Ad

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

மத்திய அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்ட மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்!

மகாராஷ்டிரா அரசியலில் முன்னாள் முதல்வர் நாராயண் ராணே மத்திய அமைச்சராக்கப்பட்டதில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. சமீபத்தில் மும்பையில் ராணே நடத்திய யாத்திரையால் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதோடு ராணே கைது செய்யப்பட்டு ஒரே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ராணேயை கைது செய்ய மகாராஷ்டிரா சிவசேனா அமைச்சர் அனில் பரப் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியதோடு, அது குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இதையயடுத்து இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் பரப்பிற்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள்.

நாராயண் ராணே

இது குறித்து சிவசேனா போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப் கூறுகையில், ``அமலாக்கத்த்துறை அதிகாரிகள் நான் வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். என்ன வழக்கு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனக்கும் என்ன வழக்கில் என்னை அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நோட்டீஸ் குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. முழுமையாக படித்த பிறகு தான் கருத்து தெரிவிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Also Read: மகாராஷ்டிரா: `அதிரடி கைது... ஜாமீன்’ - நீதிமன்ற உத்தரவால் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட மத்திய அமைச்சர்

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், ``ராணே யாத்திரையை முடித்துக்கொண்டவுடன் அனில் பரப்பிற்கு சம்மன் அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்ததுதான். ரத்னகிரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் அனில் பரப்பிற்கு அனுப்பப்பட்டு இருக்கும் நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார். அனில் பரப் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய ஆலோசகர் ஆவார். அடுத்த சில மாதங்களில் மும்பையில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் அனில் பரப் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறார். அதனை தடுத்து நிறுத்த அனில் பரப் மீது நடவடிக்கை பாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

சஞ்சய் ராவத்

அனில் பரப் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான நடவடிக்கையை அமலாக்கத்துறை தாமதப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுக்கப்பட்டுவிட்டாரா என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/shiv-sena-minister-summoned-by-law-enforcement-after-ordering-arrest-of-union-minister-narayan-rane

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக