவந்தார். அவரின் மறைவைத் தொடர்ந்து முதல்வராக இருந்த எடப்பாடியார் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் பேரில், அவரும் இசைவு தந்தார். விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கான சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இங்கு தற்போது அமைச்சராக இருக்கும் பொன்முடி கூறும் வார்த்தை, "சட்டத்தை கொண்டுவந்தார்கள், துணைவேந்தரை நியமித்தார்கள். அதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை" என்று சொல்கிறார். இதையே திருப்பி திருப்பி சொல்கிறார். ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சி.வி.சண்முகம்

ஆனால் உண்மை என்ன? எங்கள் ஆட்சியில், பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டோம். 4 மாதங்கள் கழித்து, பிப்ரவரி 25-ம் தேதி தான் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். அடுத்த 24 மணி நேரத்திலேயே துணைவேந்தரை நியமித்து, பல்கலைக்கழகத்தை விழுப்புரம் நகரத்திலேயே தொடங்கி வைத்துவிட்டோம்.

Also Read: `` ஜெயலலிதா பல்கலை. விவகாரம் முதல் ஓ.பி.எஸ் கைது வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

அன்று மாலை 5 மணிக்கே தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவிக்கிறது. அதனால் எங்களால் எந்த மேல் நடவடிக்கையும் செய்ய முடியாமல் போய்விட்டது. ஏதோ... பல்கலைக்கழகம் ஆரம்பித்து, ஒரு வருடமாக நிதி ஒதுக்காமல் இருப்பதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை இந்த மக்களுக்கு ஏற்படுத்த நினைக்கிறார் பொன்முடி. பெரும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையம் பத்து தினங்கள் தாமதமாக தேர்தல் தேதியை அறிவித்திருந்தால், எங்கள் ஆட்சி அதுவரை நீடித்திருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காது. இவர்களின் தயவும் எங்களுக்கு தேவையில்லை. அதே போல, இந்த பல்கலைக்கழகமும் செயல்பாட்டுக்கு வந்திருக்கும். பொன்முடி சவால் விடுகிறார்..! நானும் சவால்விடுகிறேன். விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது என உறுதியான போதே நிர்வாக கட்டடம் கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 10 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் கட்டுவதற்கும் செங்காடு கிராமத்தில் 70 ஏக்கர் அளவில் இடத்தை தேர்வு செய்திருந்தோம். அதற்கான தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தான் ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடந்தால் என்ன... இது ஒரு தொடர் நடவடிக்கை. அதை எந்த அரசு செய்தால் என்ன..! மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றி தருவது ஆளுகின்ற அரசுக்கு உண்டு.

Also Read: உள்ளாட்சி ஆயுதம்; சூடாகும் ஜெ. பல்கலைக்கழக விவகாரம்; காய்நகர்த்தும் அதிமுக!

அப்படிப்பார்த்தால், கடந்த திமுக ஆட்சியில் கூட தான் திருவெண்ணெய்நல்லூரில் அறிவியல் கல்லூரி ஆரம்பித்தீர்கள். அதற்கு கூடத்தான் கட்டடம், நிதி, ஆசிரியர் என எதுவுமே இல்லாமல் இருந்தது. அம்மா ஆட்சியில் நிறைவேற்றி தரவில்லையா..! ஆனால், இன்று பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் தலைமையிலான அரசு, மக்கள் விரோத அரசாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசால் முடியவில்லை, அந்த எண்ணமில்லை, மனமும் இல்லை.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி

இன்று அம்மா பெயரிலான பல்கலைக்கழகத்தை மூடியிருக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தை நம்பியிருந்த மாணவர்களின் படிப்பில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், விழுப்புரத்தில் 'டைட்டில் பார்க்' அமைக்கப்படும் என்று நிதி ஒதுக்கி நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், அதை பாண்டிச்சேரிக்கு அருகில் இன்று கொண்டுச்சென்று, வேலையில்லா பட்டதாரிகளின் வாழ்க்கையிலும் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார்கள். இந்த விழுப்புரம் மாவட்டத்தின் மீதும், மக்களின் மீதும் அவர்களுக்கு என்ன கோபம், விரோதம் என்றே தெரியவில்லை. இந்த திமுக ஆட்சிக்கும், பொன்முடிக்கும் நான் சவால் விடுகிறேன். எத்தனை நாட்களுக்கு நீங்கள் ஆட்சியில் இருப்பீர்கள். மீண்டும் தேர்தல் வரும். அதில் அம்மா அரசு வெற்றி பெறும். அன்று அம்மாவின் பெயரிலேயே மீண்டும் இந்த பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக கொண்டுவரப்படும்" என்றார் ஆவேசமாக.

இந்த பல்கலைக்கழக விவகாரத்தை வைத்தே, 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாம் அ.தி.மு.க தரப்பு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-will-come-to-power-again-the-university-in-the-name-of-jayalalithaa-will-be-reopened-cvshanmugam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக