Ad

சனி, 28 ஆகஸ்ட், 2021

யூரோ டூர் - 3 | புரட்சிகளில் தொடங்கிய ஐரோப்பாவின் எழுச்சி… ஏகாதிபத்திய நாடுகள் உருவானது எப்படி?!

ஐரோப்பாவின் மறுமலர்ச்சி ஐரோப்பியர் வாழ்விலும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது. தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிய ஐரோப்பியர்கள் தம் வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல ஒரு நவீன ஐரோப்பாவை கனவு கண்டார்கள். கனவுகள் கைகூட காரியத்தில் இறங்கியதன் விளைவாக வெடித்தது பிரெஞ்சு புரட்சி.

ஐரோப்பிய மலர்ச்சிக்கு வித்திட்ட பிரெஞ்சு புரட்சி!

1789-ல் தொடங்கி 1799-களின் பிற்பகுதியில் நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியுடன் முடிவடைந்த பிரெஞ்சு புரட்சி நவீன ஐரோப்பிய எழுச்சியின் முதல் புள்ளி. ஐரோப்பாவின் அரசியல், கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றையும் மாற்றி, மன்னராட்சிக்கு முடிவு கட்டி மக்களாட்சிக்கு அடித்தளம் போட்ட ஒரு தரமான சம்பவம் பிரெஞ்சு புரட்சி.

ஒரு நாட்டின் தலைமை சரியில்லை என்று மக்கள் ஒன்று கூடி வெகுண்டெழுந்தால் அது முடிசூடிய மன்னனாக இருந்தாலும் குடிகளால் தூக்கி எறியப்படுவார் என்ற வலுவான அரசியல் பாடத்தை உலகுக்கு சொல்லிச் சென்ற வரலாற்றின் முக்கிய நிகழ்வு. அக்காலகட்டத்தில் பிரான்சை ஆண்ட மன்னன் 16-ம் லூயி மக்களின் நலனின் அக்கறை செலுத்தாது, கத்தோலிக்க திருச்சபைக்கும், பிரபுக்களுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்ததன் விளைவு திருச்சபைகளின் கைகள் ஓங்கி இருந்தது. அதிக வரிச் சுமை, கடுமையான கட்டுப்பாடுகள் என மக்கள் முடக்கப்பட்டனர். எப்போதும் கீரியும் பாம்புமாக சண்டை போட்டுக்கொள்ளும் இங்கிலாந்துக்கு எதிராக அப்போது அமெரிக்கா போர் புரிந்து கொண்டிருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல ஆயுத மற்றும் நிதியுதவிகளை அமெரிக்காவுக்கு வழங்கிய பிரான்ஸ் முடிவில் பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளானது. அதன் சுமையை மக்கள் மீது வரி வடிவில் சுமத்த, பொறுத்ததுபோதும் என பொங்கியெழுந்ததன் விளைவு பிரெஞ்சு புரட்சியாக வெடித்தது.

போராட்டங்கள், சண்டைகள், பெரும் வன்முறைகள், படுகொலைகள், அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் எனப் பிரான்சில் நிகழ்ந்த அமளி துமளிகளை அடுத்து செப்டம்பர் 1792-ல் பிரான்சு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. தேசியவாதம் ஒரு புரட்சிகரமான கூற்றாக உருவானது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயிக்கும் அவரது மனைவி மேரி அன்டோனெட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மக்களால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் வந்த குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே நிகழ்ந்த அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவாக 1793-ல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியர் எனும் சர்வாதிகாரியின் பிடியில் சிக்கியது பிரான்ஸ்.

நெப்போலியன் போனபார்ட்

1794-ல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதன் பின்னர் நெப்போலியன் போனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றி சில ஆண்டுகளில் தன்னைத்தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவின் பெரும்பகுதியை கைப்பற்றிய இவர் பிரெஞ்சு புரட்சியின் போது பிரெஞ்சு ராணுவத்தின் படை வரிசையில் (military ranks) வேகமாக உயர்ந்த ஒரு திறமையான, புத்திசாலியான ராணுவ வீரன். ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு கூட்டணிகளுக்கு எதிராக வெற்றிகரமாக போரை நடத்தி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ஆனால், 1812-ல் ரஷ்யாவில் கால்வைக்க போய் தோல்வியை சந்தித்தார் போனபார்ட். ஆட்சியை இழந்த நெப்போலியன் எல்பா தீவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்.

1815-ல் மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தாலும் வாட்டர்லூ போரில் படுதோல்வி அடைந்த பின்னர் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் வந்த லூயிஸ் XVIII, ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட பின் பிரெஞ்சு மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வாய்க்கப்பெற்றது.

10 ஆண்டுகள் நீடித்த பிரெஞ்சு புரட்சி November 9, 1799-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் அதே வேளை 17-ம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல துளிர்க்க தொடங்கிய தொழில்துறை புரட்சி ஐரோப்பா முழுவதும் ஆல விருட்சமாக வேர் விட்டு கிளை பரப்ப தொடங்கியிருந்தது.

தொழில்துறை புரட்சி & மேற்கு ஐரோப்பாவின் வளர்ச்சி!

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கி, பின் மெல்ல மெல்ல உலகம் முழுதும் வியாபித்த தொழில்துறை புரட்சி ஐரோப்பா கண்டத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதிய ஒரு முக்கிய வரலாற்றுச் சம்பவம். இது ஐரோப்பியர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணியது.

அதுவரை வேளாண்மையையும் கைவினைத் தொழில்களையும் மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகரித்தது. ஒரு காலத்தில் கைகளால் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது. குறைந்த நேரமும், மனித உழைப்புமே தேவைப்பட்ட அதே வேளை உற்பத்தித் திறன் பெரிய அளவில் பெருகி பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்தது. ஆனால், அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய சூழல் உருவானது.

கிராமப்புற விவசாய சமூகங்கள், தொழில் மயமாக்கப்பட்ட, நகர்ப்புற சமூகங்களாக மாறின. 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் தொகையில் வழக்கத்துக்கு மாறாக காணப்பட்ட அதிக வளர்ச்சி தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அளவைக் கூட்டியது. அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய, திறமையான உற்பத்தி முறைகள் தேவைப்பட்டன. இதனால் தொழில் புரட்சி மிக வேகமாகவும் வெற்றிகரமாகவும் ஐரோப்பாவை பற்றி படரத் தொடங்கியது.

கிராமப்புற சமூகங்களில் பலர் தங்கள் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, புதிய வேலை வாய்ப்புக்காக நகரங்களுக்குச் சென்றனர். தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பிரிட்டிஷ் நகரங்களின் வளர்ச்சி மேலும் துரிதப்படுத்தப்பட்டது. மான்செஸ்டர் மற்றும் லீட்ஸ் போன்ற தொழில்துறை நகரங்கள் வியத்தகு முறையில் வளர்ந்தன. 1800-ம் ஆண்டில், பிரிட்டிஷ் மக்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் நகரங்களில் வாழ்ந்தனர். வெறும் 50 ஆண்டுகளில் அதாவது 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக உயர்ந்தது. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நகர்ப்புற மக்கள் தொகையில் அதிகரிப்பு உண்டானது.

தொழில்மயமாக்கலுக்கு முன்னர் ஒப்பீட்டளவில் பழமையானதாக இருந்த ஐரோப்பாவின் சாலை நெட்வொர்க், விரைவில் கணிசமான முன்னேற்றங்களைக் கண்டது. வங்கிகளும் முதலீட்டு வணிகங்களும் இந்த காலகட்டத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. பெரிய தொழிற்சாலைகள் உருவாகின. 1770-களில் லண்டன் பங்குச் சந்தையும், 1790-களின் முற்பகுதியில் நியூயார்க் பங்குச் சந்தையும் நிறுவப்பட்டது.

விவசாய சங்கங்கள் மேலும் தொழில் மயமாக்கப்பட்டு நகர்ப்புறமாக மாறியது. கான்டினென்டல் ரயில், பருத்தி ஜின், மின்சாரம் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய சமூகத்தை நிரந்தரமாக மாற்றின. தொலைபேசி, நீராவி இயந்திரம், தையல் இயந்திரம், எக்ஸ்ரே, மின்விளக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய பல நவீன கண்டுபிடிப்புகள் வேர்விட்டன.

மேற்கு ஐரோப்பாவில், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் விரைவான முன்னேற்றங்களைக் கண்டன. குறிப்பாக இங்கிலாந்து அசுர வேகத்தில் முன்னேறியது. உலகிலேயே அதி முன்னேற்றமடைந்த நாடுகளாக மேற்கு ஐரோப்பா மாறத்தொடங்கியது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் இயந்திரங்கள் தரமானதாகவும், வலிமை வாய்ந்ததாகவும் இருந்தன. மதவாத பாகுபாடு காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்சில் இருந்து வெளியேறிய புராட்டஸ்டண்டு கைவினைஞர்கள் இங்கிலாந்தில் அடைக்கலம் தேடி வந்தபோது ஆங்கில அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைத்துக் கொண்டது. அவர்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ தேவையான சூழலை அமைத்துக் கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் நிபுணத்துவத்தையும் திறமையையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்து ஏனைய மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விட பல மடங்கு பாய்ச்சலில் முன்னேறிச் சென்றது. இங்கிலாந்தின் அனைத்து இடங்களிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது. கிராமம் நகரம் என்ற பாகுபாடு மறைந்து அனைத்து பிரதேசங்களும் சம அளவில் முன்னேற்றம் காணத் தொடங்கின.

இதன் விளைவாக பெரிய நகரங்கள் தோன்றியதால் பாராளுமன்ற, சட்ட சீர்திருத்தங்கள் தேவைப்பட்டது. பல புதிய சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலாளிகளின் சுரண்டல்களில் இருந்து தொழிலாளர்களை காக்கவும், தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தவும் தொழிலாளர்களுக்கு சாதகமான பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

மேற்கு ஐரோப்பா முழுவதும் புதிய பாதைகள், பல கால்வாய்கள் மற்றும் ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டன. இது நாடு கடந்த வணிக்கத்துக்கு வழிகோலியது. ‘Father of Railways’ என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் சிவில் இன்ஜீனியரான George Stephenson கண்டுபிடித்த ரயில் இன்ஜின் தொழிற் புரட்சியின் இன்னொரு முக்கிய மைல்கல். உற்பத்திக்குத் தேவையான பொருட்களைப் பெறவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் சந்தைகளில் விற்கவும், தேவையான இடங்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்பவும் இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவின.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயந்திரப் பொறியியலாளரான ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இயந்திரம், பிரிட்டிஷ் விஞ்ஞானி Michael Faraday கண்டுபிடித்த மின் காந்தவியல், மின்காந்த தூண்டல், மற்றும் டைனமோ, இங்கிலாந்தைச் சேர்ந்த மின்னியலாளரும் வேதியியலாளருமான சர் ஹம்ப்ரி டேவி கண்டுபிடித்த சுரங்கத் தொழிலாளர்களுக்கான பதுகாப்பு விளக்கு, அமெரிக்க ஓவியரான சாமுவேல் மோர்ஸ் கண்டுபிடித்த மின்சார தந்தி இயந்திரம், லூயிஸ் ரொபேர்ட் கண்டு பிடித்த பேப்பர் தயாரிக்கும் இயந்திரம் என தொழில் புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விதமான இயந்திரங்களும் கருவிகளும் தொழிற்புரட்சியை ஐரோப்பிய வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குல வரலாற்றிலேயே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக மாற்றியது.

தொழில்மயமாக்கலின் வெற்றிக்கு முதலாளித்துவம் மற்றொரு முக்கிய அங்கமாக இருந்தது. தொழில்துறை புரட்சியின் போதான முதலாளித்துவத்தின் வடிவத்தை வரலாற்றாசிரியர்கள் லைசெஸ்-ஃபேர் முதலாளித்துவம் (laissez-faire capitalism) என்று குறிப்பிடுகின்றனர். லெய்செஸ்-ஃபேர் என்றால் ‘எங்களை தனியாக விட்டுவிடு’ என அர்த்தம். அதாவது அரசாங்கம் தலையிடாது விலகி தனி நபர்கள் தங்கள் சொந்த பொருளாதார விவகாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்த நேரத்தில், இது ஒரு புரட்சிகர யோசனையாக இருந்தது. ஏனென்றால் முந்தைய நூற்றாண்டுகளில் வணிகம் ஒரு மேலாதிக்க பொருளாதார அமைப்பாக இருந்தது. கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைக்கு ஆதரவான ஒரு பொருளாதார அமைப்பாக கருதப்பட்டது.

பரந்த பேரரசுகளை ஆட்சி செய்த மன்னர்கள் பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தினர். இருப்பினும், ஆடம் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய சிந்தனையாளர்கள் தனிநபர்களுக்கு அதிக சுதந்திரம் கொண்ட பொருளாதார அமைப்புக்கு ஆதரவாக வாதிடத் தொடங்கியதன் விளைவாக சுதந்திரப் பொருளாதார முறை நடைமுறைக்கு வந்தது. ஐரோப்பா, வணிகத்தில் சுதந்திரமாகவும் அதே வேளை சிறப்பாகவும் செயல்படத் தொடங்கியது. இவ்வாறு மெல்ல மெல்ல தலைதூக்கிய முதலாளித்துவம் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தியம்!

தொழில்துறை புரட்சி ஐரோப்பாவில் பெரிய வெற்றி பெற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தாக்கம் மற்றுமொரு முக்கிய காரணியானது. ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு மற்றொரு பிராந்தியத்தை அல்லது நாட்டை அதன் இராணுவம், அரசியல், கலாசார, பொருளாதார, இராஜதந்திர கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது. ஐரோப்பா உலகெங்கிலும் உள்ள காலனிகளைக் கைப்பற்ற வேண்டிய அவசியத்தை தொழில்துறை புரட்சி உருவாக்கியது.

வெளிநாடுகளில் பல காலனிகளை வெற்றிகரமாக உருவாக்கி, அதனை லாபகரமாக பராமரிக்கும் ஆளுமையையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிற்புரட்சி கொடுத்தது. ஏகாதிபத்தியத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட காலனிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவு மூலப்பொருட்களை வழங்கின. அவை தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டன. அதேபோல ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்கியது.

உதாரணமாக, ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளில் குடியேறியதால், ஐரோப்பிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களும் உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு விற்கப்படலாம் என்ற வர்த்தக விதிகளை நிறுவினர். இது ஐரோப்பிய தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் பொருட்கள் உற்பத்தியை தூண்டி தொழில் மயமாக்கலை மேலும் விரிவாக்க உதவியது.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து போன்ற சக்தி வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் தங்கள் பேரரசுகளை உருவாக்க பல நாடுகளை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. இந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற உலகின் பெரும் பகுதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. காலனித்துவம் என்ற பெயரில் ஐரோப்பா அதன் கீழ்படிந்த நாடுகளின் மனித வளத்தையும் உழைப்பையும் மட்டுமல்லாது அவர்கள் நாட்டின் வளங்களையும் மொத்தமாக சுரண்ட ஆரம்பித்தது. அடிமைத்துவம் தலை தூக்கியது.

ஆப்பிரிக்கா அடிமைகள் இங்கிலாந்து சந்தைகளில் விற்கப்பட்டனர். இந்தியாவிலிருந்து மக்கள் மிருகங்களைப் போல கொத்து கொத்தாக பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளின் பெறுமதி மிக்க இயற்கை வளங்கள் அனைத்தும் ஐரோப்பாவால் மொத்தமாக வழித்து சுருட்டிக் கொண்டு செல்லப்பட்டன. இதனால் ஐரோப்பா பெருத்த செல்வத்தில் கொழுக்க ஆரம்பித்தது. ஆப்பிரிக்கா ஆசியா போன்ற கண்டங்கள் வறுமையில் மெலிய ஆரம்பித்தன.

தொழிற்புரட்சிக்கு முன்பே இந்த ஐரோப்பிய நாடுகள் ஏனைய சில நாடுகளை தம் காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்தாலும் தொழிற்புரட்சி அந்த எல்லையை மேலும் விரிவு படுத்தியது. அதுவரை மந்த கதியில் ஊர்ந்து கொண்டிருந்த ஐரோப்பா, தொழிற்துறைப் புரட்சியின் பின் டாப் கியரில் வேகமெடுத்து உலகின் மிகுந்த செல்வச் செழிப்பான கண்டமாக மாறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் வீழ்ச்சியும் ஐரோப்பாவின் விஸ்வரூப வளர்ச்சியும் ஆரம்பமானது.

19-ம் நூற்றாண்டை ஐரோப்பிய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான நூற்றாண்டாக வரலாறு குறித்து வைத்துக் கொண்டது. மனித உரிமை, ஜனநாயகம், தேசியவாதம், தொழில்மயமாக்கல், தங்கு தடையற்ற சந்தை அமைப்புகள், சர்வதேச வர்த்தகம், அறிவியல், கணிதம், இலக்கியம், தொழில்நுட்பம், என சகல துறைகளும் முன்னேறி, நூற்றாண்டின் இறுதியில் உலக சக்தியின் உச்சத்தை அடைந்தது ஐரோப்பா.

உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வலிமை மிக்க பேரரசாக விஸ்வரூபம் எடுத்த ஐரோப்பாவின் ஆதிக்கம் விரிவடைந்து காலனிகள் குவிந்தன. இவை அனைத்தும் தொழில்துறை புரட்சியின் உந்துதலால் முன்னோக்கி தள்ளப்பட்டன. ஐரோப்பாவில் அடிமைத்தனம் படிப்படியாக முடிவுக்கு வர ஏனைய உலக நாடுகளில் அது ஆரம்பமானது. இனவெறி புது வடிவம் எடுத்தது. சமூக, தேசிய வேறுபாடுகள், சர்வதேச போட்டிகள் அதிகரித்தன. இவை அனைத்தும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மாபெரும் மோதலில் கொண்டுபோய் வெடிக்க வைத்தது. அதுபற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்.

யூரோ டூர் போவோம்!


source https://www.vikatan.com/lifestyle/international/euro-tour-how-revolutions-built-europe-and-britain-became-a-superpower

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக