Ad

திங்கள், 29 ஜூன், 2020

மகளைக் காணாமல் கலங்கிய தந்தை! -பட்டுக்கோட்டை இளைஞர்களின் 12 மணிநேர சேஸிங்

பட்டுக்கோட்டை பகுதியில் தந்தை ஒருவர், அழுதுகொண்டே காணாமல் போன தன் 8 வயது மகளைத் தேடிவந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இளைஞர்கள் சிலர் பெரும் முயற்சி எடுத்து 12 மணிநேரத்தில் சிறுமியை மீட்டு ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் தந்தையுடன் இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்த்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிழைத்து வருகிறார். இவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில் 8 வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு மகள்களை இவரே கவனித்து வருகிறார். அத்துடன் தான் ஜோதிடம் பார்க்கச் செல்லும்போது தன் மகள்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கறம்பக்குடியிலிருந்து பேருந்து மூலம் பட்டுக்கோட்டைக்கு தன் மகள்களுடன் வந்துள்ளார். அப்போது, இளைய மகள் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று சொன்னதால் மூத்த மகள் நாடியம்மாளை வெளியே நிற்க வைத்துவிட்டு இளைய மகளை அழைத்துச் சென்றுள்ளார். திரும்பி வெளியே வந்தபோது மூத்த மகளைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தபாபு, பேருந்து நிலையம் முழுவதும் தேடியும் மகள் கிடைக்கவில்லை.

மகளுடன் தந்தை

இதையடுத்து இளையமகளைத் தோளில் சுமந்தபடி அழுதுகொண்டே பட்டுக்கோட்டையின் வீதிகளில் இரண்டு நாள்களாக தேடியும் எந்தப் பலனும் இல்லை. பின்னர் கோயிலில் அமர்ந்தபடி அழுதுகொண்டே இருந்துள்ளார். இதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான விக்னேஷ், பக்ருதீன், அஜீஸ், கோபிநாத் ஆகிய 4 பேரும் ஆனந்தபாபுவிடம் விசாரித்ததில் நடந்த விவரங்களை கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

பின்னர் அந்த இளைஞர்கள் அவரை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தனர். புகாரை வாங்கிய போலீஸார் வழக்கம்போல் பார்த்துக்கொள்கிறோம் எனப் பதில் கூறியுள்ளனர். கொரோனா பணியில் போலீஸார் இருப்பதால் இதில் தீவிரம் காட்டுவார்களா என்ற சந்தேகம், அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

Also Read: கொரோனா: தேடிப்பிடித்து பரிசோதனை செய்கிறோம்; பயப்பட வேண்டாம்!’ -விஜயபாஸ்கர்

இதையடுத்து, சிறுமியைத் தேடும் பணியில் அந்த இளைஞர்களே களமிறங்கினர். பின்னர், முதலில் ஆனந்தபாபு பேருந்து நிலையத்தில் நின்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அதில் ஒருவர் சிறுமியான நாடியம்மாளை கையைப் பிடித்து கூட்டிச் சென்றது தெரியவந்தது. அந்தச் சிறுமிக்கு என்னவாகியிருக்குமோ எனப் பதற்றமடைந்த இளைஞர்கள் கொஞ்சம்கூட தாமதிக்காமல் தேடத் தொடங்கினர்.

முதலில் சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை வைத்து போட்டோ எடுத்து வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். பின்னர் போட்டோவில் உள்ள நபர் குறித்து விசாரித்ததில் பாபு என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றதும் அவர் மன்னார்குடியில் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக ஆனந்தபாபுவுடன் மன்னார்குடிக்குச் சென்றுள்ளனர். சிறுமி அங்கே இல்லை. அவரிடம் சிறுமி எங்கே எனக் கேட்டதற்கு அவர் நான் அழைத்து வரவில்லை என மறுத்துள்ளார்.

சிறுமியை மீட்ட பட்டுக்கோட்டை இளைஞர்கள்

பின்னர், போட்டோவைக் காண்பித்து, `நீதான் அழைத்துச் சென்றிருக்கிறாய்.. சொல்லவில்லை என்றால் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவோம்' எனக் கூற, அந்த நபரோ, `சிறுமியுடன் முத்துப்பேட்டைக்குச் சென்றேன். அங்கு அவள் என்னிடமிருந்து ஓடிவிட்டாள்' எனக் கூற உடனே சிறுமியின் தந்தையையும் அழைத்துச் சென்றவரையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு இளைஞர்கள் டூவீலரில் முத்துப்பேட்டைக்குப் புறப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமியை அழைத்துச் சென்றவர், பயத்தில் பாதியில் பஸ்ஸில் இருந்து இறங்கிவிட இளைஞர்கள் முத்துப்பேட்டை கடைத்தெருவில் போட்டோவைக் காண்பித்து விசாரித்துள்ளனர். இதில் அந்தச் சிறுமி நறுமணஞ்சேரியில் உள்ள ஒருவரது வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்ற இளைஞர்கள் சிறுமியை மீட்டதுடன், `ஏன் அப்பாவை விட்டு அவருடன் சென்றாய்?' எனக் கேட்டனர்.

Also Read: Corona Live Updates: `ஒரே நாளில் 19,459 பேருக்கு தொற்று’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

`நான் உன்னை நல்லா பார்த்துக்குறேன்.. என்னோடு வா' என கூப்பிட்டார் அதற்கு நான், அப்பாவை விட்டு எங்கேயும் வர மாட்டேன் என்றதுமே என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவரிடமிருந்து தப்பித்து நான் இங்கு வந்துவிட்டேன் அப்பா எங்கே?' என கண்ணீர்மல்க கேட்ட அந்தச் சிறுமியை அழைத்து வந்து அவரின் தந்தையிடம் ஒப்படைத்தனர்.

அப்பாவை பார்த்ததுமே ஓடிச் சென்று கட்டிக்கொண்டார் அந்தச் சிறுமி. அவரும் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

சிறுமியை மீட்ட இளைஞர்களில் ஒருவரான விக்னேஷ் நம்மிடம், `` நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக எவ்வளவோ சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிற நிலையில், 8 வயது சிறுமி காணாமல் போன விவரம் தெரிந்ததுமே எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தேடத் தொடங்கினோம். சினிமாவில் வரும் சேஸிங் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒவ்வொரு ஊராகச் சென்று சிறுமியைத் தேடினோம். எங்கள் கவனத்துக்கு வந்த 12 மணிநேரத்தில் சிறுமியைக் கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்தோம். அதன்பிறகுதான் எங்களுடைய மனசு நிம்மதியடைந்தது. சிறுமியைக் கண்டுபிடித்து விட்டோம் என போலீஸிலும் தகவல் சொன்னோம். ரொம்ப சந்தோஷம் என்றார்கள்" என நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

தந்தையுடன் மகள்

சிறுமியின் தந்தை ஆனந்தபாபு கூறுகையில், ``என்னைவிட்டு காணாமல் போன என் மகள் மீண்டும் கிடைத்துவிட்டாள். இதற்கு காரணமான இளைஞர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என் உயிரை என்னிடம் சேர்த்துவிட்டனர். இனி ஒரு நொடிகூட அவளை தனியாக விடமாட்டேன். அவளும் என்னை பிரிய மாட்டாள். இந்த நாளைவிட வேறு சந்தோஷமான நாள் எனக்கு இருக்கப்போறதில்லை" என்றார் கலங்கிய கண்களுடன்.

``சிறுமியை அழைத்துச் சென்ற பாபு என்ற நபரை கண்டுபிடித்து போலீஸார் விசாரணை செய்து இதுபோல் வேறு குழந்தைகளை அழைத்துச் சென்றிருகிறாரா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கின்றனர் பட்டுக்கோட்டை இளைஞர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-pattukkottai-youths-rescued-girl-in-12-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக