Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

மேளக்காரர் அடித்தடித்து சோர்ந்துபோனாலும் சிலருக்கு சாமி வராது! - 70ஸ் திருவிழா நினைவுகள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ என்பது முதுமொழி. அதற்குத் தகுந்தாற்போலவே, தமிழகத்தில் கிராமங்களுங்கூட கோயில்களை மையமாகக் கொண்டே வளர்ந்து வந்திருக்கின்றன.

‘எந்தக் கோயில் ஆனாலென்ன

தெய்வம் தெய்வந்தான்!

எந்தத் தெய்வம் ஆனாலென்ன

கோயில் கோயில்தான்!

என்ற தாரக மந்திரமே தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது - அந்நாள் தொடங்கி இந்நாள் வரையிலும்!கோயில் என்றால் ஆண்டிற்கொரு முறையாவது திருவிழாவும், குறிப்பிட்ட இடைவெளியில் கும்பாபிஷேகமும் உண்டுதானே.

திருவிழா

திருவிழா என்றாலே திகட்டாத இன்பந்தான்! அதிலும் உள்ளூர்த் திருவிழா என்றால் கொண்டாட்டத்திற்குக் குறைவிருக்காது. இப்பொழுது போல் டிவி சானல்களும், நிறைவான போக்குவரத்தும் இல்லாத அந்தக்காலத்தில், ஊர்த்திருவிழா எப்பொழுது வருமென்று ஒவ்வொருவரும் காத்திருந்ததில் வியப்பேதுமில்லை. ஒவ்வொரு கோயிலிலும் வேறுபட்ட தினங்களில் திருவிழா கொண்டாடுவது, தொன்று தொட்டு வரும் வழக்கம். எங்களூரில், சிவன் கோயில், தரும கோயில், அங்காளம்மன் கோயில், அன்னமடம், பிடாரி கோயில் மற்றும் ஐயனார் கோயிலென்று பலவுண்டு.

ஒவ்வொரு கோயில் திருவிழாவும் அதற்கென உரிய சிறப்பு நாளில், விமரிசையாக நடைபெறும்.

சிவன் கோயில் இருக்குமிடமே ஊரில் மிகவும் உயரமான இடம். ஒரு வேளை ஊருக்குச் சற்றே தொலைவில் ஓடும் மரைக்காக் கோரையாற்றில் ஐப்பசி போன்ற அடை மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் மக்களைக் காப்பாற்றவே அக்கோயில் அவ்வாறு அமைக்கப்பட்டது போலும்.

கீழப்பெருமழை அகிலாண்டேஸ்வரி சமேத ஆத்மநாத சுவாமியை வணங்கினால் இதய சம்பந்த நோய்கள் அகலுமென்பது ஐதீகம். இது குறித்து ஏற்கெனவே பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

சித்திரா பௌர்ணமி

தமிழ் ஆண்டு ஆரம்பித்த முதல் மாதத்திலேயே இதன் திருவிழா வந்து விடும். ஆம்! சித்திரா பௌர்ணமி அன்றுதான் இக்கோயிலின் முக்கியத் திருவிழா. ஒரு நாள் திருவிழா என்றாலும் ஆடம்பரத்திற்கும், பிரமாண்டத்திற்கும் குறைவிருக்காது. கோயிலின் எதிரே பந்தல் போடுவதுடன், மதிற் சுவருக்கு அப்பாலும் பந்தல் நீளும். பந்தல் கால்களைச் சுற்றி நியூஸ் பேப்பரை ஒட்டி, அதன்மேல் வண்ணப் பேப்பரைப் பட்டையாய் வெட்டி அழகாக ஒட்டுவார்கள்.

இந்த ஒட்டல் வேலைகளையெல்லாம் உற்சாகத்துடன் நாங்கள், சிறுவர்கள் மேற்கொள்வோம் - பெரியவர்களின் மேற்பார்வையுடன்! முதல் நாளிலிருந்தே ‘வாணி சவுண்ட் சர்வீஸ்’ காரர்கள் ஸ்பீக்கரில் பாடல்களைப் போட்டு, ஊரையே இசை மழையில் நனைப்பார்கள். வண்ண மின் விளக்குகள் கண் சிமிட்ட, கோயில் பகுதியே கோலாகலத்தில் திக்கு முக்காடும்.

அன்று காலையே மேளதாளம் முழங்க பூஜைகள் ஆரம்பமாகி விடும். பத்து, பதினொரு மணி வாக்கில் பிடாரி குளத்தில் காவடி எடுப்பார்கள்.முழங்கால் அளவு தண்ணீரில், தங்கள் எதிரே காவடிகளை வைத்தபடி, காவடி எடுக்க நேர்ந்தவர்கள் நிற்பார்கள். பூஜைகள் செய்து மேளங்களை உச்ச ஸ்தாயியில் அடித்தபடி, அலகு குத்திக் கொள்வோருக்குச் சாமி வரவழைப்பார்கள். ஓரிரண்டு பேருக்கு உடனே சாமி வந்து விட, அவர்கள் நாக்கை வெளியே இழுத்து அலகைக் குத்திவிட்டு, அவர்கள் தோளில் காவடியைத் தூக்கி வைத்து விடுவார்கள்.

ஒரு சிலர் கதை நம் தற்கால சீரியல்கள் போல நீளும். மேளக்காரர்கள் அடித்தடித்து சோர்ந்து போக… கூடி நிற்போர் வெற்றி வேல், வீரவேல் கோஷமிட்டுக் களைத்துப்போக… பிடித்து வைத்த பிள்ளையாராக அவர்கள் நிற்பார்கள். பூஜை செய்பவர் மந்திரங்களை சப்தமாக ஓதியபடி திருநீற்றை எடுத்துத் தலையில் அடிக்க… கூடி நிற்போரெல்லாம் பெருங்குரலெடுத்து வெற்றிவேல், வீரவேல் முழங்க… நடுவில் சிலர் ‘இந்த ஆளு விரதம் சரியா இருக்கல போல’ என்று முணுமுணுக்க… ஒரு வழியாக அவர் மீது சாமி இறங்க…

காவடியைத் தோளில் சுமந்தபடி புறப்பட, ஆடும் காவடிகள் முன்னே போ, பிற காவடிகள் அவர்களைத் தொடர, அதன் பின்னால் மக்கள், காவடிச் சிந்து பாடுபவரின் பாடலுக்கேற்ப, வெற்றிவேல், வீரவேல், அரோகரா கோஷங்களை எழுப்பியபடி பின் தொடர்வர்.

Representational Image

காவடியில் ‘ஸ்டெப்’ போட்டு ஆடுவது ஒரு தனிக்கலை.நாக்கில் மட்டுமல்லாமல் மார்பிலும் அலகுகளைக் குத்தியபடி அண்ணன் வீராசாமி ஆடும் ஆட்டம் மிகப் பிரபலம். மாமா ஜெகன்னாதன் காவடிச் சிந்து பாடுவதில் வல்லவர். ஊர் மக்கள் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும்,வீடுகளிலும் நின்று காவடியை ரசிப்பார்கள். பலர் காவடிகளைத் தொடர்ந்து கோயிலுக்குச் செல்வார்கள். அனைத்துக் காவடிகளும் வந்து சேர்ந்த பிறகு அபிஷேகம் நடைபெறும்.

பின்னர், இரவில் இன்னிசைக் கச்சேரி நடக்கும்.பின்னணிப் பாடகர்கள் யாரெல்லாம் பிரபலமோ,அவர்களை அழைத்துக் கச்சேரி நடத்துவார்கள். மதுரை சோமு, தாராபுரம் சுந்தர ராஜன்,எம்.ஆர்.விஜயா- குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோர் முக்கியமானவர்கள். வடக்குப் பண்ணையும்,தெற்குப் பண்ணையும் மாறி, மாறி அறங்காவலர்களாகவிருந்து சிறப்புச் செய்தார்கள்.

தரும கோயில் ‘தீ மிதித் திருவிழா’ மிக நீண்ட ஒன்று. சித்திரை-வைகாசியில் நடக்கும் தீ மிதியலுக்கு,மூன்று மாதங்கள் முன்பாகவே கொடியேற்றி, மகா பாரதக்கதை சொல்வார்கள். கோயிலுக்கு எதிரே இருக்கும் மேடையில் கதா காலட்சேபம்

நடக்க, பந்தலில் அமர்ந்து கேட்பார்கள். கதை சொல்வதில் கிட்டுப் பூசாரி, மாஸ்டர்.

பாரதக் கதையையே கண்முன்னே கொண்டு வந்து விடுவார்.இரவு 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 2 மணிவரை கூட நீளும்.18 நாட்கள் போரை அவர் சொல்கின்ற விதமே அலாதி. பெண்டிர் விரும்பிக் கேட்பர்.அறவோன் பலி,திரௌபதி கூந்தல் முடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன், குறிப்பிட்ட நாளில் மாலையில் தீ மிதியல் நடைபெறும்.

காலையிலிருந்தே தீயை வளர்த்து,மாலையில் கதிரவன் மறையும் பொழுதில் தீயில் இறங்குவார்கள்.

திருவிழா

தீ மிதிப்பவர்கள் 15 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.தீ மிதிக்கும் நாளில் சத்துமா கஞ்சிதான் உணவு.அடியேனும் அவ்வாறிருந்து தீ மிதித்தேன். விரத நாட்களில் அம்மாவின் அன்பு பல மடங்கு அதிகரிக்கும். தீக் குழிக்குள் தன் கையிலுள்ள எலுமிச்சம்பழத்தைப் போட்டு விட்டு கிட்டுப் பூசாரி முன்னதாக இறங்கி நடக்க, சிலர்

அவரைத் தொடர்ந்தும், சிலர் கண்மூடியபடி பின்னால் தன்னைக் காளை துரத்துவதைப்போலப் பயந்து பாய்ந்து சென்றும் தீக்குழியைக் கடப்பார்கள். சிலரோ, மழையில் நனைந்து வரும் எருமை மாட்டைப்போல நிதானமாக,மெதுவாக நடந்து செல்வார்கள். நான் சராசரி வேகத்தில் சென்றேன். கோயிலில் சென்று கையில் காப்பு கட்டிக் கொண்டுதான் தீயில் இறங்க வேண்டும். தீ மிதித்ததும் கோயில் சென்று காப்பைக் களைந்த பின்னரே வீடு செல்ல வேண்டும்.

அங்காளம்மன் கோயில் எங்களூருக்கு வந்ததே பெருங்கதை!ஊரின் பெரும்பாலான குடும்பங்களுக்குக் குலதெய்வம் அங்காளம்மன்தான். எங்களூருக்குத் தென்கிழக்கே சுமார் 35,40 கி.மீ., க்கு அப்பாலுள்ள பஞ்சநதிக் குளத்தில்தான் கோயில் இருந்தது. 1965-66 ல் என்று ஞாபகம். நான் எட்டாவதுபடித்தபொழுது என்று நினைக்கிறேன். திடீரென தெற்குத் தெருவில் ஒரு பெண்மணி மீது சாமி வந்து, ’தான் பத்ரகாளி என்றும் தனக்கு உள்ளூரிலேயே கோயில் வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தது.

சில மணிநேரத்திலேயே அப்பெண்மணியின் கொழுந்தன் மீது சாமி வந்து‘ தான் வீரபத்திரசாமி’என்றது.அதே நேரத்தில் வடக்குத் தெருவிலுள்ள ஒருவர் மீது வந்த சாமி’ தான் இருளப்ப சாமி’ என்றது.இவையெல்லாம் அடங்கு முன்னால் எங்கள் கீழத்தெருவில், எம் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டிலிருந்த அண்ணி மீது சாமி வந்து ‘தான் அங்காளம்மன் என்றும்,தனக்கு உடனே கோயில் கட்ட வேண்டும்’ என்றும் ஆர்டரே போட்டது.உடனடியாக ஊர்ப்பெரியவர்கள் கூடி,கோயில் கட்ட இடத்தைத் தேர்ந்தார்கள்.

அங்காளம்மன்

அங்காளம்மன் சாமியாடிய அண்ணி வீட்டு வைக்கோல் போரடியில் கோயில் கட்டத் தீர்மானமாகியது. விரைவாக அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டுகீற்றுக் கொட்டகை போடப்பட்டு, ஐதீகப்படி ஒதியன் போத்துகள் ஊன்றப்பட்டு அவை சாமிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்பு சிலைகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது கருத்தில் கொள்ளத்தக்கது.

இந்தக் கோயில் திருவிழா மாசி மாதம் நடைபெறும். காலையிலிருந்து மாவிளக்கு போட்டும், பானகம் தயாரித்தும் ஆராதனை நடைபெறும்.

முன்னிரவில் இன்னிசைக் கச்சேரி, பட்டி மன்றம், சில சமயங்களில் பெருந்திரை சினிமா என்று ஆண்டுக்கொன்று இடம் பெறும்.பின்னிரவில் ‘அக்கனிக் கப்பறை’ எடுப்பதே திருவிழாவின் சிறப்பு. கோயில் மறலாளிகள் யாரேனும் ஒருவர் அதற்கென விரதம் இருந்து கப்பறை எடுப்பர். ஆரம்ப காலங்களில் அண்ணன் சுந்தரேசனே தொடர்ந்து கப்பறை எடுத்து வந்தார்.

பிடாரி கோயில் திருவிழாவே ஊர்மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று. எட்டு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவுக்கு உண்டக்கட்டித் திருவிழா என்ற பெயரும் உண்டு. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஊர் வெட்டியானுக்குக் காப்புக் கட்டி, அவர் 8 நாட்களும் 8 நாட்டாமை வீடுகளில் சாப்பிடுவார். மேலும் அவரே விழாவின் நாயகர். என்னே ஊர்ப்பண்பாடு! ஒவ்வொரு நாளும் விடியற்காலை 4 மணி வாக்கில் சாமி புறப்பட்டு கோயிலையும், பிடாரி குளத்தையும் சுற்றி வந்ததும், இடும்ப வனம் ராஜமையரால் தயாரிக்கப்படும் புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் பெரிய கிண்ணங்களில் இடப்பட்டு கேக் வடிவில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

அதுவே உண்டக்கட்டி. அதென்னவோ தெரியவில்லை, அந்த ருசியை நம் வீடுகளில் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டிகளால் கூட கொண்டுவர முடியாது. இதை எழுதுகின்றபொழுது,சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னாலும் அந்த ருசி மனதில் வர, நாவில் எச்சில் ஊறுகிறதென்றால் அந்த ருசிக்கு வேறு அத்தாட்சி வேண்டுமா என்ன?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டாமையின் மண்டகப்படி. இறுதி நாளில், அம்மன் ஊர் எங்கும் வீதியுலா வருவார். ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய் உடைத்து அம்மனை வணங்குவார்கள்.

அன்ன மடம் என்பது சிறுத்தொண்ட நாயனார் ஞாபகமாகச் செயல்படும் கோயில்.

வல்லம்பர் தெருவாசிகளே இதன் நிர்வாகிகள்.ஆண்டிற்கொரு முறை தவறாது விழா நடத்துவார்கள்.இந்த விழாவின் சிறப்பம்சம் ஏழைகளுக்கும், சாமியார்களுக்கும், பரதேசிகளுக்கும் மதியம் அறுசுவை உணவுடன், வஸ்திரங்களும் வழங்குவதாகும்.

மார்கழி பெருந்தேர் திருவிழா

இதற்கென, இரண்டு மாதங்கள் முன்பிலிருந்தே ஊரெங்கும் வீடு வீடாகப்போய் அரிசி கலெக்ட் செய்வார்கள். மதியச்சாப்பாட்டிற்கு முன்னர், பிடாரி குளத்தில் காவடி எடுத்துக் கோயிலுக்கு வந்ததும், அபிஷேகம் நடைபெறும். உடன் விருந்து நடைபெறும். இரவில் அதிகமாக பக்தி நாடகங்கள் நடைபெறும். பெரும்பாலும் மூன்று இரவுகள் அந்த நாடகங்கள் நடைபெறும். புதுக் கோட்டையிலிருந்து நாடகக் கம்பெனி வந்து நாடகம் நடத்துவார்கள்.

ஐயனார் கோயிலுக்கு ஆண்டில் ஒருமுறை சிறப்பான பூஜை நடத்தப்படும். இது மட்டும் ஆண்களுக்கு மட்டுமே. ஊரிலிருந்து 2 கி.மீ., தள்ளி, ஆற்றங்கரையில் தனித்திருக்கும் ஐயனார் கோயிலின் அடையாளம், பெருந்திடலில் இரண்டு மரங்கள் மட்டுமே. ஊறவைத்த பச்சரியில், தேங்காய், வெல்லம் கலந்து பூசாரி வைத்துவிட்டு, அந்த ஏரியாவே மணப்பதுபோல் சாம்பிராணி போடுவார். வாழை, மா, பலா என்று அத்தனை கனிகளும் பூசையில் இடம் பெற்றிருக்கும். சாமி கும்பிட்டு விட்டுப் படையலிட்டதைச் சாப்பிடுவோம். படையலிட்டவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்லவோ, பெண்கள் சாப்பிடவோ கூடாது. ஊரின் காவல் தெய்வம் ஐயனார்தான் என்பது எல்லோரின் முழு நம்பிக்கை.

ஊரிலுள்ள மாடுகள் தொடர்ந்து திருட்டுப்போனபோது, ஐயனாரின் திடலில் கட்டி விட்டு, அவரை வேண்டியபடி மக்கள் வீடுகளுக்குச் சென்று விட்டதாகவும், திருட வந்தவர்கள் பார்வையிழந்து பிடிபட்டதாகவும், ஐயனாரைப்பற்றிய கதை உண்டு. கோயில் பாம்பொன்று வயல்களில் சுற்றி வருவதை, வெள்ளிக்கிழமைகளில் நானும் பார்த்திருக்கிறேன். ஐயனாருக்கு விழா எடுக்கும் நாட்களில், பிடாரி குளத்திற்கு அருகிலும், தாமரைக் குளத்திற்குப் பக்கத்திலுள்ள முனிகளுக்கும் சிறப்புச் செய்வதுண்டு!

திருவிழா

ஒவ்வொரு திருவிழாவின்போதும் உறவினர்கள் வருவதால் வீடுகள் களைகட்டும்.

திருவிழாக் கோயில்களைச் சுற்றி திடீர் டீக்கடைகளும்,கலர் - சோடா கடைகளும், வளையல் மற்றும் பிற பொருட்கள் கடைகளும் வந்து விடும். வெள்ளைத் துணி போர்த்திய ரேக்குகளில் சோடா-கலர்களை அடுக்கி ‘லைட் ‘ போட்டதும், அதனைப் பார்க்கவே அழகாக இருக்கும்.ஒரு நாள் திருவிழாக்களில், நடமாடும் ஸ்வீட் ஸ்டால்கள் சிறப்புப்பெறும். நான்கு சக்கர வண்டியில் கண்ணாடிகளால் அடைக்கப்பட்ட தட்டுகளில் பட்சணங்களை விற்பார்கள். பஞ்சு மிட்டாய்காரர்கள் ரோஸ் கலர் பஞ்சுமிட்டாய்களுடன் வலம் வருவார்கள். அப்பொழுதெல்லாம் ‘சேவு’ என்றொரு ஸ்வீட் ரொம்பவும் பிரசித்தம். எல்லாத் திருவிழாவின் போதும் சிங்காரு கொட்டை புரட்டுவார். இளைஞர் கூட்டத்தை அங்கு அதிகம் காணலாம்.

திருவிழா நடைபெறும்போது சடுகுடு போட்டிகளும் நடைபெற, ஊரே ஓர் அமர்க்களத்தில் அல்லாடும்.

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-village-festivals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக