Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

மதுரை பாலம் விபத்து: பணிகள் நிறுத்தம்.. அஜாக்கிரதை காரணமா?! - 3 பேர் மீது வழக்கு பதிவு

மதுரையில் கட்டப்பட்டு வந்த பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலம் வேலைகள் நிறுத்தப்பட்டு மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலம் விபத்து

சென்னை செல்லும் தூரத்தை குறைப்பதற்காக மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரை 35 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 1,028 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 முதல் செயல்படுத்தி வருகிறது. இது பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.

இத்திட்டத்தில் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரையிலான 7.5 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணி 612 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

7.5 கிலோமீட்டர் தூரத்துக்கு 225 தூண்களுடன் அமைக்கப்படும் இப்பாலம் தமிழகத்திலயே இரண்டாவது நீளமான பாலம் என்று சொல்லப்பட்டது.

கடந்த 29-ம் தேதி மாலை நாகனாகுளம் பேங்க் காலனி அருகே பாலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்றபோது, ஹைட்ராலிக் கிரேன் மூலம் இரண்டு தூண்களை இணைக்கும் பணி நடந்தபோது எந்திரம் பழுதாகி விழ, அதனால் சிமெண்ட் கர்டரும் கீழே விழுந்தது. அதில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆகாஷ் சிங், சுராஜ்குமார் மாட்டிக்கொண்டதில் ஆகாஷ் சிங் மரணமடைந்தார். தொழிலாளர்கள் குறைவாக பணியாற்றியதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

பாலத்தின் ஒருபகுதி கீழே விழுந்தபோது பயங்கரமான சத்தம் எழுந்ததால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாலம் வேலை தொடங்கிய நாளிலிருந்து தரமில்லாமலும், அலட்சியமாகவும் வேலை நடப்பதாக மக்கள் புகார் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய டெக்னாலஜியில் கட்டப்பட்டு வரும் இப்பாலம் மீது அச்சம் கொண்டுள்ளனர்.

Also Read: மதுரை: புதிதாகக் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து! - ஒருவர் பலி

விபத்து ஏற்பட்ட தகவல் தெரிந்தவுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு.வெங்கடேசன் உட்பட கலெக்டர், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கலெக்டர் அனீஷ் சேகர், "விபத்து நடந்துள்ளதால் கட்டுமானப்பணி நிறுத்தப்படுகிறது. ஒப்பந்ததாரரிடமும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின் வேலைகள் நடக்க அனுமதிக்கப்படும்" என்றார்.

கலெக்டர் அனீஷ் சேகர்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "மேம்பால கட்டுமான பணி விபத்தில் தொழிலாளி ஒருவர் இறந்த செய்தி மிகவும் துயரமானது. இந்த வேலை நடந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் மட்டுமே அங்கே பணியில் இருந்ததாக அதிகாரிகள்
கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது.

மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியதுதான் விபத்துக்கு காரணமா என்ற கேள்வி எழுகிறது. அது மட்டுமில்லாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
இதை கலெக்டர் முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றார்.

இச்சம்பவத்தை ஆய்வு செய்ய வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "அடுத்த ஆண்டு பணிகள் முடிவடைய உள்ள நிலையில் ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது. பொதுவாக விபத்து தவிரக்கப்பட வேண்டியது.

கர்டரை இணைக்கும்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுதடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 160 டன் கர்டரை தூக்கி நிறுத்த எடை குறைவான ஹைட்ராலிக் இயந்திரம் பயன்படுத்தபட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர்

பணி நடக்கும் இடத்தில் மேற்பார்வை பொறியாளர் இல்லை. சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இதைப்பற்றி என்.ஐ.டி தொழில் நுட்ப நிபுணரால் விசாரணை நடத்தப்படும். இனிமேல் பாலம், சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் லாக் ஷீட் முறையை நடைமுறைப்படுத்த உள்ளோம். மக்களின் பாதுகாப்பு முக்கியமானது. இறந்த தொழிலாளிக்கு நிதி உதவி பற்றி முதலைமைச்சர் அறிவிப்பார்" என்றார்.

Also Read: சத்தியமங்கலம்: கட்டப்படாத பாலம்; மனைவியின் சடலத்தைச் சுமந்தபடி மாயாற்றைக் கடந்த கணவன்!

இந்த நிலையில் காவல்துறை விசாரணை நடத்தியதில் அஜாக்கிரதையாக எந்திரங்களை கையாண்டது, விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக ஜே.எம்.சி கட்டுமான நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார், பொறியாளர் ஜிதேந்தர் வர்மா, எந்திர ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-madurai-bridge-accident-issue-case-flied-against-three

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக