Ad

ஞாயிறு, 23 மே, 2021

ஒரே ஒரு வாட்ஸ்அப் வீடியோ மூலம் 12 டன் முலாம் பழம் விற்ற பெண்மணி... எப்படி?

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் - நித்யா தம்பதியினர். பி.எஸ்ஸி அக்ரி படித்த கமலக்கண்ணன் சொந்தமாக பிசினஸ் செய்துவர, நித்யாவோ குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். குழந்தைகள், குடும்பம் என்றிருந்தாலும் நித்யாவுக்கு விவசாயத்தின் மீது பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. `சொந்தமாக இருக்கும் 2 ஏக்கர் நிலத்தில் ஏதாவது விவசாயம் செய்யலாமே!’ எனக் கணவரிடம் கேட்க, அவரும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

கோடைக்காலத்தை மனதில் வைத்து 2 ஏக்கரில் முலாம்பழத்தைப் பயிரிட்டிருக்கின்றனர். அறுவடை நெருங்கும் சமயத்தில் முழு ஊரடங்கு போடப்பட, விளைவித்த முலாம்பழத்தை விற்க வியாபாரிகள் பலரிடமும் பேசியிருக்கின்றனர். ஊரடங்கால் பழத்தை வாங்கி விற்க முடியவில்லை எனவும், முதலுக்கே கட்டுப்படியாகாத விலைக்கும் வியாபாரிகள் கேட்டிருக்கின்றனர். இதில் நொந்துபோன நித்யா வருத்தத்துடன் நிலைமையைச் சொல்லி, `ஒருகிலோ முலாம்பழத்தை ரூ.10-க்கு கொடுக்கிறேன். பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’ என வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார். சோஷியல் மீடியாக்களில் அது சுழன்றடித்து வைரலாக, நான்கே நாள்களில் 12 டன் முலாம்பழத்தை விற்றுத் தீர்த்திருக்கின்றனர்.

நித்யாவுக்குச் சொந்தமான தோட்டம்

எப்படி இது சாத்தியமானது என நித்யாவிடம் பேசினோம். ``நான் டீச்சர் ட்ரெயினிங் படிச்சிருந்தாலும், விவசாயம் மீது எனக்கு பெரிய ஆர்வம் இருக்கு. எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்துல மாமனார் - மாமியார் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு வயசானதால கடந்த 2 வருஷமா நிலத்துல எந்த விவசாயமும் செய்யாம சும்மாவே போட்டு வச்சிருந்தோம். இந்த கொரோனா சமயத்துல சும்மா இருக்காம, வருமானத்துக்கு ஏதாவது வழி பண்ணுவோம்னு விவசாயம் செய்ய நினைச்சேன். என் வீட்டுக்காரர்கிட்ட விஷயத்தைச் சொன்னதும், `வெயில் காலம் வேற வரப்போகுது. முதல்ல குறுகிய காலப் பயிரான முலாம்பழத்தைப் போட்டுப் பாரு. போன வருஷமே கிலோ ரூ.20-க்கு மேல போனது’ன்னு அவருக்குத் தெரிஞ்ச ஐடியாக்களைக் கொடுத்தாரு. மல்ச்சிங் ஷீட், சொட்டு நீர்ப் பாசனம்னு போட்டு 2 ஏக்கர்ல முலாம்பழத்தைப் பயிரிட்டோம். அருமையா விளைஞ்சது. அறுவடைக்கு முன்னாடியே முழு ஊரடங்கு போட்டுட்டாங்க.

விளைஞ்ச பழத்தை எப்படியாவது வித்துடணும்னு வியாபாரிகள் பலரிடமும் பேசினோம். `போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கு’, `பழத்தை வாங்கி விக்க முடியலை’, கிலோ ரூ.2-3 க்கு எடுத்துக்குறேன்’ என ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொன்னாங்க. பழம் நல்லா விளைஞ்சும் போட்ட அசலைக்கூட எடுக்க முடியாம போயிடுமோன்னு எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சி. அப்பதான் அந்த வீடியோ ஐடியா தோணுச்சு” என்றார்.

தொடர்ந்தவர், ``விநாயகா நகர்ங்கிற எங்களோட ஏரியாவுல உள்ள 50 குடும்ப ஆட்களும் வாட்ஸ் அப்ல ஒரு குரூப்பா இருக்கோம். அந்த குரூப்ல நம்மளோட நிலைமையைச் சொல்லி ஒரு வீடியோ எடுத்து போடுவோம். நம்ம ஏரியா ஆட்களும், அவங்களுக்குத் தெரிஞ்சவங்க வாங்குனாலும் இருக்கிற பழத்தை ஓரளவு வித்துடலாம்னு நினைச்சேன். கடைசியா எங்க ஏரியா குரூப்ல போட்ட அந்த வீடியோ, சோஷியல் மீடியாவுல பரவலா போய்ச் சேர்ந்து வைரலாகியிருக்கு. மே 13-ம் தேதி வீடியோ போட்டோம்.

முலாம்பழம்

அன்னைக்கு சாயங்காலத்துல இருந்தே பலரும் போன் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த காவலர் கோபால்தான் எங்களுக்கு முதல் கஸ்டமர். `நானும் ஒரு விவசாய குடும்பத்துல இருந்துதான் வந்துருக்கேன். விவசாயிங்களோட கஷ்டம் எனக்குத் தெரியும். ஒரு பெண்ணா இருந்து நீங்க இதைச் செஞ்சதுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி’ன்னு சொல்லி அவர் 200 கிலோ முலாம்பழத்தை வாங்கி தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தாரு. ஆஸ்திரேலியாவுல இருந்து அருண்ங்கிறவரு, `பழமா வாங்கி உங்களுக்கு நான் உதவ முடியலை. உங்க அக்கவுண்டுக்கு ரூ.10,000 அனுப்பி வைக்கிறேன். அதுக்குண்டான பழத்தை உணவில்லாதவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் கொடுங்க’ன்னு சொன்னாரு. அந்தவகையில், சாலைகளில் இருந்த ஆதரவற்றோர், காவலர்கள் போன்றோருக்கு ஒரு டன் முலாம்பழத்தை கொடுத்தோம்.

தினமும் 500 கிலோ பழத்தை தோட்டத்துக்கே வந்து மக்கள் வாங்கிட்டுப் போனாங்க. கடந்த 5 நாள்ல மட்டும் 12 டன் பழத்தை வித்துட்டோம். இன்னும் 3 டன் பழம் நிலத்துல இருக்கு. அதையும் வித்துடுவோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.

நித்யாவின் கணவர் கமலக்கண்ணனோ, ``நானா இருந்தா கூட இப்படியொரு முயற்சியை எடுத்திருக்க மாட்டேன். பழத்தை விக்க முடியலைன்னு `இனி விவசாயமே செய்ய மாட்டேன்’னு என்னோட மனைவி உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க தோத்துடக் கூடாதுன்னு நான் பக்கபலமா இருந்தேன். ஏதோ எங்க ஏரியாவுல உள்ள ஆட்கள், சுற்றுவட்டாரத்துல இருந்து ஒருசிலர் வாங்குவாங்கன்னு வீடியோ போட்டோம்.

முலாம்பழம்

ஆனா, அந்த வீடியோ இந்தளவுக்கு ரீச் ஆகும்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை. மக்களுடைய நேரடி ஆதரவு இருந்தா விவசாயிங்க எந்தக் கவலையுமில்லாம விவசாயம் செய்யலாம் என இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்துனுச்சு. தமிழக அரசாங்கம் இதுமாதிரி விவசாயிகளுக்கென ஒரு கால்செண்டர் வச்சு வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு என்றைக்குமே நஷ்டம் ஏற்படாது. எங்களுடைய முதல் போக கூடுதலாகக் கிடைக்கும் பணத்தை கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/erode-woman-sold-12-tons-of-musk-melon-through-whatsapp-video-request

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக