கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், ஓசூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் பிரகாஷ். இவருடைய 24 வயதான மகன் கருணாசாகரும் அவருடைய நண்பர்கள் 7 பேரும் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு ஓசூருக்கு காரில் திரும்பியுள்ளனர். சுமார் 2 மணியளவில் கார் பெங்களூரு கோரமங்கலா அருகே வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை மீறிய கார் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டிருக்கிறது.
Also Read: கள்ளக்குறிச்சி: கார் - பேருந்து மோதி கோர விபத்து... சுற்றுலா சென்று திரும்பிய 6 பேர் பலியான சோகம்!
இதில், காரிலிருந்த கருணாசாகர் உள்ளிட்ட ஏழு பேரும் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். காரில் கருணாசாகர் உட்பட நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் இருந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்கையில், அதிவேகமாக வந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பிலும், மரத்திலும் மோதி தூக்கிவீசப்பட்டது தெரிகிறது.
அதிவேகமாகக் காரை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், காரில் இருந்தவர்கள் யாரும் சீட் பெல்ட் அணியாததால், ஏர்பேக் திறக்காமல் போயிருக்கிறது. இந்த விபத்து குறித்து ஆடுகொடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விபத்து எப்படி நடந்தது... காரை ஓட்டியது யார் என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.
எம்.எல்.ஏ பிரகாஷின் மனைவி சிவம்மா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்தான் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள்ளாக, சாலை விபத்தில் மகனையும் பறிகொடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ். இது அவரையும், அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/accident/hosur-mlas-son-died-in-an-accident-at-bengaluru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக