Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: விவசாயிகளிடம் 'ஸ்கோர்' செய்த கட்சிகள் எவை?

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 'புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம், நாடு முழுக்கப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவைக் கொடுத்திருக்கும் அதேவேளையில், தமிழக எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

விவசாய உற்பத்தி-வர்த்தகம், விலை உறுதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் குறித்தான மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு இயற்றியது. இதையடுத்து, 'இந்தப் புதிய சட்டங்கள், முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்' எனக் கூறி நாடு முழுக்க விவசாயிகள் போராடத் தொடங்கினர்.

தமிழக சட்டசபைக் கூட்டம்

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு வருடம் தாண்டியும் தீவிரமாகப் போராடிவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் இந்த வேளையில், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் இவ்வளவு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவருவது இதுவே முதன்முறை! இது 'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு' என்ற பெருமையையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இதற்கிடையே, 'புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்' என்ற கோரிக்கையோடு விவசாய சங்கங்கள் மத்திய பா.ஜ.க அரசுடன் நடத்திய 11 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. 'சட்டத்தில் திருத்தங்கள் வேண்டுமானால் மேற்கொள்ள முடியுமே தவிர, ஒருபோதும் வாபஸ் பெற முடியாது' என்ற நிலைப்பாட்டில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருந்துவருகிறது.

தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, கடந்த வாரம் (28-8-2021) புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதில், 'முற்று முழுதாக வேளாண்மைத் தொழிலையே அழிக்கிற, மாநில அரசுகளின் உரிமைகளில் அத்துமீறி தலையிடுகிற இந்தப் புதிய சட்டங்களை ஒன்றிய அரசு நீக்க வேண்டும்!' என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவளித்திருக்கிறது. அதேசமயம், தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகித்துவருகிற எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது. மாநில பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரும், இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வும் வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க., இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

வேளாண் பணி

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, 'நான்தான் உண்மையான விவசாயி!' என்று ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததோடு, பத்திரிகை - தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் கொடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கேள்விகள் பல தொடுத்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி! இந்தச் சூழலில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பதை முன்வைத்து, 'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விவசாயி வேடம் கலைந்துவிட்டது' என தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா, 'தீர்மானத்துக்கு ஆதரவு - எதிர்ப்பு' விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை விவசாயிகள் எப்படிப் பார்க்கின்றனர் என்றக் கேள்விகளோடு தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலரிடம் கருத்து கேட்டோம்.

'தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர்' பி.ஆர்.பாண்டியன்

''இந்தியாவிலேயே வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்டை சமர்ப்பித்து, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக முதலிடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. அடுத்தகட்டமாக, இந்திய விவசாயிகள் அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுகிற வகையில், 'புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம்' கொண்டுவந்து ஒட்டுமொத்த விவசாயிகளின் மனதிலும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு.

விவசாய மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு வருகிறபோதே, அதற்கு ஆதரவாக வாக்களித்து, மசோதாவை வெற்றிபெற வைத்ததில் தமிழ்நாட்டிலுள்ள அ.தி.மு.க-வுக்கு முக்கியப் பங்குண்டு. எனவே, இந்திய விவசாயிகள் அனைவரது கோபத்துக்கும் ஆளாகி, தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொருவரும் தலைகுனிவுக்கு உள்ளானோம். தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் தமிழக விவசாயிகளின் தலையை நிமிரச் செய்திருக்கிறது.

Also Read: டெல்லி: மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்; ஜந்தர் மந்தரில் குவிந்த போலீஸ்!

பி.ஆர்.பாண்டியன்

தீர்மானத்துக்கு எதிராக தமிழக பா.ஜ.க வெளிநடப்பு செய்திருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்த காரணத்தால், கூட்டணியில் இருந்தாலும்கூட தீர்மானத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை பா.ம.க எடுத்துள்ளது.

அதேசமயம், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்திருப்பது, அந்தக் கட்சி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை பொய்த்துபோகச் செய்துவிட்டது. மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அ.தி.மு.க தலைவர்கள் மீது மக்கள் வைத்திருந்த மரியாதையையும் வெறுப்பாக மாற்ற வழிவகை செய்துவிட்டது. இந்தத் தவறுகளுக்கெல்லாம் காரணம் அ.தி.மு.க-வை வழிநடத்திவரும் இன்றைய தலைவர்கள்தான். தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து, அ.தி.மு.க என்ற கட்சியையே மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டதாகவே கருதுகிறேன்!''

'தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்க'த்தின் தேசிய அமைப்பாளரும், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான ஆறுபாதி கல்யாணம்.

''மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாங்கள் போராடியதில்லை. ஏனெனில், இந்தப் புதிய சட்டங்களே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சட்டத்தில் சில குறிப்பிட்ட திருத்தங்களைச் செய்து அமல்படுத்தலாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஆறுபாதி கல்யாணம்

ஆனால், இன்றைய அரசியல் சூழலில், புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என எல்லோருமே இங்கே அரசியல்தான் செய்துகொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றிய அக்கறை எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. அதனால்தான் குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரையில் எந்த அரசாலும் கொடுக்க முடியவில்லை. புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்று இன்றைக்கு இங்கே போராடுகிறார்கள். தாராளமயக் கொள்கை எப்போது இந்தியாவுக்குள் வந்ததோ, அப்போதே இங்கே அனைத்தும் மாறத் தொடங்கிவிட்டன!''

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க' மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்

''புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு, விவசாயிகளிடையே நாடு தழுவிய ஒற்றுமை நிலவிவருகிறது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும்கூட விவசாயிகள் தங்கள் உயிரையும் பணயம்வைத்து வருடம் ஒன்றைக் கடந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டக் களத்திலேயே சுமர் 390 பேர் வரையிலும் இறந்திருக்கிறார்கள். ஆனாலும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு பொய்ச் செய்திகளை பரப்பிவருகிறது.

சுந்தர விமலநாதன்

முதலில், 'டெல்லியில் போராடுபவர்கள் இடைத்தரகர்கள்தான்; அவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை' என்றார்கள். பின்னர், 'அப்பாவி விவசாயிகள்தான் போராடிவருகின்றனர்' என்றனர். அதன் பின்னர், 'பாகிஸ்தான், காலிஸ்தான் தீவிரவாதிகள்' என்றனர். இப்படிப் போராட்டக்காரர்களை சிறுமைப்படுத்தும் செயலைத்தான் மத்திய பா.ஜ.க அரசு செய்தது. ஆனால், தி.மு.க தலைமையிலான தமிழக அரசோ, வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து வரலாறு படைத்தபோதே, 'இது டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு சமர்ப்பணம்' என்று பெருமைப்படுத்தியது. அதை உறுதி செய்வதுபோல், இப்போது வேளாண் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானமும் கொண்டுவந்திருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, `விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யச்சொல்லி கேட்போம்’ என்று பிரசாரம் செய்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்றைக்கு சட்டசபையில் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், வெளிநடப்பு செய்திருக்கிறது அ.தி.மு.க. ஆக, இவர்களது இரட்டைநிலையை மக்கள் அனைவரும் புரிந்துகொண்டுவிட்டனர்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-tamil-nadu-assemblys-resolution-on-centre-governments-agriculture-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக