Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ஆப்கன்: வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரர்.. `முழு சுதந்திரம்' என தாலிபன்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ராணுவம் தனது படைகளை திரும்ப பெறும் முடிவை அறிவித்தது. அது முதல் மீண்டும் தங்களை வலுப்பெற செய்த தாலிபன்கள் ஒருசில வாரங்களிலேயே முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.

தாலிபன்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போலவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறி இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட ராணுவ இருப்பு முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகிறது. கடந்த 17 நாட்களில் எங்கள் ராணுவ, விமான படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி சுமார் 1,20,000 அமெரிக்க குடிமக்கள், நட்புநாடுகளின் குடிமக்கள், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் நட்புறவாளர்கள் முதலியவர்களை வெளியேற்றின” என்றார். மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவர்களுக்கு தாலிபன்கள் அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். இந்த கோரிக்கையை அனைத்து உலக நாடுகளும் தாலிபன்களிடம் முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை, ஆப்கனில் இருந்து வெளியேறிய கடைசி ராணுவ வீரரின் படத்தை வெளியிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் க்ரிஸ் என்ற வீரர் இறுதியாக விமானத்தில் ஏறுகிறார். இதன் மூலம் ஆப்கனில் அமெரிக்க மிஷன் முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க படைகள் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட முழுமையாக வெளியேறிய நிலையில், தாலிபன்கள், ஆப்கானிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் தாலிபன்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதை கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாலிபன்

அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பியது தொடர்பாக அமெரிக்க அரசின் செயலாளர் ஆண்டனி ப்ளின்கென், ``அமெரிக்க ராணுவ விமானங்கள் முழுமையாக வெளியேறி விட்டன. எங்கள் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. ஆப்கானிஸ்தானுடனான அமெரிக்காவின் புதிய அத்தியாயம் தொடங்கியது. இனி அரசியல் ரீதியான உறவு தொடரும்.

Also Read: `இருக்கிறாரா; இல்லையா?' - மர்மங்களுக்கு மத்தியில் உச்சபட்ச தாலிபன் தலைவர் - யார் இந்த ஹிபத்துல்லா?!

இன்றைய நிலவரப்படி, நாங்கள் காபூலில் இருந்த எங்கள் இருப்பை, எங்கள் நடவடிக்கைகளை கத்தாரின் தோஹாவுக்கு மாற்றியுள்ளோம். இப்போதைக்கு, ஆப்கானிஸ்தானுடனான எங்கள் புதிய உறவை நிர்வகிக்க தோஹாவில் இருப்போம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும். எனினும் அது, அரசாங்கத்தின் வழியாக இருக்காது. மாறாக தன்னாட்சி அமைப்புகள் வழியாக இருக்கும். உதாரணமாக, ஐநாவின் அமைப்புகள் என்.ஜி.ஓ மூலம் நடைபெறலாம். தாலிபன்களோ அல்லது மற்ற பிரிவினரோ, இதனை தடுக்கவோ இடையூறு செய்யவோ மாட்டார்கள் என நம்புகிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/us-army-completely-out-of-afghanistan-taliban-declares-complete-independence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக