Ad

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

சேமிப்புக்காக சீட்டு போட்டிருக்கிறீர்களா? அந்த முதலீடு உண்மையில் லாபகரமானதுதானா? - 13

எஸ்.பி.ஐ போன்ற வங்கிகள் தெரியும்; பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற என்.பி.எஃப்.சி (Non Banking Financial Companies) தெரியும்; அது என்ன எம்.என்.பி.சி (Miscellaneous Non Banking Companies)?

நம் ஊர்களில் சாதாரணமாக இயங்கும் சிட் ஃபண்டுகளைத்தான் எம்.என்.பி.சி என்கிறார்கள். வங்கிகள் சென்றடையாத சிறு ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு சேமிப்பு மற்றும் கடன் வசதிகளை ஒன்றாகத் தருகின்றன இந்த சிட் ஃபண்டுகள்.

ஒரு சீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அத்தனை மாதங்களுக்கு சீட்டு ஆரம்பிக்கப்படும். உதாரணமாக, ரூ. 50,000 சீட்டு எனில், 50 உறுப்பினர்கள், 50 மாதங்கள் ரூ.1,000 கட்டி வரவேண்டும். பொதுவாக, ஒரு நடத்துநர் இருப்பார்.

Money (Representational Image)

Also Read: ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12

முதல் மாதம் ஒருவர் சீட்டை ரூ. 45,000-க்கு ஏலம் எடுத்தால், மீதி இருக்கும் ரூ.5,000 குழு உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். 5% அளவு கமிஷனை சீட்டு எடுத்தவர், நடத்துநருக்குத் தரவேண்டும். இது ஏலச்சீட்டு எனப்படும். குலுக்கல் முறையிலும் இது நடத்தப்படுகிறது.

இவை, சிட் ஃபண்ட்ஸ் ஆக்ட் 1982-ன்கீழ் முறைப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலும் கர்நாடகாவிலும் மாநில அரசே சிட்ஃபண்ட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவருகின்றன. மார்கதரிசி, ஶ்ரீராம் குரூப், முத்தூட், பாலுசேரி போன்ற தனியார் நிறுவனங்களும் இதில் பெயர்பெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள மாடல் சிட் கார்ப்பரேஷன் ரூ.1 கோடி வரை உள்ள சீட்டுகளை கம்பெனிகளுக்காக நடத்துகிறது. அதிக மதிப்புள்ள சீட்டுகளில் பணம் எடுக்கும்போது, தங்கம், நிலம் என்று எதையாவது அடமானமாக வைக்கவேண்டி இருக்கும்.

அரசிடம் முறைப்படி பதிவு செய்திருக்கும் சிட்ஃபண்டுகள், முறைப்படி பதிவு செய்யாமல் நடத்தப்படும் சிட்ஃபண்டுகள் தவிர, உறவினர்/ நண்பர்கள் எனப் பத்து பேர் சேர்ந்தால், வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிப்பது போல உடனே ஒரு சீட்டுக் குழு ஆரம்பிப்பதும் நடக்கிறது.

நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று பல வடிவங்களில் இது வலம் வருகிறது. மாதம் ஒரு முறை மதிய நேரங்களில் சந்தித்து விளையாட்டுகள், உரையாடல்களுடன் கிட்டி பார்ட்டிகள் நடத்தும் சில பெண்கள் சீட்டுக் குழுவையும் நடத்துகின்றனர். விளையாட்டாகவே பணம் சேர உதவும் வழி இது. டிஜிட்டலைசேஷனின் வருகைக்குப்பின் ஆன்லைனிலும் சீட்டுக் குழு நடத்தப்படுகிறது.

மக்கள் உணராத ஒரு விஷயம் என்னவென்றால், சிட் ஃபண்டுகள் தரும் வட்டி வருமானம் 6.3% மாத்திரமே. ஏனெனில், நடத்துநருக்குத் தரவேண்டிய கமிஷன் 6 சதவிகிதத்தை விழுங்கிவிடுகிறது.

பணம்

Also Read: வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? - 11

சிட் ஃபண்ட், கடன் பெறுவதற்கு நல்ல வழி என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், இங்கு கடனுக்கான வட்டியைக் கணக்கிட்டால், சுமார் 22 சதவிகிதமாக இருக்கிறது. கிரெடிட் ஹிஸ்டரி சரி இல்லாததால், வேறு இடங்களில் கடன் கிடைக்காமல் சீட்டு சேருபவர்களும் உண்டு. அவர்கள் ஒழுங்காகக் கடைசி வரை சீட்டுக் கட்டுவார்களா என்பது சந்தேகமே.

தனியார் சேர்ந்து நடத்தும் சீட்டுக் குழுக்களில் ரிஸ்க் அதிகம். சீட்டு நடத்தும் நபர் வீடு, வாசல் என்று வசதியாகவே இருந்தாலும், சீட்டுப் பணம் இல்லை என்று கைவிரித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? சிலர், சீட்டு நடத்துபவருக்கு உதவியாக அக்கம்பக்கத்தில் தவணைப் பணம் வசூல் செய்து கொடுக்கிறார்கள். திடீரென சீட்டு நடத்துபவர் தலைமறைவாகிவிட்டால், ஏமாந்தவர்களின் கோபம் அவருக்கு உதவியாக வசூல் செய்து தந்தவர்கள் மீது பாயும்.

நகைச் சீட்டும் ஏமாற்றம் தரக்கூடியதுதான் என்று சமீப காலத்தில் சில நம்பகமான நகைக்கடைகளே காட்டிவிட்டன. சாரதா ஸ்கேம் (வெஸ்ட் பெங்கால்), ரோஸ் வேலி ஸ்கேம் (ஒடிசா) போன்ற பிரமாண்டமான பொன்சி திட்டங்களால் ரெஜிஸ்டர்ட் சிட் ஃபண்டுகள் மீதுகூட சந்தேக நிழல் விழுகிறது.

அப்படியானால் சீட்டுக் குழுக்களால் என்ன நன்மை என்று கேட்கிறீர்களா?

மாதந்தோறும் ஒரு தொகையைச் சேமிக்கும் ஒழுக்கத்தை இது கற்றுத் தருகிறது. சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் தினம் ரூபாய் ஐம்பது, நூறு என்று வசூலித்து அவர்கள் மொத்தமாக சேமிக்க உதவும் சீட்டுக் குழுக்களும் உள்ளன.

Money (Representational Image)

Also Read: வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10

இதனால் அந்த வியாபாரிகள் தினம்தோறும் வங்கிகளுக்கு சென்று பணம் கட்டுவதற்கான சிரமம் குறைகிறது. இங்குள்ள வருமானத்துக்கு டி.டி.எஸ் (Tax Deducted at Source) பிடிக்கப்படுவதில்லை என்பதும் சிலருக்கு இனிக்கிறது.

அவசரத்துக்கு உதவுவதில், ஓரளவு அதிக வருமானம் தருவதில், முறையாக நடத்தப்படும் சிட்ஃபண்டுகள் முன்னணியில் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆகவே சிட்ஃபண்டை விரும்புபவர்கள் பல வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுத் தொழில் நடத்திவரும் தரமான கம்பெனிகளில் மட்டும் சீட்டு சேர்வது உத்தமம்.

(மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்)



source https://www.vikatan.com/business/finance/are-chit-funds-really-good-for-investment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக